‘மின்னல் முரளி’ பார்த்துவிட்டு ’எப்படி சார் இப்படி நடிச்சிருக்கீங்க’ன்னு எல்லோருமே நெகிழ்ச்சியுடன் பாராட்டுகிறார்கள். ’உங்களைக் கட்டிப்பிடிச்சிக்கலாமா?’ என்றெல்லாம் கேட்பதைப் பெரிய பாராட்டுகளாக நினைக்கிறேன். இவ்வளவு பெரிய ரீச்சை எதிர்பார்க்கவில்லை” என்று பெருமகிழ்ச்சி + உற்சாகத்துடன் பேசுகிறார் நடிகர் குரு சோமசுந்தரம்.
சமீபத்தில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ‘மின்னல் முரளி’ இதுவரை இந்தியாவிலிருந்து வெளியான சூப்பர் ஹீரோ படங்களில் அதிசயமாய் ரசிகர்களின் ஏகோபித்த பேராதரவைப் பெற்றிருக்கிறது. ’சூப்பர் ஹீரோ’ டொவினோ தாமஸுக்கு ‘சூப்பர் வில்லன்’ ஆக டெர்ரரான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் குரு சோமசுந்’தரம்’. அதுவும், காதல் காட்சிகளில் ’இதயம் முரளியாக’ வந்து பார்வையாளர்களின் இதயங்களை கொள்ளையடித்துள்ளார். அவரிடம் சிலக் கேள்விகளை முன்வைத்தோம்,
சாதுவான கதாபாத்திரங்களிலேயே நடித்துவிட்டு திடீரென்று ’சூப்பர் வில்லன்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளீர்களே?
”இதுதான் நான் ரொம்ப நாள் காத்திருந்த கதாபாத்திரம். எனக்கு சிறு வயதிலிருந்தே காமிக்ஸ் புத்தகங்கள்தான் படிக்கப் பிடிக்கும். ராணி காமிக்ஸ் புத்தகம் நிறைய படிப்பேன். மதுரையில் இருக்கும்போது புத்தகங்கள் வாங்கி படிக்கும் சூழல் இல்லை. அதனால், ஒரு நாளைக்கு 5 காசு, 10 காசு என்று வாடகைக்கு எடுத்துப் படித்திருக்கிறேன். இரும்புக்கை மாயாவி இன்னும் ஞாபகம் இருக்கிறது. அதற்கேற்றார்போல், ‘மின்னல் முரளி’ படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தபோது சந்தோஷமாகிவிட்டேன்.
மூணாரில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது, இயக்குநர் ஃபாசில் ஜோசப் போன் செய்தார். ’படப்பிடிப்பில் இருக்கிறேன்’ என்றதும் அங்கேயே நேரடியாக வந்து ஒன்றரை மணி நேரம் கதை சொன்னார். அவர், கதை சொல்லும் விதமே பயங்கரமாக இருந்தது; பிடித்திருந்தது. கதையைக் கூறிக்கொண்டே திடீரென்று செல்லை எடுத்து ஃபேக்ரவுண்ட் மியூசிக் எல்லாம் போட்டுவிடுவார். அவரிடம் ’இந்தக் கதைக்கு எப்படி என்னை தேர்ந்தெடுத்தீங்க?’ன்னு கேட்டேன். ”வேற யாருங்கப் பண்ணமுடியும்’?. மலையாளத்தில் தெரிந்த நடிகர்களை போட்டால் இவர்தான் வில்லன் என்று தெரிந்துவிடும். அந்தமாதிரியும் தெரியக்கூடாது. அதேசமயம் தெரிந்த நடிகராகவும் இருக்கணும். இது எல்லாத்துக்கும் நீங்க கரெக்ட்டா இருந்தீங்க. உங்களின் ’வஞ்சகர் உலகம்’ படம் எல்லாம் பார்த்துவிட்டுத்தான் தேர்ந்தெடுத்தேன்’ என்று கோபத்துடன், அவர் பதிலளித்தது எனக்கு பெருமையாக இருந்தது. ’மின்னல் முரளி’ படத்திற்காகவே மலையாள மொழி கற்றுக்கொண்டு சொந்தக் குரலில் பேசினேன்”.
’மின்னல் முரளி’யாக டொவினோ தாமஸ். நீங்கள் படம் முழுக்க ‘இதயம் முரளி’யாக வருகிறீர்களே? நிஜத்தில் இதுபோன்ற காதல் இருந்துள்ளதா?
