இடுக்கி அணை அமைய காரணமாக இருந்த பழங்குடிகள்.. சுவாரஸ்யமான பின்னணி கதை!

இடுக்கி அணை அமைய காரணமாக இருந்த பழங்குடிகள்.. சுவாரஸ்யமான பின்னணி கதை!
இடுக்கி அணை அமைய காரணமாக இருந்த பழங்குடிகள்.. சுவாரஸ்யமான பின்னணி கதை!
Published on

கேரளா... எழுத்தில் வர்ணிக்க முடியாத ஆசீர்வாதமான அழகு பூமி. பிரமிப்பூட்டும் இயற்கை, பரிசுத்தமான சூழல், பரவசமூட்டும் கலாச்சாரம் என பிரத்தியேக அடையாளங்களுடன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது கேரளா. ‘மிஸ்’ பண்ணாமல் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள் எக்கச்சக்கம். அவற்றில் முக்கியமானது இடுக்கி அணை. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அணைக்கு பின்னால் ஓர் சுவாரஸ்யமான ஃப்ளாஷ்பேக் உண்டு. 

1900, ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் அது. இடுக்கி மாவட்டம் செருதொனி என்கிற மலைக்கிராமத்தில் பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். இந்த மக்கள் தினமும் தாங்கள் வசிக்கும் குறவன் மலையிலிருந்து, எதிர்புறமுள்ள குறத்தி மலைக்கு சென்று தேன், மூலிகைகளை சேகரித்து வருவது வழக்கம். குறத்தி மலைக்கு செல்ல ஒரு பெரிய நதியை கடந்து செல்ல வேண்டும். கேரளாவிலேயே இரண்டாவது பெரிய நதி அது. 

இதற்கிடையே, சில பழங்குடிகள் ஆங்கிலேய அதிகாரிகளுக்கு வழிகாட்டிகளாக இருந்து வந்தனர். அவர்களில் கொலும்பன் என்ற பழங்குடி, ஆங்கிலேய அதிகாரிகளுக்கு நன்கு பரிட்சயமானவர். ஜான் என்ற ஆங்கிலேயருக்கு வெகுநாளாக வழிகாட்டியாக இருந்து வந்தார் கொலும்பன்.

ஒரு தென்மேற்குப் பருவமழைக் காலம் அது. வழக்கம்போல் குறத்தி மலைக்கு வன மகசூல் சேகரிக்க சென்ற கொலும்பன், அன்று பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளப்பெருக்கால் குறத்தி மலையில் சிக்கிக்கொண்டார். மூன்று நாட்களாகியும் கொலும்பனால் நதியை கடக்க முடியவில்லை. தனது கணவர் என்ன ஆனாரோ, எங்கு இருக்கிறாரோ என தவித்த வந்த கொலும்பனின் மனைவி, ஆங்கிலேயர் ஜானிடம் தனது கணவர் காணாமல் போனது குறித்து தகவல் கூறினார்.

உடனே ஜான் சில பழங்குடிகளை அழைத்துக் கொண்டு கொலும்பனை தேடச் சென்றார். அங்கே வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரைப்பகுதியில் தவித்துக் கொண்டிருந்த கொலும்பனை மீட்டு அழைத்து வந்த ஜான், ‘என்ன நடந்தது’ எனக் கேட்டுள்ளார். நடந்ததை சொன்ன கொலும்பன், ‘குறவன், குறத்தி மலைகளுக்கு இடையே ஒரு பாலத்தை கட்டினால் வெள்ளப்பெருக்கில் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். பாலம் கட்ட முடியுமா?’ என கேட்டு இருக்கிறார். 

உடனே ஜான், பொறியாளரான தனது சகோதரர் மார்க்கை குறத்தி மலைக்கு அழைத்துச் சென்று, ‘இந்த இடத்தில் பாலம் கட்ட முடியுமா’ என ஆய்வு செய்து கூறுமாறு கேட்டுள்ளார். இரண்டு மலைகளுக்கு இடையே ஓடும் அந்த பெரிய நதியையும் காண்பித்துள்ளார்.

