''உலகில், அனைத்தும் சமநிலையால் நிர்வகிக்கப்படுகின்றது. நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள், எதை இழக்கிறீர்கள் என்பதில்தான் எல்லாமே இருக்கிறது. உங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று நிலை வரும்போது, நீங்கள் அதீத வல்லமையைப் பெறுகிறீர்கள்'' - புரொஃபசர் உதிர்த்த வார்த்தைகள் இவை. கிட்டத்தட்ட 'மணி ஹெய்ஸ்ட்' வெப்சீரிஸின் கதையும் இதுதான்.
நெட்ஃப்ளிக்ஸில் ஹிட்டடித்த 'மணி ஹெய்ஸ்ட்' (Money Heist) வெப் சீரிஸின் எட்டு கொள்ளைக்காரர்களிடமும் இழப்பதற்கு ஒன்றுமேயில்லை. ஆனால், பெறுவதற்கு இந்த வையகமே உண்டு. ஒவ்வொருவருக்குள்ளும் ஏராளாமான கதைகள், வலிகள், சோகங்கள், ஏக்கங்கள், பிரிவுகளின் தடங்களாய் புரையோடிக்கிடக்கின்றன. ஆனால், அனைவரும் ஓர் உன்னத நோக்கத்திற்காக ஒன்றிணைக்கப்படுகிறார்கள். உன்னத நோக்கம்!? ஆம்... 'மணி ஹெயிஸ்ட்' அதையே சொல்கிறது. 'யாருக்கு எது தேவையோ, அதுவே தர்மம்' என்பதின் வழியே அது அவர்களுக்கான உன்னத நோக்கம் என்பது 'மணி ஹெயிஸ்ட்' சொல்லும் பாடம்.
'இங்கே சரி, தவறு என எதுவுமில்லை; சூழ்நிலைதான் எல்லாவற்றிற்குமான ஆசான்' என்பதை மணி ஹெய்ஸ்டில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் உணர்த்துகின்றன. டோக்கியோவை பார்த்தால், 'எல்லா பிரச்னையும் இந்தப் பொண்ணாலதான்' என எரிச்சல் வரலாம். ஆர்த்ரோ (Arturo)-வை போட்டுப் பிளக்க வேண்டும் எனத் தோன்றலாம். ஆனால், சூழ்நிலைகளே நகர்வுகளை தீர்மானிக்கின்றன என்கிறது மணி ஹெயிஸ்ட். அந்த வகையில் கதையில் வரும் கதாபாத்திரங்கள் கூடுதல் சுவாரஸ்யத்துடனும், தனித்தனி குணாதிசயங்களுடன் ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். சீசன் 5 இன்னும் 7 நாட்களில் வெளியாக உள்ள நிலையில், மணி ஹெய்ஸ்டின் கதாபாத்திரங்கள் குறித்து தனித்தனியே பார்ப்போம். இந்தக் கதாபாத்திரங்களுக்குள் நாம் எங்கெல்லாம் ஒளிந்திருக்கிறோம் என்பதை நாமே அறிந்துகொள்வதும் ஒரு ஜாலியான உளவியல் விளையாட்டுதான். டோக்யோவிலிருந்து தொடங்குவோம்.
கதை சொல்லியபடியே கைப்பிடித்து நம்மை 'மணி ஹெயிஸ்ட்'டுக்குள் அழைத்துச் செல்கிறார் டோக்யோ. ஒல்லியான தேகம், கிராஃப் கட்டிங், அளவுக்கு மீறிய தைரியம் என இளமை துள்ளலுடன், எடுத்த எடுப்பிலேயே புரொஃபசரை அலறவிடுகிறார். அவரது தைரியம் பாராட்டுக்குரியதுதான். ஆனால், அதை தேவையில்லாமல் எல்லா இடங்களிலும் 'அப்ளை' செய்வதில்தான் பிரச்னை. டோக்யோவை பொறுத்தவரை அவருக்கு, தான் செய்யும் செயல்களால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து ஒருபோதும் கவலையில்லை. முதல் எபிசோடிலேயே புரொஃபசர் வகுத்துக் கொடுத்த விதிகளை உடைத்து தன்னுடைய கதாபாத்திரத்தின் குணாதியத்தை வெளிப்படுத்துகிறார்.
காவல்துறைக்கும், பணயக் கைதிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ற விதியை போகிறபோக்கில் நொறுக்கிவிடுகிறார். காரணம் கேட்கும் புரொஃபசரிடம் பதில் சொல்லும்போது, அவருக்கு எவ்வித தயக்கமோ, அச்சமோ இல்லை. 'என்னுடைய டீம் மேட்டை காப்பாற்ற அப்படி செய்தேன்' என கூறிவிட்டு புரொஃபசரின் பதிலை எதிர்பார்க்காமல் நகர்கிறார். தனக்கு என்ன தோணுதோ, அதை செயல்படுத்தும் ஒரு கதாபாத்திரம். அதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்தெல்லாம் டோக்யோவுக்கு கவலையில்லை. உதாரணமாக, மீண்டும் 'ராயர் மென்ட்'-டுக்குள் டோக்யோ நுழையும்போது, மாஸ்கோ காவல்துறையால் சுடப்படுவார்.
