ராகுலின் கருத்து 7 பேரின் விடுதலைக்கான விடையா ?

ராகுலின் கருத்து 7 பேரின் விடுதலைக்கான விடையா ?
ராகுலின் கருத்து 7 பேரின் விடுதலைக்கான விடையா ?
Published on

ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளது, சிறையில் உள்ள 7 பேரின் விடுதலைக்கு வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதுதான் இந்த வழக்கில் மிகப்பெரிய மாற்றம். மீதமுள்ள ஒரே ஒரு அம்சம் என்னவென்றால், ‘அரசுகள் விரும்பினால் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 432, 433 ஆகியவற்றின்படி இவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கலாம்’ என உச்சநீதிமன்றம்  ஆலோசனை வழங்கியிருந்ததுதான்.

ஆனால், ஜெயலலிதா தலைமையிலான அரசு அதற்காக முயற்சிகளை கொண்டு சென்றபோது, மத்திய அரசு மீண்டும் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. தற்போது உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்ற அளவில்தான் உள்ளது. எப்பொழுது இந்த வழக்கில் வெளிச்சம் பிறக்கும் என சிறையில் தங்கள் காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் 7 பேரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். 

இப்படியான ஒரு சூழலில்தான், ராகுல் காந்தி யாரும் எதிர்பாராத கருத்துக்களை சொல்லியிருக்கிறார். ராகுல் காந்தியின் கருத்துக்கள் எல்லோரையும் ஒரு வகையில் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது உண்மைதான். அதனால்தான் உடனடியாக அவரது கருத்துக்களுக்கு வரவேற்பு பெருகுகிறது. சிங்கப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் இதுகுறித்து பேசிய ராகுல், “எனது தந்தையை கொலை செய்தவா்கள் மீது நானும், சகோதரி பிரியங்கா காந்தியும் மிகுந்த கோபத்தில் இருந்தோம். அந்த வேதனையில் இருந்து மீள்வதற்கு நாங்கள் மிகுந்த காலம் எடுத்துக் கொண்டோம். ஆனால் அவா்களை தற்போது முழுமையாக மன்னித்து விட்டோம். இருவரின் கொலைச் சம்பவங்களிலும் யாரையும் வெறுக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவெத்துள்ளோம்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.

‘என்னுடன் பாட்மின்டன் விளையாடியவா்களே எங்கள் பாட்டி இந்திரா காந்தியை 1984-இல் கொலை செய்தனா். எனது தந்தை கொலை செய்யப்பட்ட பின்னா், எனக்கான பாதுகாப்பு சூழலே மாறி விட்டது. காலை, பகல், இரவு என எந்த நேரமும் 15 போ் சூழ்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்” என்றார் ராகுல். அதோடு மட்டும் நின்றுவிடாமல், “2009ம் ஆண்டு பிரபாகரன் கொலை செய்யப்பட்டதை தொலைக்காட்சியில் பார்த்தேன். அதனை பார்த்த எனக்கு அவரது குடும்பத்தின் நிலை குறித்த வருத்தம் ஏற்பட்டது. அவரை ஏன் இவ்வாறு அவமானப் படுத்துகிறார்கள் என்று வேதனை அடைந்தேன். எதற்காக இலங்கை அரசு அவ்வாறு நடந்து கொண்டது என்று எனக்கு புாரியவில்லை” என்ற கருத்தையும் அவர் கூறியிருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

ராகுல் காந்தி பேசிய செய்தி பத்திரிக்கைகளில், தொலைக்காட்சிகளில் வெளியாகிய சில மணி நேரங்களிலே பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். திமுகவின் செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், “ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் குறித்த ராகுல் காந்தியின் கருத்து ஆறுதல் அளிக்கிறது. ஈழத்தமிழர் வாழ்வில் அக்கறை காட்டும் கட்சிகள் ராகுலின் கருத்தை வரவேற்கும். தேர்தல் கூட்டணியாக ராகுல் காந்தி இந்த கருத்தை கூறியுள்ளார் என கூறமுடியாது” என தெரிவித்தார். ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது என்று கூறியுள்ள வைகோ, ‘ராகுல் காந்தி கொலையாளிகள் என கூறுவது தவறு, அது புனையப்பட்ட வழக்கு’ என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ‘ராஜீவ் கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல் கூறியது மனிதநேயம்; 7 பேர் விடுதலை தொடர்பாக நாம் கேட்பது சட்டத்தின் தளர்வு’ என்று தெரிவித்து இருக்கிறார். ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியிருக்கிறார். அதோடு, ராகுல் கருத்து சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய உதவும் என நம்புகிறேன் என்ற தனது நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு என்ன சொல்லப்போகிறது என்ற கருத்தின் மீது எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், சட்டத்தில் வழிவகை இருந்தால் ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க நடவடிக்கை என முதலமைச்சர் பழனிசாமி கூறி ஒரே வரியில் முடித்துவிட்டார். மன்னித்துவிட்டேன் என்று கூறுவது மட்டும் போதுமானது அல்ல, 7 பேரை விடுதலை செய்யக் கோரி ராகுல் பரிந்துரை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளது அடுத்தக்கட்டத்திற்கான எதிர்ப்பார்ப்பாக உள்ளது.  

அரசியல் கட்சிகளை தாண்டி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் கருத்து இதில் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘ராஜீவ்கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறியிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு ராகுல்காந்தி இவ்வாறு சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது. ராகுலின் கருத்தை அடிப்படையாக கொண்டு மத்திய அரசுடன் தமிழக அரசு பேசி சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கையோடு தனது வரவேற்பை பதிவு செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ராகுலின் கருத்து ஏன் முக்கியம் என்றால், 2016 ஆம் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 7 பேரின் விடுதலைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றிய போது, அதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. அந்த நேரத்தில்,‘இது அரசாங்கத்தின் முடிவு, இந்தப் பிரச்சனையில் எனது தனிப்பட்ட முடிவினை தெரிவிக்க முடியாது. கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு நான் உடன்பட வேண்டும்’ என்று ராகுல் காந்தி கூறியிருந்தார். ஆனால், தற்போது ராகுல் காந்தி வெளிப்படையாக பல்வேறு கருத்துக்களை மனம் திறந்து பேசியுள்ளார். அவரது உரையாடலில் உருக்கமான தொனி இருந்ததாக அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள். இதனால், 7 பேரின் விடுதலையில் விரைவில் ஒரு நல்ல மாற்றம் வரும் என்று நிச்சயம் நம்புவோம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com