நெட்ஃபிளிக்ஸ் தனது தொடர்களுக்காக சர்ச்சைக்கு உள்ளாவதோ, கடும் விமர்சனத்தை எதிர்கொள்வதோ புதிதல்ல. ஆனால், அண்மையில் நெட்ஃபிளிக்ஸ் ஊழியர்களே தங்கள் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர். மூன்றாம் பாலினத்தவரின் குரலாக ஒலிக்கும் இந்தப் போராட்டம் அதன் தன்மையிலும், நோக்கத்திலும் புதிய வழிகாட்டுவதாக அமைந்துள்ளது.
இந்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள பிரச்னையின் பின்னணியை சுருக்கமாகப் பார்க்கலாம். முன்னணி ஓடிடி சேவைகளில் ஒன்றான நெட்ஃபிளிக்ஸின் சூப்பர் ஹிட் சீரிசான 'ஸ்குவிட் கேம்' பற்றி பலரும் பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த மேடையில் வெளியான காமெடி தொடர் ஒன்று கடும் விமர்சனத்திற்கும், சர்ச்சைக்கும் உள்ளானது.
டேவ் சாப்பல்லே (Dave Chappelle) எனும் காமெடி நடிகரின் 'தி குலோசர்' எனும் நகைச்சுவை தொடரில், டிரான்ஸ் என குறிப்பிடப்படும் மூன்றாம் பாலினத்தவர் பற்றி இழிவான முறையில் கருத்துகள் இடம்பெற்றிருந்தே சர்ச்சைக்கு மூலக் காரணம்.
மூன்றாம் பாலினத்தவரை இழிவுபடுத்தும் வகையிலான இந்த நிகழ்ச்சி மீதான விமர்சனங்களும், கண்டனங்களும் குவிந்ததை மீறி, நெட்ஃபிளிக்ஸ் அந்த நிகழ்ச்சியை நீக்க மறுத்துவிட்டது. 'இந்தத் தொடரை விலக்கி கொள்வதற்கான காரணம் எதுவும் இல்லை' என நெட்ஃபிளிக்ஸ் கூறிவிட்டது.
இந்த நிலையில்தான், மூன்றாம் பாலினத்தவர் உணர்வு கொண்ட நெட்ஃபிளிக்ஸ் ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ஊழியர்களின் வெளிநடப்பு போராட்டம் நடைபெற்றபோது, அவர்களுக்கு ஆதரவாக மூன்றாம் பாலின செயற்பாட்டாளர்களும் நிறுவன வளாகம் அருகே குவிந்துவிட்டனர்.
செயற்பாட்டாளர்கள், மூன்றாம் பாலினத்தவருக்கு சமத்துவம் கோரும் வகையிலான கோஷங்களை எழுப்பிய அதேநேரத்தில் இணையத்திலும் இதற்கு ஆதரவு பெருகியது. ஹாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் #NetflixWalkout எனும் ஹேஷ்டேக்கையும் ட்விட்டரில் உருவாக்கி போராட்டம் தொடர்பான கருத்துகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
மூன்றாம் பாலினத்தவருக்கு எதிரான மோசமான கருத்துகளைக் கொண்ட நிகழ்ச்சிக்கு எதிரான இந்தப் போராட்டம் பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக வெளிநடப்பில் ஈடுபட்ட ஊழியர்களின் உணர்வுகளை மதிப்பதாக நெட்ஃபிளிக்ஸ் கூறியுள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதில்லை எனும் முடிவை ஊழியர்களிடம் தெரிவித்த விதம் குறித்தும் நிறுவன தலைமை செயல் அதிகாரி சரண்டோஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் வைத்துள்ள கோரிக்கைகள்தான் கவனத்திற்கு உரியவையாக அமைந்துள்ளன. கண்டத்திற்கு உள்ளாகியிருக்கும் தொடரை நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரவில்லை: மாறாக, நெட்ஃபிளிக்ஸ் மூன்றாம் பாலினத்தவர் தொடர்பான அர்த்தமுள்ள தொடர்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கோரியுள்ளனர்.
மேலும், மூன்றாம் பாலினத்தவர் தொடர்பான உள்ளடக்கத்தை உருவாக்குவதற்காக தனியே நிதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர். ஆக, நெட்ஃபிளிக்ஸ் ஊழியர்கள் கோருவது, உள்ளடக்க உருவாக்கத்தில் சமத்துவம் தேவை என்பதுதான்.
மூன்றாம் பாலினத்தவர் தொடர்பான சரியான புரிதல் தேவை என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இதற்கு உதவி செய்யும் வகையிலான உள்ளடக்கத்தை நெட்ஃபிளிக்ஸ், உருவாக்கி ஒளிபரப்ப வேண்டும் எனும் கோரிக்கை அர்த்தமுள்ளதாகவே தெரிகிறது.
இந்த சர்ச்சைக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய மூன்றாம் பாலினத்தவர் செயற்பாட்டாளரான ஆஷ்லி மேரி பிரெஸ்டன், "நெட்ஃபிளிக்ஸ் உருவாக்கிய டிஜிட்டல் சிறையில் நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.
போட்டி நிறுவனமான அமேசான் பிரைமிற்காக 'டிரான்ஸ்ஃபிரெண்ட்' எனும் தொடரை இயக்கிய ஜோ சோலவே, 'நெட்ஃபிளிக்ஸ் இயக்குனர் குழுவில் மூன்றாம் பாலினத்தவர் ஒருவரை இடம்பெற வைக்க வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளார்.
நெட்ஃபிளிக்ஸ் தொடர்கள் கலாசார நோக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், மோசமான கருத்துகளை கொண்ட அதன் உள்ளடக்கம் பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என்பது உண்மைதான். அந்த உள்ளடக்கத் தேர்வு சமத்துவம் மிக்கதாக இருக்க வேண்டும் எனில் மூன்றாம் பாலினத்தவர் தொடர்பான மனிதநேயமுள்ள சித்தரிப்புகள் தேவை என்பதையும், இதற்கு நெட்ஃபிளிக்ஸ் பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் போராடிய ஊழியர்கள் உணர்த்தியுள்ளனர்.