இன்றைய டிஜிட்டல் யுகத்தில் திரைப்படங்களை மக்கள் தங்களது டிஜிட்டல் சாதனங்களின் வழியே கண்டு ரசித்து வருகின்றனர். அவரவருக்கு வசதியான நேரத்தில் திரைப்படங்களை பார்க்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. மக்கள் திரைப்படங்களை கண்டுகளிக்க உதவுகின்றன ஓடிடி தளங்கள். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட் ஸ்டார், சோனி Liv, ஜீ5, ஆஹா என இந்தியாவில் எண்ணற்ற ஓடிடி தளங்கள் உள்ளன. இதில் திரைப்படங்கள் மட்டுமல்லாது வெப் சீரஸ்களும் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகின்றன.
ஓடிடி சின்ன பட்ஜெட் கொண்ட முழுநீள திரைப்படங்களுக்கான தளம் என்ற நிலையை கொரோனா தற்போது முற்றிலும் மாற்றிவிட்டது. தமிழ் மொழி உட்பட இந்திய சினிமாவின் முன்னணி திரை நட்சத்திரங்களின் படங்களும் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன. பெரும்பாலான ஓடிடி தளங்கள் வர்த்தக நோக்கில் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், வர்த்தக நோக்கம் மட்டுமே முக்கியமாக இல்லாமல் இயங்கி வருகின்ற ஓடிடி தளம்தான் 'முபி' (MUBI). உலக சினிமாவை பயனர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்துவது இதன் பணி. ஆங்கிலம் மட்டுமல்லாது பன்னாட்டு மொழியை தனது தளத்தின் மூலம் பார்வையாளர்களிடம் கடத்துகிறது இந்தத் தளம். எக்ஸ்க்ளுசிவ், பார்வையாளர்கள் போற்றி கொண்டாடப்படும் 'கல்ட்' திரைப்படங்கள், குறும்படங்கள் மற்றும் முழுநீள திரைப்படங்களையும் இந்தத் தளம் ஸ்ட்ரீம் செய்கிறது.
MUBI உருவான கதை!
2007-இல் சினிமா ரசிகரான துருக்கி நாட்டை சேர்ந்த எஃபி கார்கெல் (Efe Çakarel) கஃபே ஒன்றில் ஆன்லைன் மூலம் அவர் விரும்பிய திரைப்படத்தை பார்க்க தவறியதன் பலனில் உருவானது 'முபி'. ஆன்லைனில் படங்களை ஸ்ட்ரீம் செய்வது இதன் பிரதான பணி. அப்போது 'The Auteurs' என்ற பெயரில் அதற்கு உயிர் கொடுத்திருந்தார். பின்னாளில் அதன் பெயர் MUBI என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2019 முதல் திரைப்படங்களை ஸ்ட்ரீம் செய்து வருகிறது 'முபி'.
தனித்துவம் என்ன?
எண்ணற்ற ஓடிடி தளங்கள் இருக்கையில் இந்த 'முபி' எதற்கு? என்ற கேள்வி வரலாம். 'தினம் ஒரு திரைப்படம்' என ஒவ்வொரு நாளும் புதிய திரைப்படங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது இந்தத் தளம். அந்தப் பட்டியல் இந்திய சினிமாவில் தொடங்கி உலக சினிமாக்கள் வரை நீள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி என அனைத்திலும் உலக சினிமா வெறி ஊறிப்போன ரசிகர்களுக்கான தளம் இது. ஆன்லைனிலும், டவுன்லோட் ஆன்-வெப் முறையிலும் 'முபி' தளத்தில் படங்களைப் பார்க்கலாம்.
என்ன, மற்ற ஓடிடி தளங்களை போல 'முபி' தளத்தையும் பயன்படுத்த சந்தா (Subscribe) செலுத்த வேண்டியுள்ளது. அதை செய்து விட்டால் ரசிகர்கள் நினைத்த நேரத்தில் படங்களைப் பார்த்து மகிழலாம்.
'முபி' தளத்தை பயன்படுத்திய பயனரின் அனுபவம்:
''அசல் (ஃப்யூர்) சினிமாவின் அணிவகுப்பு என 'முபி' தளத்தை சொல்லலாம். 60, 70, 80-களின் சினிமா இதில் இருப்பதை அதிகம் பார்க்க முடிகிறது. கருப்பு - வெள்ளை சினிமா தொடங்கி கலர்ஃபுல் சினிமாவையும் இதில் பார்க்கலாம். சுருக்கமாக இந்தத் தளம் குறித்து சொல்ல வேண்டுமென்றால், இதனை ஒரு ஆன்லைன் திரைப்பட திருவிழா (Film Festival) என சொல்லலாம். ஆங்கிலம் மட்டுமல்லாது பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்ய மொழி திரைப்படங்களையும் இதில் பார்க்கலாம். கலை நுட்ப மிக்க திரைப்படங்களை இதில் அதிகம் பார்க்கலாம். மேலும், இன்றைய இணைய உலகில் நாம் மறந்து போன சினிமாக்களுக்கு 'முபி' மறுபிறப்பு கொடுத்துள்ளது என சொல்லலாம்.
ஆனால், எந்தவொரு திரைப்படமும் இந்தத் தளத்தில் 30 நாட்கள்தான் இருக்கும். அதற்குள்ளாக பார்த்தாக வேண்டும். தவறவிட்டால், அடுத்த சுற்றில் அந்தப் படம் வரும். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என இந்திய மொழிகளின் க்ளாசிக் படங்களை இந்தத் தளத்தில் பார்க்கலாம்' என்கிறார் 'முபி' தளத்தின் பயனர் சத்யா சுப்ரமணி.
இந்தியாவின் விடுதலைக்கு முன்பு வெளியான திரைப்படங்கள் தொடங்கி 'கம்மாட்டிப்பாடம்', 'ரத்த சரித்திரம்', 'இங்கிலிஷ் விங்கிலிஷ்', 'ஜோதா அக்பர்', 'லகான்', 'கோர்ட்', 'தி லஞ்ச் பாக்ஸ்,' '96', 'கல்லி பாய்', 'ஆர்ட்டிகள் 15', 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'கற்றது தமிழ்', 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' மாதிரியான படங்கள் இந்த தளத்தில் ஸ்ட்ரீம் ஆகியுள்ளன. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் பயனர்கள் தங்கள் போன்களில் இந்த செயலியை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
MUBI தளத்தில் திரைப்படங்களை பார்த்து ரசிக்க: ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் பயன்கள் லிங்கை க்ளிக் செய்யவும்.
வலைதள முகவரி: https://mubi.com/
முந்தைய அத்தியாயம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 4: eSkillIndia - உங்கள் தனித்திறன்களை மேம்படுத்த உதவும் செயலி!|