ஸ்டார்ட் அப் இளவரசிகள் 2: சாண்ட்ரா கர்ட்ஜிக் - 'சிலிக்கான் வேலி அம்மா'வின் அசாத்திய கதை!

ஸ்டார்ட் அப் இளவரசிகள் 2: சாண்ட்ரா கர்ட்ஜிக் - 'சிலிக்கான் வேலி அம்மா'வின் அசாத்திய கதை!
ஸ்டார்ட் அப் இளவரசிகள் 2: சாண்ட்ரா கர்ட்ஜிக் - 'சிலிக்கான் வேலி அம்மா'வின் அசாத்திய கதை!
Published on

கம்ப்யூட்டர் புரோகிராமிங் என்றதும் பல அம்சங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால், நிச்சயம் குடிசைத்தொழில் எனும் அம்சம் நினைவுக்கு வர வாய்ப்பில்லை. புரோகிராமிங்கிற்கும் குடிசைத்தொழிலுக்கும் என்ன பொருத்தம் என இப்போது உங்கள் மனதில் எழக்கூடிய குழப்பத்தை மீறி, ஆரம்ப காலத்தில் புரோகிராமிங் என்பது குடிசைத்தொழிலாக இருந்தது எனும் தகவல் வியப்பாகவும், நம்ப முடியாததாகவும் இருக்கலாம். இந்த வியப்புடன், புரோகிராமிங்கை குடிசைத்தொழிலாக துவங்கி, பின்னர் மென்பொருள் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பெண்மணி பற்றிதான் இப்போது பார்க்கப்போகிறோம்.

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிறப்பிடமான சிலிக்கான வேலியின் தாய் என கொண்டாடப்படும் சாண்ட்ரா கர்ட்ஜிக் (Sandra Kurtzig) தான் அவர். மைக்ரோசாஃப்ட் சாஃப்ட்வேர் சாம்ப்ராஜ்யத்தை நிறுவிய பில்கேட்ஸ் பள்ளி மாணவராக இருந்த காலத்தில், 1972-ல் அமெரிக்காவின் முதல் சாஃப்ட்வேர் நிறுவனத்தை கர்ட்ஜிக் துவக்கியிருந்தார். வெறும் 2,000 டாலர் முதலீட்டில் பகுதி நேரப் பணியாக துவக்கப்பட்ட நிலையில், அவரது ஏ.எஸ்.கே கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் (ASK Computer Systems) நிறுவனம், அதன் உச்ச காலத்தில் ஆண்டுக்கு 450 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டும் நிறுவனமாக உருவானது.

அமெரிக்காவில் சாஃப்ட்வேர் சார்ந்து உருவான முதல் பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக கர்ட்ஜிக்கின் ஏ.எஸ்.கே கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் கருதப்படுகிறது. இந்நிறுவனத்தின் வெற்றிக்கதை வியப்பானது மட்டும் அல்ல; ஊக்கம் அளிப்பதும்தான்.

நவீன அமெரிக்காவை உருவாக்கிய பெரும்பாலான தொழிலதிபர்களை போல கர்ட்ஜிக்கும் அந்நாட்டிற்கு குடியேறிய வசத்தில் வந்தவர்தான். அவரது பெற்றோர்கள் ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறியிருந்தனர். 1947-ல் சிகாகோவில் கர்ட்ஜிக் பிறந்தார். அவரது அப்பா ஏழ்மை நிலையில் வளர்ந்தவர் என்றாலும், அம்மா செல்வ செழிப்பான குடும்பத்தில் வளர்ந்தவர் என்பதோடு படித்து பட்டமும் பெற்றிருந்தார்.

1950களில் கர்ட்ஜிக்கின் குடும்பம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு இடம்பெயர்ந்தது. அப்பா, அம்மா இருவருமே குடும்பத்திற்காக சொந்த வர்த்தகத்தில் ஈடுபட்டதைப் பார்த்து வளர்ந்த சாண்ட்ரா கர்ட்ஜிக் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்று, ஸ்டான்போர்டு பல்கலை.யில் முதுகலை பொறியியல் பட்டம் பெற்றார். இதை ஒரு சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த வகுப்பில் இருந்த 250 மாணவர்களில் இடம்பெற்ற இரண்டு மாணவிகளில் அவரும் ஒருவர்.

