காதலுக்கும்… கல்யாணத்திற்கும் ‘கல்லறை’யை பரிசாகக் கொடுப்பதே உலக அதிசயம்தான். அதுவும், உலக அதிசயங்களைப் பற்றிக் கேட்டால் ஏழு அதிசயங்களில் உடனடியாக நினைவுக்கு வருவது தாஜ்மஹால். உள்ளூர் காதலர்கள் முதல் உலகக் காதலர்கள்வரை மட்டுமல்ல ‘காதல்’ தண்டபாணிகளைக்கூட ஒருமுறையாவது சுற்றிப்பார்க்கவேண்டும் என்று ஏங்கவைக்கும் காதல்மஹால்தான் ’தாஜ்மஹால்’.
முகலாய மன்னர் ஷாஜகான் உலகமே அதிசயித்துப் பார்க்கும் அளவுக்கு காதலோடு உருகி உருகி உலகின் தலைசிறந்த கட்டிடக்கலை வல்லுநரை வைத்து 22 ஆண்டுகள் கட்டிய கல்லறை என்றால், அந்த காதல் மனைவி எப்பேர்பட்டவராக இருந்திருப்பார் என்று அதிசயித்துப் பார்க்கத் தோன்றுகிறதல்லவா? ஷாஜகானின் அப்பேர்பட்ட காதல் ‘பேரதிசயம்’ மும்தாஜ் மஹாலின் பிறந்தநாள் இன்று.
பொதுவாக ’குழந்தை பிறந்துவிட்டாலே மனைவி மீது பாசம் போய்விடுகிறது’ என்பது பெண்களின் குற்றச்சாட்டு. ஒருசில ஆண்களின் செயல்களும் அப்படித்தான் இருக்கிறது. ஆனால், ஒரு குழந்தை அல்ல… இரண்டு குழந்தையும் அல்ல… ஷாஜகான் மும்தாஜ் தம்பதிகளுக்கு 14 குழந்தைகள். அத்தனை குழந்தைகள் பிறந்த பிறகும், திருமணம் செய்தபோது இருந்த அதே ஆழமான காதலோடு நேசித்து மனைவிக்கு உலகமே அதிசயிக்கும் வகையில் கல்லறை கட்ட முடிகிறது என்றால், அந்தக் காதல் உலக அதிசயங்களை விட பேரதிசயமானதுதான். ஷாஜகானின் மூன்றாவது மனைவியான மும்தாஜ் தனது 14 வது குழந்தை குஹாரா பேகம் பிறந்தபோது இறந்துவிட்டார். அவர், இறந்த ஒரு வருடம் முழுக்க துயரத்திலேயே மூழ்கி இருந்த ஷாஜகானின் நரை முடிகளும் வாடிய முகமுமே மனைவியின் மீதான பிரிவையும் காதலையும் உணர்த்தியது.
அப்படியொரு அன்பால் நிறைந்தது இவர்களின் வாழ்க்கை. இந்தியாவிற்கு பெருமையாக... காதலின் மகத்துவமாக காட்சியளிக்கும் தாஜ்மஹால் உருவாக காரணமாக இருந்தது மும்தாஜின் அன்புதான். அந்த பேரன்பே ஷாஜகானை தாஜ்மஹாலை கட்ட வைத்தது. பேரன்பின் பேரரசியான மும்தாஜ் மஹால், 1593 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி தாஜ்மஹால் அமைந்துள்ள அதே ஆக்ராவில்தான் பிறந்தார். இவரது இயற்பெயர் அர்சுமந்த் பானு பேகம். இவரது தந்தை அசன் அசாஃப் கான் ஜஹாங்கீர் மனைவி நூர்ஜகானின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது 19 ஆம் வயதில் 1612 ஆம் ஆண்டு ஷாஜகானின் மூன்றாவது மனைவியானார் மும்தாஜ். அந்தக் காலக்கட்டத்திலேயே கல்வியில் சிறந்து விளங்கினார். அரபு மற்றும் பாரசீக மொழிகளை கற்றறிந்தார். கவிதைகள் எழுதுவதிலும் புத்திசாலித்தனத்திலும் புகழப்பட்டார். இவை எல்லாவற்றையும் விட மும்தாஜ் ஒரு ’சுயமரியாதைப் பெண்’ என்ற காரணத்தாலேயே ஷாஜகானால் ஈர்க்கப்பட்டார். சுயமரியாதையும் அன்பும் கொண்ட அர்சுமந்த் பானு பேகம் என்ற பெயரை ’மும்தாஜ் மஹால் பேகம்’ (அரண்மனையில் உயர்ந்தவர்) என்று பெயரை மாற்றி பட்டத்தையும் கொடுத்தார்.
