''மலையாளத்தில் அவர் நடிப்பே வேறு..'' - தவறவிடக்கூடாத துல்கரின் படங்கள்!!

''மலையாளத்தில் அவர் நடிப்பே வேறு..'' - தவறவிடக்கூடாத துல்கரின் படங்கள்!!
''மலையாளத்தில் அவர் நடிப்பே வேறு..'' - தவறவிடக்கூடாத துல்கரின் படங்கள்!!
Published on

''தூங்கா அஞ்சுகிற இரவுகளில் உன் கண்ணீருடன் நான் உரையாடிக்கொண்டு இருக்கிறேன்.
இந்த நாளில் உன்னை கடந்துவிடும் அற்புதம் எப்படியும் நிகழ்ந்துவிடும் தானே?
இழப்பின் தனிமையில் நிற்க உனக்கு நிழலில்லை''

சோலா படத்திற்காக மனுஷ்யபுத்திரன் எழுதிய இந்த கவிதையை எத்தனை முறை கேட்டாலும் அதில் ஒரு வலி இருக்கும். அதற்கு காரணம் வரிகள் மட்டுமே அல்ல. அந்த கவிதையை படிக்கும் குரலும் தான். அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் துல்கர் சல்மான். வசீகரிக்கும் முகம் மட்டுமல்ல குரலுக்கும் சொந்தக்காரர். அவரின் 34வது பிறந்ததினம் இன்று.

இதுதான் சினிமா என்ற வழக்கமான கோட்பாட்டில் இருந்து சற்று விலகி நிற்கிறது மலையாள சினிமாக்கள். ஒருவரிக் கதையை
வைத்துக்கொண்டு அதனை அழகாக வெளிக்கொண்டு வந்து விடுகிறார்கள் மலையாள இயக்குநர்கள். மலையாள பார்முலா தமிழில் எடுபடாது என சிலர் கூறினாலும் இப்போதெல்லாம் மலையாள சினிமாவுக்கென்று தமிழில் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கவே செய்கிறது. எதார்த்தங்களை விரும்பும் ரசிகர்கள் மலையாள சினிமாவை கொண்டாடத் தவறுவதில்லை. அப்படி கொண்டாடப்பட்ட பல திரைப்படங்களில் நாயகன் துல்கர் சல்மான்.

நடிகர் மம்முட்டியின் மகன் என்பதாலும், சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருப்பதாலும் மலையாளம் பக்கம் போகாதவர்களுக்கும்
இவரை தெரிந்திருக்கும். ஆனால் இவர் மலையாளத்தில் கொடுத்த நடிப்பை இன்னமும் தமிழ் திரையுலகம் காணவில்லை. தன்னுடைய
தந்தை மிகப்பெரிய நடிகர் என்றாலும் அவருடைய சாயல் ஏதுமின்றி தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி வெற்றி நடைபோடுகிறார் துல்கர் சல்மான். தமிழில் ஒகே கண்மணி, வாயை மூடி பேசவும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் நீங்கள் துல்கரை பார்த்திருந்தாலும் கண்டிப்பாக மலையாளத்தில் பார்க்க வேண்டிய துல்கரின் படங்கள் சில இருக்கின்றன.

சார்லி:

துல்கர் சல்மானுக்கு சார்லி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த திரைப்படம். பார்க்கும் நபர்களிடத்தில் எல்லாம் அன்பை
விதைக்கும் இளைஞராக, துறுதுறுவென ஓடும் ஒருவனாக, காதலில் கண்ணாமூச்சி காட்டும் ஹீரோவாக அந்தப்படத்தில் அதிக கவனம்
ஈர்த்திருப்பார் துல்கர். அவரது உடை, நடை என சார்லி ஒரு ஸ்டைலையே உருவாக்கியது. சார்லியை போல ஊர் சுற்ற வேண்டும் என
பலரையும் புலம்ப வைத்த திரைப்படம்.

பெங்களூர் டேஸ்:

பெங்களூரு நாட்கள் என தமிழில் வந்தாலும் மலையாளத்தின் ஒழுங்கு தமிழில் இல்லை என்றே சொல்லவைத்த திரைப்படம். அதில் பைக்
ரேஸராக, டோண்ட் கேர் பாலிசி குறும்பு இளைஞனாக நடித்திருப்பார் துல்கர். காதல் காட்சிகளிலும், சில சோக காட்சிகளிலும் தனக்கே
உரித்தான நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்து இருப்பார்.

கலி:
படத்தின் தலைப்புக்கு ஏற்ப படம் முழுக்க முன் கோபத்தை முகத்தில் வைத்துக்கொண்டு திரியும் கோபக்காரனாக இருப்பார் துல்கர்.
கோபத்தை கட்டுப்படுத்த முயலும் காட்சிகள், காதல் காட்சிகள் என துல்கரின் நடிப்புக்கு தீனி போட்ட திரைப்படம் இது.

100 டேஸ் ஆஃப் லவ்:

படம் முழுக்க காதல் மன்னனாக வலம் வரும் துல்கர் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார். முதல் முதலில் கதாநாயகியை பார்க்கும் காட்சி, குடித்துவிட்டு நாயகி வீட்டுக்கு செல்லும் காட்சி, தன் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்ல யாருமில்லை என புலம்பும் காட்சி என படத்தின் பல காட்சிகளில் கைத்தட்டல் வாங்கி இருப்பார் துல்கர்.

கம்மட்டிபாடம்:

நண்பர்கள் கூட்டம், காதல், சண்டை எனக் கண்ட ஒரு வாழ்க்கை நகரமயமாதலுக்கு இடையே காணாமல் போனதைச் சொல்லும்
திரைப்படம். தன் நண்பர்களை மீண்டும் தேடி வரும் ஒருவராக இதில் துல்கர் நடித்திருப்பார். ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் வித்தியாச நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் துல்கர்.

சோலோ:
சோலா படத்தில் வரும் நான்கு கதைகளிலும் தனித்து தன்னை பதிய வைத்திருப்பார் துல்கர். ஒரு சாயலில் மற்றொரு சாயல் படிந்துவிடாமல் கவனமாக நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். துல்கரின் நடிப்புத்திறமைக்கு அதிக வேலை கொடுத்த திரைப்படமாக சோலோ இருக்கும்.

உஸ்தாத் ஹோட்டல்:

மம்முட்டி மகன் என்று மனதில் பதிந்திருந்த துல்கர், தனக்கென ஒரு பாதையை இப்படத்தில் இருந்து உருவாக்கிக் கொண்டார் என்று
சொல்லலாம். தாத்தா, அப்பா, சகோதரிகள் என உறவுகளுக்கு இடையே பல உணர்ச்சிகளை அழகாக கொட்டி இருப்பார் துல்கர். காதல்
காட்சிகளிலும் அட்டகாசம் செய்திருப்பார் துல்கர் சல்மான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com