எனினும், சாண்ட்ரா கர்ட்ஜிக்கிற்கு பொறியியல் துறையில் தனது எதிர்காலம் பற்றி சந்தேகமாக இருந்ததால், அப்போது கம்ப்யூட்டர் துறையில் நட்சத்திரமாக இருந்த ஐபிஎம்-மில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், வேலை பிடிக்காமல் முதல் நாளே விலகிவிட்டார். கர்டிஜிக்கிற்கும் வேலைக்கும் பொருத்தம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், சில ஆண்டுகளுக்கு பின் அவர் மீண்டும் வேலையில் சேர்ந்தபோதும் அந்த வேலை பிடிக்காமல் விட்டுவிட்டார்.

இதனிடையே, அவர் ஆரி கர்ட்ஜிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். நியூஜெர்சியில் சிறிய வீட்டில் வாழ்க்கையைத் துவங்கியவர் மூன்று ஆண்டுகளில் மீண்டும் கலிபோர்னியாவுக்கே வந்துவிட்டார். அங்கு அவர் மீண்டும் வேலைக்கு செல்லத் துவங்கினார்.

சாண்ட்ராவுக்கு விற்பனையில் ஆர்வம் இருந்தது. எனவே, விர்ச்சுவல் கம்ப்யூட்டிங் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். அந்த காலகட்டத்தில் (1970) கம்ப்யூட்டர்கள் பிரபலமாகத் துவங்கியிருந்தாலும், சொந்தமாக கம்ப்யூட்டர் வாங்குவது என்பது எல்லா வர்த்தக நிறுவனங்களுக்கும் சாத்தியமாகவில்லை. எனவே நிறுவனங்கள், டைம்ஷேர் என சொல்லப்படும் நேரப் பகிர்வு முறையில் கம்ப்யூட்டர்களை வாடகைக்கு பயன்படுத்தின. (அந்த காலத்து கிளவுட் கம்ப்யூட்டிங் என இதை கருதலாம்.)

விர்ச்சுவல் கம்ப்யூட்டிங் நிறுவனமும் இந்த முறையில் கம்ப்யூட்டர் நேரத்தை வழங்கி கொண்டிருந்தது. இதை விற்பனை செய்யும் வேலைக்காக சாண்ட்ரா பணிக்குச் சேந்ர்ந்திருந்தாலும், உண்மையில் அவர் கம்ப்யூட்டர் புரோகிராமிங்களை எழுதும் வேலையை செய்ய வேண்டியிருந்தது.

இப்போது உள்ளதுபோல, அந்த காலகட்டத்தில் எல்லாவிதமான பணிகளுக்கும் புரோகிராம்கள் கிடையாது. கம்ப்யூட்டரை வாங்கி வைத்திருக்கும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வேலைக்கு ஏற்ற புரோகிராமை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எனவே வாடகைக்கு கம்ப்யூட்டர் நேரத்தி வாங்கும் நிறுவனங்களுக்கு அதைப் பயன்படுத்த புரோகிராம் தேவைப்பட்டது. இந்தப் பணியை சாண்ட்ராவும் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், இதேபோன்ற வேறு நிறுவனத்தில் பணிக்கு சேரக்கூடாது எனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டபோது அவர் மறுத்துவிட்டார். இதனால் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

தனது கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் அறிவைக் கொண்டு விற்பனையில் பிரகாசிக்கலாம் என நம்பிய சாண்ட்ரா, கம்ப்யூட்டர் நேரத்தை விற்பனை செய்து கொண்டிருந்த ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தை அணுகினார். நியூஜெர்சியில் இருந்த வாடிக்கையாளர் நிறுவனமான பெல் லேப்ஸ் கணக்கு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பெல் லேப்சில், பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தாலும் கம்ப்யூட்டரை இயக்க அவர்கள் புரோகிராமர்களையே சார்ந்திருக்க வேண்டியிருந்தது. அவர்கள் பெரும்பாலும் தரவுகளை அளித்துவிட்டு காத்திருப்பார்கள். கம்ப்யூட்டர் அளிக்கும் முடிவுகள் அவர்களுக்கு சில நாட்கள் கழித்து கிடைக்கும். இந்தச் சூழலில் இருந்த ஆய்வறிஞர்கள் தங்கள் தேவைக்கேற்ப கம்ப்யூட்டரை பயன்படுத்த ஏற்ற புரோகிராம்களை தேட அல்லது உருவாக்கிக் கொள்ள பயிற்சி அளிப்பதில் சாண்ட்ரா ஈடுபட்டார்.