“ஒன்சைடு லவ் என்பது நம் ஊரில் ரொம்ப அதிகம். பேசுவதற்கு வாய்ப்பு அதிகம் கிடைக்காது. பல இடங்களில் ஆண்கள் - பெண்கள் பள்ளி என்று தனித்தனியாக வைத்துள்ளார்கள். ஆண் பெண்ணிடமும், பெண் ஆணிடமும் பேசுவதற்கு வெட்கமும் தயக்கமும் நிறைய இருந்தது. இருபாலர் கல்வி என்பது என் வாழ்க்கையில் ரொம்பக் கம்மி. அதனால், நான் நிறைய பெண்களைக் காதலித்துள்ளேன். நிறைய காதலிகள் இருக்கிறார்கள். ஆனால், நான் காதலித்தது அவர்களுக்குத் தெரியவே தெரியாது. இது எனக்கு மட்டுமல்ல 70ஸ், 80ஸ் காலகட்டத்தில் பிறந்தவர்களுக்கான அனுபவம். அதுவே, இப்போதுள்ள தலைமுறையினருக்கு பழகுவது ஈஸியாக உள்ளது. முன்பெல்லாம் அட்ரஸ் கண்டுபிடித்து பெயர் போடாமல் வெறும் சிம்பள் மட்டும் வைத்து பொங்கல் வாழ்த்து அனுப்பிவிடுவோம். நமக்கும் யாராவதும் அனுப்புவாங்களா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்போம். இந்த அனுபவங்களையெல்லாம் பெற்ற ஆள் நான். அதனால், இந்தக் கதாபாத்திரத்தை ரசித்து நடித்தேன். படத்தின் கடைசியில் ‘ரொம்ப நாளா சொல்லணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, எப்படி சொல்றதுன்னு தெரியல’ன்னு நான் சொன்னதை நிஜ வாழ்க்கையில் எல்லாம் சேர்ந்த அனுபவத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கிறேன்”.
டொவினோ தாமஸுடன் நடித்த அனுபவம்?
”டொவினோவுடன் நடிக்கும்போது ஏதோ ஜாலியா விளையாடிட்டு வந்தமாதிரி இருந்துச்சி. பெரிய நடிகருடன் நடிக்கிறோம் என்ற உணர்வே வரவில்லை. அந்தளவுக்கு நான் மட்டுமல்ல எல்லோருடனும் நட்புடன் பழகினார். ஷூட்டிங்கில் ரொம்ப எனர்ஜியோட இருப்பார். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வது, இளைஞர்களுடன் ஒரு கனெக்ஷன் வைத்திருப்பது என வேற மாதிரி அவர். ஏற்கெனவே, ‘அந்த ஷிபு கேரக்டர் எனக்கு கொடுக்க முடியுமா’ன்னுதான் கேட்டிருந்தார். அவருக்கு ரொம்ப பிடித்தக் கதாபாத்திரம் அது. இப்போ, படம் வெளியானதும் ரொம்ப ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டோம். அடிக்கடி போனில் பேசிக்கொள்கிறோம். பேசும்பொதெல்லாம்‘பார்த்தீங்களா... பார்த்தீங்களா... எல்லோரும் பாராட்டுறாங்க. போனை எடுத்து ஓபன் பண்ணாலே உங்க முகத்தைப் போட்டுத்தான் பாராட்டுறாங்க. சோசியல் மீடியா ஃபுல்லா நீங்கதான்” என்று உற்சாகப்படுத்துகிறார்”.
’சூப்பர் ஹீரோ’ படங்கள் என்றாலே வில்லன்கள் உடல்வாகு வேற லெவலில் இருக்குமே? அந்தமாதிரி எந்த மாற்றமாவது உங்களை பண்ணச் சொன்னார்களா?
”நான் உடலளவில் எந்த மாற்றமும் செய்யவில்லை. முன்னாடில்லாம் வெளிநாட்டுப் படங்கள் பார்க்கணும் என்பது கடினம். இப்போ, ஓடிடியிலேயே பார்த்துவிடுகிறார்கள். அதனால், மக்களின் ரசனையும் மாறிவிட்டது. வில்லன் என்றால் உயரமான உடல்வாகுடன் மிரட்டலாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த மாற்றத்தை ’மின்னல் முரளி’ ரொம்ப உறுதிப்படுத்திவிட்டது. ’அடப்பாவி, இப்படியும் வில்லன் இருப்பானா’... இவன் ’லவ்வபிள் வில்லன்’னா இருக்கானே என்கிறார்கள்”.
படத்தில் சாக்குப்போட்டு முகத்தை மூடிக்கொண்டு ஓடியதெல்லாம் பட்ஜெட் காரணமா? அல்லது திரைக்கதையே அப்படித்தானா?