தன்னுடைய அவசரகதியால் ஏற்படும் விளைவுகளை கண்முன் கண்ட பின்பும் டோக்யோவால் தன்னை மாற்றிக்கொள்ள முடியாது. அவரிடம் குற்ற உணர்ச்சி இருந்தபோதும், பிரச்னைகளை பொறுமையுடன் கையாளும் பக்குவம் பெர்லினைப்போல டோக்யோவுக்கு வசப்படாது. அதுதான் தலைவனுக்கான பண்பு. என்ன இருந்தாலும் தலைவன் தலைவன்தான்!
ரியோவை பார்த்து 'ஹி இஸ் மை வீக்னஸ்' என டோக்யோ கரைந்துருகும்போது, 'இவங்களாலதான் கதைல ட்விஸ்ட் வரும்போல' என யூகிக்க முடிகிறது. அதேபோலத்தான் எல்லாமே நடக்கிறது. உண்மையில் உலகத்தையே எதிர்க்கும் வல்லமைகொண்ட காதலுக்கு போலீஸ் கூட்டத்தை எதிர்க்க முடியாதா என்ன?
டோக்யோ - ரியோ அன்பின் ஆகிருதிகள். என்ன பிரச்னை வந்தாலும் பார்த்துக்கலாம் என இறங்கி களமாடுபவர்கள். அதற்காக 'வின்னர்' படத்தில் பிரசாந்துக்கு விழும் அடிக்கு பதிலாக வடிவேலுக்கு விழுவதுபோல உடனிருப்பவர்களை பலிகொடுப்பது பாவம்தானே மிஸ் டோக்யோ?
ஆனால், டோக்யோ செய்யும் விஷயங்கள் யாவும் ரியோவுக்கானது. ரியோ என்ற ஒருவனுக்காகத்தான் அத்தனை ரிஸ்க். உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், பொறுமையிழப்பதும்தான் டோக்யோவின் பலவீனங்கள். ஆனால், 'அதுக்காக எல்லாம் டான்சிங் ரோஸ அடிச்சிட முடியாது' என்பது போல டோக்யோவை தவிர்த்துவிட முடியாது. டோக்யோ கதைக்கான தேவை. மணி ஹெய்ஸ்டின் வெயிட்டான கேரக்டர். டோக்யோவை தவிர்த்துவிட்டு பார்த்தால் கதையில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கும்.
உலக அளவில் டோக்யோ கதாபாத்திரத்துக்குதான் ரசிகர்கள் அதிகம் இருக்கக் கூடும் என்பது அதிகாரபூர்வமற்ற துல்லிய கணிப்பு. அவள் வசமுள்ள கெத்தழகு நம்மை வெகுவாக கட்டிப்போடும் ஒன்று. பெர்லினிடம் மற்ற சகாக்கள் 'ஜெர்க்' ஆகும்பொதெல்லாம், கெத்தாக ஓவர் டேக் செய்து பெர்லினுக்கே பீதி ஏற்படுத்துபவள். தன்னிடம் தலைமைப் பண்புகளில் சில பல பற்றாக்குறைகள் இருந்தாலும், தேவையான நேரத்தில் 'தல' ஆக தயங்காமல் முன் நிற்பவள். காதலில் ஏற்படும் இன்செக்யூரிட்டியைக் கூட வெளியே பதற்றத்தைக் காட்டாமல் பக்காவாக அணுகுபவள். அம்மாவின் கரம் பிடித்து வளர்ந்தவள், தன்னைக் காட்டிக் கொடுக்க துணிந்ததன் காரணமாக, அம்மாவின் மரணத்தையே வெறும் செய்தியாக உள்வாங்கிக் கொள்ளும் கல் நெஞ்சக்காரியும் கூட. ஆனால், தன்னை நேசிப்போருக்கு அன்பை அளவின்றி அள்ளித் தந்து திக்குமுக்காடச் செய்யும் பேரன்புக்காரியும் இவளேதான்.
மொத்த டீமும் புரொஃபசரின் ஆளுமையைக் கண்டு மதிப்புடன் கூடிய டிஸ்டன்ட்டை பின்பற்றும்போது, அவரின் மென்னுணர்வுகளையும் சோதித்துப் பார்க்கும் சுவாரசியமான ரொமான்ட்டிக் கேரக்டர்தான் டோக்யோ.
மொத்தத்தில், நம் அன்றாட வாழ்க்கையை டோக்யோவாக அணுக, ஒரு அசால்டான முரட்டுத்தனமும், மெர்சலான திமிர்த்தனமும் தேவை.
-கலிலுல்லா