இதைப் பார்த்த மார்க், புதிதாக ஒரு யோசனையை ஜானிடம் சொன்னார். ‘இரண்டு மலைகளுக்கு இடையே பாலம் கட்டுவதற்கு பதிலாக, இரண்டு மலைகளையும் இணைத்து அணை கட்டினால், மலையிலிருந்து பாய்ந்துவரும் ஆற்றுநீரை தடுத்து நிறுத்தி தண்ணீரை சேமிக்கலாம்; மின் உற்பத்தியும் செய்ய முடியும்’ என கூறியுள்ளார். 

1937-இல் குறத்தி மலையில் அணை கட்டும் சாத்தியம் பற்றி திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் ஜான் தெரிவித்தார். அணை கட்டுவது குறித்த வரைபடம் மற்றும் திட்ட அறிக்கையை தயார் செய்து சமஸ்தானத்திடம் சமர்ப்பித்தார் மார்க். ஆனால் அணை கட்டும் திட்டத்தை கிடப்பில் போட்டது சமஸ்தானம். 

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு, குறவன் - குறத்தி மலைகளுக்கிடையே அணை கட்டுவது பற்றிய பேச்சு மீண்டும் எழுந்தது. 1963-இல் அணை கட்டும் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டின. அதனையடுத்து, 107.5 கோடி ரூபாய் செலவில், 1969-ஆம் ஆண்டு அணைக்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 1973-ஆம் ஆண்டு இடுக்கி அணை கட்டி முடிக்கப்பட்டது. குறவன்-குறத்தி மலைகளை இணைப்பதற்காக வில் போன்ற வளைவு வடிவில் தடுப்பு கட்டப்பட்டுள்ளது. மார்க் சமர்ப்பித்த வரைபடம் மற்றும் திட்ட அறிக்கையின்படியே இந்த அணை பிரம்மாண்டமாக கட்டப்பட்டது.

அணையை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இடுக்கி அணை உருவாகக் காரணமாக இருந்த கொலும்பனுக்கு அணை அருகிலேயே சிமெண்டால் ஆன சிலையை அமைத்தது கேரள அரசு. தற்போது சிமெண்ட் சிலையை அகற்றிவிட்டு ரூ.70 லட்சத்தில், கொலும்பனுக்கு வெண்கல சிலை நிறுவியுள்ளது.  

1,200 அடி நீளம், 555 அடி உயரம் கொண்ட இடுக்கி அணை, ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய அணை ஆகும். இந்த அணையில் இருந்து தினசரி 780 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கேரளாவின் 50 சதவீத மின் உற்பத்தியை இடுக்கி அணையே பூர்த்தி செய்கிறது. இதனால், அணை எப்போதும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும்.

பாதுகாப்பு கருதி, இடுக்கி அணையை சுற்றிப் பார்க்க நீண்ட காலமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. சமீப காலத்தில்தான் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஓணம் ஆகிய பண்டிகை நாட்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது சனி, ஞாயிறு ஆகிய வார விடுமுறை நாட்களிலும் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகி்ன்றனர்.  காலை 9:30 முதல் மாலை 5 மணி வரை அணையை காணலாம். பேட்டரி கார் வசதியும் உண்டு.

இடுக்கி அணை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் தீவிர சோதனைக்கு பிறகே அணையை பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். நுழைவு வாயில் பகுதியில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்பட்டிருக்கும். சுற்றிப் பார்க்க வருவோர் அடையாள அட்டையை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். செல்போன், கேமராவுக்கு அனுமதி இல்லை. 

இடுக்கி அணையின் பிரமாண்டமான தோற்றமும், அபாரமான கட்டமைப்பும் மலைப்பை ஏற்படுத்தும். அணை தவிர, இடுக்கி மாவட்டத்தில் சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. தேக்கடி, மூணாறு, கல்வாரி மலை, ஹில் வியூ பார்க், குறிஞ்சிமலா சரணாலயம், நெடுங்கண்டம் மலை, பைனாவு, ராமக்கல்மேடு, மீசபுலிமலா, ஆனையிறங்கல் அணை, சேயப்பர நீர்வீழ்ச்சி, பஞ்சலிமேடு, சதுரங்கபர வியூ பாயிண்ட், இடுக்கி வன உயிர் சரணாலயம், கல்யாணதன்டு மலை, திரிசங்கு மலை ஆகியவை பார்க்க வேண்டிய இடங்கள். கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டம் என்பதால் மொழி பிரச்சனையில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com