“பொதுவாகவே பட்ஜெட் படம் என்றால் கஷ்டப்பட்டு படம் எடுப்பவர்கள் பெரிய விஷயத்தை ஈஸியாக காட்டிவிட்டுச் செல்வார்கள். ’உன்கிட்ட ரெண்டு ரூபாய்தான் கொடுப்பேன்’ என்றால் யோசனை மாறும். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அதுதான், ‘மின்னல் முரளி’ படத்திலும் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதனால், இயக்குநரின் புத்திசாலித்தனத்தை தூண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்”.
நீங்களும் டொவினோ தாமஸும் மின்னல் வேகத்தில் ஓடியதெல்லாம் உண்மையாக எடுக்கப்பட்டதா?
”பாதி உண்மை; பாதி கிராஃபிக்ஸ். வெளிநாட்டு ஒளிப்பதிவாளரும் இந்திய ஒளிப்பதிவாளரும் சேர்ந்து எடுத்தார்கள். மேலும், சிலக் காட்சிகளில் என்னைப்போல உருவம் கொண்டவரையும் டொவினோவைப்போல உருவம் கொண்டவரையும் டூப் வைத்து ஓட விட்டார்கள்”.
உங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ?
“’அயர்ன்மேன்’ ராபர்ட் டவுனி ஜுனியர் ரொம்பப் பிடிக்கும். ரொம்ப ஸ்டைலிஷா அந்தக் கேரக்டரை எடுத்துப்போனார். கற்பனையில்தான் நடிப்பை காட்டவேண்டும். மக்களை நம்ப வைப்பது கடினம். ஸ்பைடர் மேனில் நடித்தவர்கள் ஜிம்னாஸ்டிக் எல்லாம் பழகினவர்கள். அதற்கான, உடலமைப்பும் கொண்டவர்கள். ஆனால், ’அயர்ன்மேன்’ பொறுத்தவரை அப்படி கிடையாது”.
நிஜத்தில் ‘சூப்பர் பவர்’ கிடைத்தால் என்ன பண்ணுவீர்கள்?
”ஹீரோவாகிவிடுவேன். வில்லன் ஆகமாட்டேன்”.
தமிழில் ’ஆரண்ய காண்டம்’, ‘ஜோக்கர்’ படங்களுக்குப் பிறகு சரியான கதாபாத்திரம் அமையவில்லை என்று நினைக்கிறீர்களா?
“இல்லவே இல்லை. ஏனென்றால், கதாபாத்திரத்தைத் தேடிச்செல்வது நடிகனின் வேலை அல்ல. இந்தக் கதாபாத்திரத்தை இவர் கொண்டுபோவார் என்பது இயக்குநருக்குத் தெரியும். தயாரிப்பாளரிடம் வற்புறுத்தினால் நிறைய நடிகர்களைக் திரையில் காணமுடியும். ’ஆரண்ய காண்டம்’ படத்திற்குப் பிறகு எனக்கு நிறைய உறுதுணை கதாபாத்திரங்கள் வந்தது. ’ஜிகர்தாண்டா’ படத்திற்குப் பிறகும் டீச்சர் கதாபாத்திரங்கள் வந்தது. ஒரே மாதிரி நடிப்பிலேயே நாம் அடைந்துவிடக்கூடாது என்று ஏற்றுக்கொள்ளவில்லை. பசுபதி அண்ணாவும் ஒரேமாதிரி கதாபாத்திரங்கள் வருகிறது என்று கொஞ்சம் ஏற்காமல் இருந்தார். அதன்பிறகுதான், ‘சார்பட்டா’ ஏற்றுக்கொண்டார். நானும் அப்படி காத்திருக்கிறேன்”.
அடுத்தப் படங்கள்?
தமிழில் ‘மாமனிதன்’, ‘இது வேதாளம் சொல்லும் கதை’, ‘இந்தியன் 2’, சோனி லைவ்வில் ’மீம் பாய்ஸ்’ வெப் சீரிஸ் பண்ணிருக்கேன். சசிக்குமார் சாருடன் ‘பரமகுரு’ படம் முடியவிருக்கிறது. மலையாளத்தில் ஒரு படம் முடித்துள்ளேன்”.
சென்னைதான் சினிமாவின் தலைநகரம். நீங்கள் ஏன் திருவண்ணாமலையிலேயே இருக்கிறீர்கள்?
”நான் கிராமத்தில் வளர்ந்தவன் என்பதால் என்னால் அந்த சூழலை விட்டு வரமுடியாது. மரங்கள், செடிகளுடன்தான் வாழப்பிடிக்கும். என்னால் ஒரு கட்டிடக் காட்டுக்குள் இருக்கமுடியாது”.
-வினி சர்பனா