இதே பணியை மற்ற நிறுவனங்களுடனும் மேற்கொண்டார். பின்னர் அவர் மீண்டும் கலிபோரினியா திரும்ப விரும்பியபோது, ஜி.இ நிறுவனத்தின் கிளைக்கு மாற்றப்பட்டார். இந்தப் பணியின் ஒரு பகுதியாக ஹால்கன் நிறுவன தொடர்பு அவரது வாழ்க்கையையே மாற்றுவதாக அமைந்தது.

தொலைத்தொடர்பு நிறுவனமான் ஹால்கன் கம்ப்யூட்டர்களை வாங்க விருப்பம் தெரிவித்ததோடு, அவற்றுக்கான புரோகிராம்களையும் கேட்டது. நிறுவன செயல்பாடுகளை மொத்தமாக நிர்வகிக்க தேவையான ஒரு மென்பொருள் வேண்டும் என அந்நிறுவனம் கோரியது. இத்தகைய புரோகிராம் ஜி.இ நிறுவனத்திடம் இருக்கவில்லை. அதனால் என்ன, நீங்கள் அந்த புரோகிராமை உருவாக்கித் தாருங்களேன் என ஹால்கன் சி.இ.ஓ லாரி விட்டேகர், சாண்ட்ராவிடன் கேட்டார்.

இத்தகைய பெரிய பொறுப்பை ஏற்பதில் தயக்கம் இருந்தாலும் சாண்ட்ரா துணிந்து ஒப்புக்கொண்டார். 1972-ல் அவர் ஜி.இ நிறுவன வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தனது படுக்கையறையில் புதிய நிறுவனத்தை துவக்கினார். ஹால்கன் கொடுத்த 300 டாலர் முன்பணம் மற்றும் ஜி.இ நிறுவனத்திடம் இருந்து கிடைத்த 2,000 டாலருடன் வர்த்தகத்தை துவக்கியவர் குடும்பத்தை கவனித்துக்கொண்டு, பகுதிநேரமாக இந்த தொழிலை வைத்துக்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

கணவர் பெயர், தனது பெயர் ஆகிய முதல் எழுத்துக்களை கொண்டு ஏ.எஸ்.கே கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் என நிறுவனத்திற்கு பெயர் வைத்துக்கொண்டு பணியைத் துவக்கினார்.

ஹால்கன் அளித்த பணியை ஐந்து வாரங்களில் வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தார். இதற்காக 900 டாலர் கிடைத்தது. ஆனால், அடுத்த ஆர்டர் கிடைக்க கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருந்தது. பல நிராகரிப்புக்கு பின், செய்திதாள் நிறுவனம் ஒன்றின் பணி கிடைத்தது. அதன் நாளிதழ் டெலிவரி பையன்களுக்கான பணி, சந்தாதாரர் பட்டியல், நாளிதழ் போடும் மார்க்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய புரோகிராமை உருவாக்கித் தந்ததுடன், அதற்கான சேவையையும் வழங்கினார்.

