இன்றும் கூட பலர் அம்மியில் அரைத்த துவையலை ருசித்து சாப்பிடுகிறார்கள். அம்மியில் அரைத்து செய்யப்படும் சட்னியாக இருந்தால் இட்லியோ தோசையோ நாம் வழக்கமான சாப்பிடும் எண்ணிக்கையை விட கூடுதலாக ஒன்று உள்ளே இறங்கும். அம்மியில் அரைப்பது இப்போதெல்லாம் சாத்தியம் இல்லாத விஷயமாகிவிட்டது. ஒருநாள் என்றாவது வீட்டில் இருக்கும் பெண்கள் மனது வைத்தால் அம்மியில் அரைத்த துவையலை செய்யலாம்; சமையலையும் ருசிக்கலாம். ஆனால் இதையே வழக்கமாக கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறி. அம்மியில் அரைத்து சமைப்பதற்கு எல்லாம் ஏது நேரம் என்று கேட்கிறார்கள்?
நேரம் இருத்தால்கூட அம்மியில் அரைக்க பலரும் விரும்புவதில்லை, அதுதான் உண்மை. நம் உடல் ஒத்துழைக்காது; மெனக்கெட பிடிக்காது. இதைபோன்ற விஷயங்கள்தான் அம்மி கல்லிடமிருந்து நம்மை தள்ளி வைக்கிறது. அதிலும் இப்போதிருக்கும் இளம் பெண்களுக்கு அம்மி குழவியை உருட்டும் வாய்ப்பே கிடைத்திருக்காது (இதில் சிலர் விதிவிலக்காக இருக்கலாம்!). அவர்களுக்கு நேரம் இருந்தால் மட்டும் அம்மியை தேட போகிறார்களா என்ன? ஆனால் கிராமப்புறங்களில் அம்மிகள் இன்றும் இருக்கின்றன. தூக்கிப்போட மனமில்லாமல் ஓரங்கட்டப்பட்டு யாராவது என்னை உருட்டி விளையாட மாட்டீர்களா!? என்று கேட்பது போல அநாதையாக கிடக்கும் அம்மிகளை நாம் பார்த்திருப்போம்…!
அப்படியே என்றாவது ஒருநாள் கரண்ட் போய்விட்டால் கூட அம்மியை கண்டுக்கொள்ளும் வீடுகள் சொற்பம்தான். சுவிட்ச் போட்டால் சில நொடிகளில் அரைத்து கொடுக்கும் மிக்ஸி பெண்களுக்கும் சமைக்கக் கூடிய ஆண்களுக்கும் வரபிரசாதம். அது வருகை தந்த நாள் முதல் அம்மிக்கும் அடுப்பங்கறைக்கும் உள்ள இடைவெளி அதிகமானது. சமைக்கும் நேரம் மிச்சம், உடற்சோர்வின்மை போன்ற விஷயங்களில் மிக்ஸிக்கு நிகர் மிக்ஸி தான் என்றாலும்,அம்மியின் மதிப்பை நாம் குறைத்து பேச முடியாது.
வைரமுத்து, அவருடைய கவிதையில் இப்படி சொல்லியிருப்பார்: “கொத்தமல்லி வறுத்து வச்சி, குறுமிளகாய் இரண்டு வச்சி, சீரகமும் சிறுமிளகும், சேத்து வச்சு நீர் தெளிச்சு.. கொழகொழன்னு வழிக்கயில, அம்மி மணக்கும், அடுத்த தெரு மணமணக்கும்” - இந்த வரிகளில் உள்ளது போல அம்மியில் அரைக்கும் போது அதன் வாசம் தனிதான்.
அம்மியில் அரைத்த மிளகாய் பொடி என்றால் அதன் வாசமே பசியை தூண்டும். சற்று குனிந்து நிமிர்ந்து… உருளையை உருட்டி அரைத்து… அதை செங்குத்தாக பிடித்து வழிச்சு எடுக்கும் துவையலின் ருசியையும் மசாலாவின் வாசத்தையும் எவ்வளவு பெரிய உயர்தர மிக்சியாலும் தர முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை !
மருதாணி முதல் மருந்து வரை நாம் பார்த்து பார்த்து அரைத்த அம்மியில் காலத்தின் வேகத்தாலும் மாற்றத்தாலும் அதில் அரைப்பதே இல்லாமல் போய்விட்டது.
ஆனால்…!
இந்த நிலை இப்படியே இருந்து விடாது என்பதற்கு உதாரணமாக சில விஷயங்களை நம்மால் பார்க்க முடிகிறது. அம்மி கல்லை அமெரிக்கா போன்ற நாடுகளிலுள்ள் வெளிநாட்டவர்கள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் வெளிநாடு வாழ் இந்தியர்களும் சிலர் இருக்கிறார்கள் என்பது ஆறுதலான விஷயமே !
ஆன்லைனில் அம்மிகள் விற்பனைக்கு வந்திருப்பது ஆச்சரியம் அல்ல! நம் வீட்டு அடுப்பங்கறைகள் அம்மிக்கு அனுமதி மறுத்து விட்ட நிலையில் அயல் நாடுகள் அம்மி கல்லுக்கு ஆர்வம் காட்டுவதுதான் ஆச்சரியம்!
(ஞாபகம் வருதே தொடரும்…)