கொரோனா பாதிப்பால் நாடே முடங்கி போயிருக்கிறது. இந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பொது முடக்கத்தால் பல்வேறு மத விழாக்கள் தடைபட்டு போயிருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் கோயில்களும், தேவாலயங்களும், பள்ளி வாசல்களும் மூடப்பட்டு இருக்கின்றன. ஒரு மதம் சம்பந்தப்பட்ட விழா என்றால் அது தொடர்புடைய பல்வேறு தரப்பினர் பொதுவாக வியாபாரம் மூலமாக பயனடைவார்கள். அப்படிப்பட்ட ஒரு விழாதான் விநாயகர் சதுர்த்தி. நாடு முழுவதுமே விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 22 -ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது.
கொரோனா பொது முடக்கத்தால் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மிக முக்கியமாக விநாயகர் சிலை தயாரிப்பில் ஆண்டாண்டு காலமாக ஈடுபட்டு வரும் குயவர்களின் வாழ்வில், கொரோனா பெரும் பாதிப்பை இந்தாண்டு ஏற்படுத்தியுள்ளது என்பதே நிஜம். தமிழகத்தை பொருத்தவரை பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக சிலைகள் செய்யப்படுவதுண்டு. அதில் சென்னை மாநகரில் புரசைவாக்கம் பகுதிக்கு அடுத்து இருக்கும் கொசப்பேட்டை (குயவர்கள் பேட்டை) பகுதியில் விநாயகர் சிலைக்கு மிகவும் பெயர் பெற்றது. ஆனால் இந்தாண்டு கொரோனா பாதிப்பால் கொசப்பேட்டை களையிழந்து காணப்படுகிறது.
இப்போது கொசப்பேடைட பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி என்றால் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே கொசப்பேட்டை பகுதியினர் சிலை தயாரிப்பு பணியை தொடங்கி விடுவார்கள். சின்ன விநாயகர் சிலை முதல் 10 அடி உயரம் கொண்ட சிலை வரை முன்பு கொசப்பேட்டையில் செய்யப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒரு குடும்பம் 500 சிலைகள் வரை செய்துக்கொண்டு இருந்தது. ஆனால் இப்போது இந்த சிலை தயாரிப்பு பணி கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்துவிட்டது என்றும் இந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக முற்றிலும் சிலை தயாரிப்பு பணிகள் முடங்கியுள்ளதாக குயவர்கள் கூறுகிறார்கள்.
விநாயகர் தவிர்த்து கிருஷ்ணர், ராமர், முருகர் என்று பல்வேறு கடவுள்களின் பொம்மைகளைக் குடிசைத் தொழிலாகச் செய்து வருகின்றனர். கொசப்பேட்டையில் செய்யப்படும் சிலைகள் ஆந்திரம், கர்நாடகா, ஒடிசா மாநிலத்துக்கு கூட அனுப்பி வைக்கப்படுவதுண்டு. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அங்கிருந்து இங்கு சிலைகளை வாங்கி விற்பனை செய்யும் சூழல் நிலவுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழலைப் பாதிக்கும் கலவைகள் கொண்டு சிலைகள் செய்வதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடைவிதித்தது. இதனையடுத்து பலரும் இந்தத் தொழிலைவிட்டு சென்றுவிட்டனர். இப்போது எஞ்சியிருக்கும் சிலர் தொடர்ந்து இந்தத் தொழிலை விடாமல் செய்து வந்த நிலையில் அவர்கள் வாழ்க்கையிலும் கொரோனா இடி இடித்திருக்கிறது.
இது குறித்து கடந்த 25 ஆண்டுகளாக சிலைதயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அர்ஜூனனிடம் பேசினோம், அவர் "கடந்த 3 வருஷமாகவே சிலை தயாரிப்பு பணியில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால் பெரிய சிலைகள் எதையும் செய்யவில்லை. பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டால் பெரிய சிலைகளை காட்சிப்படுத்த முடியாது. ஒருவேளை பொது முடக்கம் தளர்த்தப்பட்டால் குறுகிய காலத்தில் வரும் ஆர்டரின் பெயரில் சிலைகளை செய்ய முயற்சிப்போம். அதுவரை மக்கள் வீடுகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வழிப்படுவதற்கு வாங்கும் விநாயகரை மட்டும் செய்ய உத்தேசித்துள்ளோம். கொரோனா பாதிப்பு எங்களையும் விட்டுவைக்கவில்லை" என சோகத்துடன் முடித்தார்.