மின்னணு குடிசைத்தொழில்: சாண்ட்ரா பெரிய எதிர்பார்ப்புடன் நிறுவனத்தை துவக்கியிருக்கவில்லை. குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டிய நிலையில் பணிபுரியும் வாய்ப்பை விட்டுவிடாமல் இருக்கும் நோக்கத்துடன் பகுதிநேர வேலையாகவே வர்த்தகத்தில் ஈடுபட்டார். இதன்மூலம் கூடுதலாக வருமானம் வந்தால் நல்லது என நினைத்தார். "வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று கூட நினைத்ததில்லை" என அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர்களுக்கான புரோகிராம்களை எழுதி கொடுத்தவர்கள் பெரும்பாலும் தங்கள் வீட்டில் இருந்தே செயல்பட்டனர். புரோகிராம்களுக்கு இன்னமும் தனியே சந்தை உருவாகியிராத நிலையில், கம்ப்யூட்டர் வைத்திருந்த ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தேவைப்பட்ட புரோகிராம்களை பலரும் வீட்டிலேயே உருவாக்கி கொடுத்தனர். இந்த செயல்பாடு, 'மின்னணு குடிசைத்தொழில்' என பிரபலமாக குறிப்பிடப்பட்டது. சாண்ட்ராவும் இதே முறையில்தான் செயல்பாட்டை துவக்கினார்.

ஆனால் அவர் எதிர்பார்ப்பை மீறி, வாய்ப்புகள் வரத் துவங்கின. கம்ப்யூட்டர் தொழில் வளர்ந்து வந்த நிலையில், பல வர்த்தக நிறுவனங்களுக்கு கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு ஏற்ற புரோகிராம் சார்ந்த தீர்வுகள் தேவைப்பட்டன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் எண்ணத்துடன் சாண்ட்ரா புத்திசாலியான பொறியியல் பட்டதாரிகளை பணிக்கு அமர்த்தி, நிறுவனங்களுக்கு தேவைப்பட்ட புரோகிராம்களை எழுதவைத்தார். அந்த வகையில் இப்போது சின்னதும், பெரிதுமாக செழித்து விளங்கும் தகவல் தொழிநுட்ப சேவை நிறுவனங்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கும் நிறுவனங்களில் ஒன்றாக சாண்ட்ராவின் நிறுவனம் அமைகிறது.

கம்ப்யூட்டர் புரோகிராமிங்கை உருவாக்கித் தருவதில் பெரும் வர்த்தக வாய்ப்பு இருப்பதை உணர்ந்த சாண்ட்ரா, இதில் தன்னை முழுவீச்சில் ஈடுபடுத்திக்கொண்டார். உற்பத்தி சார்ந்த நிறுவனங்களை இலக்காக கொள்வது என்றும், புரோகிராமிங்கை ஒரு சேவையாக வழங்குவது என்றும் அப்போது தீர்மானித்ததாக அவர் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

உற்பத்தி நிறுவனங்களுக்கு மாறுபட்ட தேவைகள் இருந்ததால், அவற்றை நிறைவேற்றுவதன் மூலம் வர்த்தக வாய்ப்பை பெறலாம் என்பது முதல் தீர்மானத்திற்கான அடிப்படையாக அமைந்தது. புரோகிராமிங்கை ஒரு சேவையாக அளிக்கும்போது, ஆரம்பத்தில் அதற்கான தொகையை பெற்றுக்கொண்டு பின்னர் அதை பரமாரிக்க மாதம்தோறும் ஒரு கட்டணத்தையும் வசூலிக்கலாம் என்பது இரண்டாம் தீர்மானத்திற்கான அடிப்படையாக அமைந்தது. இன்று பரபரப்பாக பேசப்படும் மென்பொருளை ஒரு சேவையாக வழங்கும் முறையை இதனுடன் ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

இதனிடையே, சாண்ட்ராவின் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்ய எந்த வென்ச்சர் முதலீட்டாளர்களும் தயாராக இல்லாததால் அவர் நிறுவன வருவாயை கொண்டே நிறுவனத்தை நடத்த வேண்டியிருந்தது. நிலைமையை சமாளிக்க அவர் நூதனமான வழியை நாடினார். புரோகிராம்களை எழுத தேவைப்பட்ட மினி கம்ப்யூட்டர்களை சொந்தமாக வாங்க முடியாத நிலையில், எச்.பி நிறுவனத்திடம் அவற்றை கடனாகப் பயன்படுத்த வாய்ப்பு கேட்டிருந்தார். அதன்படி, நிறுவன வேலை நேரம் முடிந்ததும், சாண்ட்ராவின் புரோகிராமர்கள் எச்.பி நிறுவனத்திற்கு சென்று அங்கிருந்த கம்ப்யூட்டர்களை பயன்படுத்திக்கொண்டனர். அவர்கள் படுக்கையுடன் எச்.பி நிறுவனத்திற்கு சென்று பணியாற்றி, அங்கேயே தூங்கி காலையில் எழுந்து வந்தனர். ஆக, பகுதிநேர பணியாக துவங்கிய நிறுவனம் சாண்ட்ராவிடம் இருந்து தினசரி 20 மணிநேர உழைப்பை கோரும் அளவுக்கு வளர்ந்தது.

