'ஆப்' இன்றி அமையா உலகு 14: தமிழ் சமையல் குறிப்புகளை வழங்கும் கைப்பேசி செயலி!

'ஆப்' இன்றி அமையா உலகு 14: தமிழ் சமையல் குறிப்புகளை வழங்கும் கைப்பேசி செயலி!
'ஆப்' இன்றி அமையா உலகு 14: தமிழ் சமையல் குறிப்புகளை வழங்கும் கைப்பேசி செயலி!
Published on

“இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது… அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது…!” என பாடலாசிரியர் பழனி பாரதியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உலக மக்களுக்கு தமிழ்நாட்டின் உணவின் சிறப்பை உணர்த்தும் பாடலாகும். உணவின் மூலம் ஒரு இனத்தின் கலாச்சாரத்தை எல்லோரிடத்திலும் கடத்த முடியும் என்றும் சொல்வதுண்டு. என்னதான் உலகம் சுற்றும் தீவிர பயண விரும்பியாக இருந்தாலும், பல உணவுகளை தேடி தேடி ரசித்து சுவைத்திருந்தாலும் ‘நம்ம ஊரு சாப்பாட்டுக்கு ஒரு தனி ருசி இருக்கு’ என சொல்பவர்களும் இங்குண்டு. 

இப்படி பல சிறப்புகளை தன்னகத்தே தாங்கி நிற்கும் தமிழ் உணவை ‘மண் மணம் கமழ’ சமைத்து சாப்பிட உதவுகிறது ‘Samayal Tamil - தமிழ் சமையல்’ என்ற மொபைல் அப்ளிகேஷன். இந்த செயலியின் மூலம் சமையல் கலையில் ‘அ..ஆ’ கற்க விரும்பும் ஆர்வலர்கள், ருசியாக சமைக்க வேண்டுமென விரும்புவர்கள், வழக்கமான சமையலில் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக புது வகையான உணவு சமைக்க வேண்டும் என விரும்புபவர்கள் பயன் பெறலாம். 

இந்த அப்ளிகேஷனில் என்ன மாதிரியான சமையல் குறிப்புகள் கிடைக்கும்?

சைவம், அசைவம், இனிப்பு, காரம், நீர்ம உணவுகள், துரித உணவுகள், பண்டிகை கால சமையல், கிராமத்து சமையல் என சகலவிதமான சமையல் சார்ந்த குறிப்புகளையும், அதன் செய்முறைகளையும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும் பயனர்கள் பெற முடியும். 

எளிய தமிழில் உணவு மற்றும் அதன் செய்முறை விளக்கத்தை கொடுக்கிறது இந்த செயலி. 

சைவ வகை சமையலில் சாம்பல் பூசணி, அவரைக்காய், கத்திரிக்காய், கேரட், கொத்தவரங்காய், கோவக்காய், சுரைக்காய், தக்காளி, பயத்தங்காய், பாகற்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், புடலங்காய், பூசணிக்காய், மாங்காய், முட்டைகோஸ், முருங்கைக்காய், வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, வெண்டைக்காய், வெள்ளரிக்காய், பலாக்காய், நுரை பீர்க்கங்காய், காளான், சுண்டைக்காய், சவ் சவ், குடைமிளகாய், மணத்தக்காளி, நார்த்தங்காய், எலுமிச்சை, கொழுமிச்சங்காய், தேங்காய், பப்பாளி, நெல்லிக்காய், நூக்கல் காய், இஞ்சி, புளி, பூண்டு, வெங்காயம், காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி மாதிரியான காய்களை கொண்டு பதார்த்தங்களை சமைக்க இந்த செயலி டிப்ஸ் கொடுக்கிறது.

அதன் மூலம் 16 வகை சாம்பார், 17 வகை சட்னி, 16 வகை சாதம், கத்திரிக்காய் பிரியாணி, சுரைக்காய் பிரியாணி, காளான் பிரியாணி, 2 வகை புலாவ், 33 வகை குழம்பு, 9 வகை புளிக்குழம்பு, 7 வகை தொக்கு, 31 வகை பொரியல், 8 வகை ஊறுகாய், 27 வகை கூட்டு, 7 வகை குருமா, 3 வகை மோர்க்குழம்பு, 7 வகை சூப், 9 வகை ஜூஸ், 3 வகை கடையல், 7 வகை பச்சடி என ரகம் ரகமாக சமைத்து சாப்பிட்டு மகிழலாம். 