“மும்தாஜ் அழகு, கருணை, இரக்கம் கொண்டவர். கர்ப்பிணியாக இருந்தபோதும் ஷாஜகானின் பிரச்சாரங்கள் உட்பட அனைத்திற்கும் அன்பால் கணவருடன் சென்றுள்ளார். அந்தப் பேரன்பே மும்தாஜ் மஹாலை 1628 ஆம் ஆண்டு பேரரசியாக அரியணையில் அமர்த்தியது. அதேபோல, ஷாஜகானுடன் மும்தாஜ் வாழ்ந்த காஸ்மஹால்போல் வேறு எந்த பேரரசியின் இல்லமும் அலங்கரிக்கப்பட்டதில்லை. தங்கம், வெள்ளி போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்ட காதல் இல்லம் அது” என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.
சொல்லால் சுருக்கிவிட முடியாதது மும்தாஜின் சிறப்புகள். அரசு விவகாரங்களில் மும்தாஜின் ஆலோசனைகளை கேட்டே ஆட்சி செய்துள்ளார் ஷாஜகான். உலகில் உயர்ந்த குணமென்றால், அது மன்னிப்புதான். அப்படிப்பட்ட மன்னிப்பை மரண தண்டனை கைதிகளுக்கு வழங்கி மரண தண்டனைகளை ரத்து செய்யவைத்த மாமனித குணம்தான் மும்தாஜிடம் இருந்தது. அரசவையில் அறிஞர்களையும் புலவர்களையும் திறமையானவர்களையும் ஆதரித்தவர் மும்தாஜ். அவர்களுக்கு ஓய்வூதியத்தையும் வழங்கியிருக்கிறார்.
இப்படியொரு பெண்ணைப் பற்றி படிக்கும்போது நமக்கே காதல் கொள்ளத்தோன்றுகிறது என்றால், அவருடன் வாழ்ந்த ஷாஜகானுக்கு எப்படியொரு காதல் இருந்திருக்கும்? ஒட்டுமொத்த காதலையும் அன்பின் நிறமான வெண்மை நிறத்தில் பளிங்குக் கற்களால் செதுக்கி செதுக்கி உலகிற்கே காட்டிவிட்டார். ”தாஜ்மஹால் மற்றக் கட்டிடங்கள் போல வெறும் கட்டிடமல்ல. உயிருள்ள கற்களில் செய்யப்பட்ட ஒரு பேரரசரின் அன்பின் பெருமை” என்கிறார்கள் கவிஞர்கள்.
சுற்றுலாவாகட்டும் அரசு விவகாரங்களாகட்டும் இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு அதிபர்கள் தாஜ்மஹாலை தவறவிட்டதில்லை. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இந்தியா வந்தபோது, “உலக மக்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று தாஜ்மஹாலை பார்த்தவர்கள். இரண்டாவது தாஜ்மஹாலை பார்க்காதவர்கள்” என்று தாஜ்மஹாலுக்கு மேலும் புகழ் பரப்பினார். ஏன்… சமீபத்தில் இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்கூட தாஜ்மஹாலுக்கு மனைவியோடு வந்து போட்டோ எடுத்துக்கொண்டார். அப்படியொரு சிறப்பு மிகுந்தது தாஜ்மஹால்.
’தாஜ்மஹால்’ என்பது இஸ்லாமிய மன்னனால் கட்டப்பட்ட உலக அதிசயம். அதற்குள்ளே, அவரது அன்பு மனைவியின் கல்லறை அமைந்துள்ளது. அந்த கல்லறையினால்தான் உத்திரபிரதேச அரசுக்கு சுற்றுலாத்துறை மூலம் வருவாய் வந்துகொண்டிருக்கிறது என்பதும் மறைக்கவே; மறுக்கவே முடியாத உண்மை.
காதலின் பேரதிசயம் தாஜ்மஹாலுக்கு நுழைவுக்கட்டணமாக இந்தியர்களுக்கு 250 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 1300 ரூபாயும் சார்க் நாடுகளில் இருந்து வருவோருக்கு 740 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே 20 லட்சம் பேர் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காதலே ஒரு அதிசயம்தான். அந்த அதிசயத்திற்கே ஒரு உலக அதிசயம் என்றால் அது தாஜ்மஹால்தான். முழுக்க முழுக்க பளிங்கு கற்களால் கட்டப்பட்ட தாஜ்மஹால் டெல்லி அருகே ஆக்ராவில் 1631 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1654 ஆம் ஆண்டுதான் முடிக்கப்பட்டது. ஷாஜகான் மும்தாஜ் மீது வைத்திருந்த காதல் எவ்வளவு உயர்வானதோ, அதேபோல்தான் உலக மக்கள் மனதிலும் உயர்ந்து நிற்கிறது தாஜ்மஹால்.
- வினி சர்பனா