முன்னோடி மென்பொருள்: வேலை பளுவால் நிலைகுலையாமல் வந்து குவிந்த வாய்ப்புகளால் ஊக்கம் பெற்ற சாண்ட்ரா 1978-ல், மேன்மேன் (MANMAN) எனும் நிர்வாக மென்பொருளை அறிமுகம் செய்தார்.

மென்பொருள் உலகில் மேன்மேன் புதிய வகையாக இருந்தது. அதற்கு முன் உருவாக்கப்பட்ட பெரும்பாலான புரோகிராம்கள் குறிப்பிட்ட பணிக்கு ஏற்றவையாக இருந்தது. ஆனால் பொதுவான பயன்பாட்டை கொண்டிருக்கவில்லை. உதாரணத்திற்கு நாளிதழ் வேலைக்கான புரோகிராமை வேறு ஒரு நிறுவன பணிக்காக பயன்படுத்த முடியாது. ஆனால், உற்பத்தி நிறுவனங்களுக்கான தேவை பொதுவாக இருப்பதை கவனித்த சாண்ட்ரா, ஒரே அடிப்படை மென்பொருளை வெவ்வேறு நிறுவனத்திற்கு ஏற்ப பயன்படுத்தும் வகையிலான பொது மென்பொருளாக மேன்மேன் மென்பொருளை அறிமுகம் செய்தார்.

இந்த மென்பொருளை மின்னணு நிறுவனத்திலும் பயன்படுத்தலாம், ஆட்டோமொபைல் நிறுவனத்திலும் பயன்படுத்தலாம். இதன் காரணமாக கம்ப்யூட்டர் வாடகை நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு இந்த மென்பொருளை விற்பனை செய்தார். கோகோ கோலா உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக கிடைக்க, அடுத்த கட்டமாக எச்.பி நிறுவனமே தனது புதிய கம்ப்யூட்டர்களில் இந்த மென்பொருளை இணைத்து விற்பனை செய்ய அனுமதி கேட்டது. நிறுவனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவும், வருவாய் வழியாகவும் இது அமைந்தது. பின்னாளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் உள்ளிட்ட மென்பொருள்களை மற்ற நிறுவன கம்ப்யூட்டர்களில் இணைத்து விற்பனை செய்து பெரிய வர்த்தக சாம்ப்ட்ராஜ்யமாக வளர்ந்ததை இங்கே பொருத்திப் பார்க்கலாம். விண்டோஸ் போன்ற பெரும் வெற்றி பெற்ற மென்பொருள்களுக்கான முன்னோடி மென்பொருள்களில் ஒன்றாக மேன்மேன் மென்பொருளை கருதலாம்.

கோடீஸ்வரர் சாண்ட்ரா: இந்த முறை சாண்ட்ரா நிறுவனம் மீதான நம்பிக்கையையும் அதிகரித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தந்தது. 1979-ல் 2.8 மில்லியன் டாலராக இருந்த வருவாய் அடுத்த சில ஆண்டுகளில் 39 மில்லியன் டாலராக உயர்ந்தது. அப்போது வேகமாக வளர்ந்து வந்த நிறுவனங்களில் ஒன்றாகவும் அமைந்தது. இதன் விளைவாக, 1981-ல் 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் சாண்ட்ராவின் வெற்றியை பாராட்டி கட்டுரை வெளியிட்டது. புரோகிராம் செய்து பெற்ற வெற்றி எனும் பொருளில் அமைந்த தலைப்பை கொண்ட அந்தக் கட்டுரையில், குடிசைத்தொழிலாக அமைந்த புரோகிராமிங் துறையில் இருந்து பெரிய வர்த்தக நிறுவனத்தை உருவாக்கியவர் என பாராட்டி தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே ஆண்டு நிறுவனம் பங்குச்சந்தையில் நுழைந்து பொதுப் பங்குகளை வெளியிட்டது.