அதே போல அசைவ உணவுகளில் சிக்கன், மட்டன், இறால், நண்டு, மீன், கருவாடு, முட்டை, வாத்து, வான்கோழி, காடை என 141 வகையான பதார்த்தங்களை சமைப்பதற்கான குறிப்புகளை இந்த செயலி வழங்குகிறது. எள்ளு மட்டன் குழம்பு, மட்டன் நீலகிரி குருமா, ஆட்டு மூளை அடை, மீன் புட்டு கறி, முட்டை பணியாரம், வான்கோழி சூப் மாதிரியானவை அசைவ உணவுகளில் இந்த செயலியில் புதிதாக உள்ளன. இது தவிர மீன், மட்டன், சிக்கன் சார்ந்த குழம்பு, கிரேவி, வறுவல், பொரியல் என அனைத்தையும் சமைக்க இந்த செயலி டிப்ஸ் கொடுக்கிறது.  

பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி மாதிரியான பண்டிகை நாட்களில் மட்டுமே பிரத்யேகமாக செய்யப்படும் உணவுகள் குறித்த குறிப்புகளையும் இந்த செயலியில் கிடைக்கிறது. 125 வகையான இனிப்புகள், 234 வகையான கார வகைகளை தயாரிப்பது எப்படி என்பது குறித்த விவரங்களும் கிடைக்கிறது. 

இது அனைத்திற்கும் மேலாக அக்மார்க் கிராமத்து சமையல் குறிப்புகளையும் இந்த செயலி வழங்குகிறது. பிடிகருணை குழம்பு கிராமத்து சமையலில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 

கூடுதல் அம்சங்கள்!

வெறும் சமையல் குறிப்புகளோடு மற்றும் நின்றுவிடாமல் வீடுகளில் நடைபெறும் விசேஷ நிகழ்வுகளில் மீதமாகும் உணவை வீணாக்காமல் உணவு தேவைப்படுபவர்களுக்கு கொடுக்கும் வசதிகளும் இந்த செயலியில் உள்ளன. குறிப்பாக காப்பகங்களில் உணவு தேவை உள்ளவர்களை பயனர்கள் அறிந்து கொண்டு, அவர்களுக்கு உணவு கொடுத்து உதவ வழிவகை செய்கிறது இந்த அப்ளிகேஷன். அதே போல காப்பகத்தை நிர்வகித்து வருபவர்களும் தங்களது விவரங்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம். அதன் மூலம் அவர்களுக்கு உணவு கிடைக்க இந்த அப்ளிகேஷன் ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுக்கிறது. 

நாமக்கல், அரியலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், ராமநாதபுரம், தர்மபுரி, கோயம்புத்தூர், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் மாதிரியான ஊர்களில் இந்த செயலியை பயன்படுத்தி உணவினை தேவை உள்ளவர்களுக்கு வழங்கலாம். இருந்தாலும் சம்பந்தப்பட்ட ஊர்களில் உணவு தேவைப்படுபவர்கள் இந்த செயலியில் விவரங்களை ரிஜிஸ்டர் செய்தால் மட்டுமே அதனை மற்ற பயனர்களால் அறிந்து கொள்ள முடியும். 

மேலும் வீட்டு விசேஷங்களுக்கு தேவையான உணவை சமைத்து கொடுப்பதற்கான சமையல் மாஸ்டரையும் இந்த அப்ளிகேஷன் மூலம் கண்டறிந்து கொள்ள முடிகிறது. சமையலறை சார்ந்த டிப்ஸ்களையும் இந்த செயலி அள்ளி வழங்குகிறது. 

பயனர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்கள் கொடுக்கிற சமையல் குறிப்புகளையும் இந்த செயலியில் சேர்க்க முடியும். அதற்கென ‘பயனாளர் சமையல்’ என பிரத்யேக டேப் கொடுக்கப்பட்டுள்ளது.  

இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துவது எப்படி?

கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இந்த செயலியை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு பயனர்கள் மட்டுமே இந்த செயலியை பயன்படுத்த முடியும். இந்த செயலியை இணைய இணைப்பு இல்லாமல் பயன்படுத்தலாம். இருப்பினும் இதில் உள்ள சில பிரத்யேக அம்சங்களை பயன்படுத்த இணைய இணைப்பு அவசியம். இதுவரையில் சுமார் ஒரு மில்லியன் பயனர்கள் இந்த செயலியை டவுன்லோட் செய்துள்ளனர். பயன்படுத்த மிக எளிதாக உள்ளது என்பதுதான் பெருவாரியான பயனர்கள் சொல்லியுள்ள ரிவ்யூ. இணைய இணைப்புடன் பயன்படுத்தும் போது விளம்பரங்கள் வருகின்றன. வடிவமைப்பாளர்கள் அதை தவிர்த்தால் இந்த அப்ளிகேஷன் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்பது மாதிரியான கலவையான ரிவ்யூ இருப்பதையும் பார்க்க முடிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com