டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று புதிய வரலாறு படைத்ததில் இந்திய ராணுவத்தின் அளப்பரிய பங்கு இருக்கிறது. நிதி முதல் பதவி வரை அவருக்கு உரியதை உரிய நேரத்தில் தந்ததே இந்தியாவின் தங்கமகன் உருவெடுக்க உறுதுணைபுரிந்துள்ளது.
மக்களை எப்போதும் பாதுகாப்பாக உணரவைக்கும் நமது இந்திய ராணுவம், விளையாட்டிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறது. உலகளாவிய அரங்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய சில சிறந்த விளையாட்டு வீரர்களையும் உருவாக்கி இருக்கிறது நமது ராணுவம். இந்திய ராணுவம் பல ஆண்டுகளாக விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. குறிப்பாக தடகள வீரர்களுக்கு நிறைய உதவி இருக்கிறது. மில்கா சிங், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், விஜய்குமார் போன்றோர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துகொண்டு அதேநேரம் ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்தி இருக்கின்றனர்.
இவர்கள் வரிசையில் லேட்டஸ்ட் வரவு இன்று இந்தியாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்து, இந்தியாவின் தங்க மகனாக மாறியிருக்கும் நீரஜ் சோப்ரா. இந்தமுறை இந்திய ராணுவத்தில் இருந்து ஒலிம்பிக்கிற்கு ஏராளமான விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். 3000 மீட்டர் தடை ஓட்டத்தில் சமீபத்தில் ஒரு புதிய தேசிய சாதனையை படைத்த ஜவான் அவினாஷ், இதேபோல், 20 கிமீ ரேஸ் வாக் இறுதிப் போட்டியில் 23-வது இடத்தைப் பிடித்திருந்த சுபேதார் சந்தீப் குமார் ஆகியோர் ஏற்கெனவே விளையாடி இருந்தனர். இவர்களை அடுத்து இன்று நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ஈட்டி எறிதலில் இந்தியாவின் முதல் ஜூனியர் உலக சாம்பியன் என்ற பெருமைக்குரிய நீரஜ் சோப்ரா, இந்திய ராணுவத்தில் 2016 ஆம் ஆண்டில் இணைந்தார். வழக்கமாக, ராணுவம் விளையாட்டு வீரர்களை இணைத்துக்கொள்ளும்போது அவர்களை பெரிய பதவிகளில் அமரவைக்காது. ஹவில்தார் போன்ற பதவிகளில் அமரவைப்பது மிகவும் அரிதான ஒன்று. ஆனால், இளம்வயதிலேயே நீரஜ் விளையாட்டில் காண்பித்த தனிப்பட்ட திறன் காரணமாக, இளநிலை ஆணையர் (JCO) அந்தஸ்து கொண்ட நயிப் சுபேதார் பதவி கொடுத்தது.
இந்த பதவி நீரஜிற்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய உதவியாக அமைந்தது. ஏனெனில், 2016 காலகட்டத்தில் பயிற்சிகளில் ஈடுபட நிதி ரீதியாக இன்னல்களை சந்தித்து வந்தார் நீரஜ். அப்போது இந்திய ராணுவத்துக்கு அவர் அழைக்கப்பட்டதால், தனது குடும்பத்திற்கு நிதி ரீதியாக உதவ முடிந்தது மட்டுமில்லாமல், தனது பயிற்சியையும் தீவிரமாக மேற்கொள்ள முடிந்தது. இந்திய ராணுவத்தில் சேர்ந்த பிறகுதான் நீரஜ், 2018-ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று புதிய உச்சத்தை எட்டினார்.
அதே ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அடுத்தடுத்த உயரங்களுக்குச் சென்ற அவருக்கு 2018-இல் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. தற்போது நீரஜ் தங்கம் வென்றதை அடுத்து இந்திய ராணுவ வீரர்கள் இதனை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்திய ராணுவமும் தனது வலைப்பக்கத்தில் அவரை வெகுவாக வாழ்த்தி இருக்கிறது.