நிறுவன பங்குகள் விலை உயர்ந்ததால் சாண்ட்ராவின் தனிப்பட்ட செல்வமும் வளர்ந்து அவர் கோடீஸ்வரரானார். அவரது வர்த்தக வெற்றி 'வால்ஸ்டீரீட் ஜர்னல்', 'ஃபோர்ப்ஸ்' உள்ளிட்ட முன்னணி இதழ்களில் கட்டுரையாக வெளியானது. 1985-ல் 'பி்ஸ்னஸ் வீக்' அவரை முன்னணி வர்த்தக தலைவர்களில் ஒருவர் என வர்ணித்தது.

ஏ.எஸ்.கே நிறுவன வெற்றியால் சிலிக்கான் வேலியின் முதல் பெண் சி.இ.ஓ எனும் பெருமையையும் பெற்ற சாண்ட்ரா 1985-ல் அந்த பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த தீர்மானித்தார். இதிலும் அவர் பில்கேட்ஸுக்கு முன்னோடியாக விளங்குவதை கவனிக்கலாம்.

ரோஜாக்களின் நறுமணத்தை நுகர கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருந்ததால் சி.இ.ஓ பணியில் இருந்து விடுபட்டதாக அவர் விளக்கம் அளித்திருந்தார். சில ஆண்டுகளுக்கு பின் நிறுவனத் தலைவர் பதவியில் இருந்தும் விலகியவர், ஓராண்டுக்கு பின் நிறுவனத்தை மீண்டும் நிலை நிறுத்த அதில் பொறுப்பேற்றுக்கொண்டார். 1990-களில், ஆண்டுக்கு 450 மில்லியன் டாலர் வருவாயுடன் நிறுவனம் மீண்டும் முன்னணிக்கு வந்தது. 1992-ல் மீண்டும் நிறுவன பொறுப்பில் இருந்து விடுவித்துக்கொண்டார்.

அதன் பிறகு தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரும் சாண்ட்ரா, தனது மகன்களுடன் இணைந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

ஆண்களின் கோட்டையாக அறியப்படும் 'சிலிக்கான் வேலி'யில் அதன் வளர்ச்சிக்கு வித்திட்ட வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றை உருவாக்கிய சாண்ட்ராவின் தொழில்முனைவு பயணம் அசாத்தியமானது. ஒரு பெண்ணாக பெரும் சாதனையை நிகழ்த்தியிருந்தாலும், பெண் தொழில்முனைவோர் எனும் பதத்தை அல்லது ஆண்களுடன் போட்டியிடுவதையோ சாண்ட்ரா ஒரு விஷயமாக கருதவில்லை. ''பெண் என்பதை எப்போதும் நான் ஒரு விஷயமாக நினைத்தததில்லை, வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நான் கடினமாக உழைத்தேனே தவிர ஆணைவிட சிறந்தவள் என நிரூப்பிக்க அல்ல' என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஆனால், எண்ணற்ற பெண் தொழில்முனைவோருக்கும், பெண் அதிகாரிகளுக்கும் அவரது வெற்றிக்கதை இன்றளவும் ஊக்கமாக இருக்கிறது. சாண்ட்ரா தனது கணவரிடம் விவாகரத்து பெற்ற தகவலையும் இங்கே வாலாக இணைத்துக்கொள்ளலாம். ஏனெனில், 1983-ல் விவாகரத்து பெற்றபோது கணவருக்கு அவர் ஜீவானாம்சமாக 20 மில்லியன் டாலர் வழங்கினார். பெண் ஒருவர் கணவருக்கு கொடுத்த மிகப்பெரிய ஜீவனாம்சம் அது!

(இளவரசிகள் இன்னும் வலம் வருவர்...)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com