கேரளா மற்றும் மும்பையில் இருந்து ஹீரோயின்களை இறக்குமதி செய்கிறது, தமிழ் சினிமா! காரணம் தமிழ்ப் பெண்கள், நடிப்பதற்கு முன்வருவதில்லை. புகழ், பணம் மீது பேராவல் கொண்டாலும் நம்மூர் பெண்கள் நடிக்க வராததற்கு, பெண்களை சினிமா மோசமாகக் கையாள்கிறது என்கிற பொதுவான கருத்தும் காரணமாக இருக்கலாம்.
மிண்டி காலிங் (Mindy Kaling), சென்னையில் பிறந்திருந்தால் நடிகை ஆகியிருக்க மாட்டார். அமெரிக்காவில் பிறந்ததால் இப்போது ஹாலிவுட் நடிகை! 'ஹாலிவுட்டின் ஜாலியான, வெற்றிகரமான பெண்' என்கிறார்கள் இவரை.
வேரா சொக்கலிங்கம் என்ற இயற்பெயரைக் கொண்ட மிண்டி காலிங்கின் அப்பா தமிழர். ஆர்கிடெக்ட். அம்மா ஸ்வாதி, பெங்காலைச் சேர்ந்தவர். மகப்பேறு மருத்துவர். ஆரம்பத்தில் நைஜீரியாவில் இருந்தவர்கள் அங்கிருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தனர். மாசாசூசெட்ஸில் உள்ள கேம்பிரிட்ஜில் பிறந்தார் இவர். தங்கள் மகளுக்கு அழகான அமெரிக்கப் பெயரைச் சூட்ட நினைத்தனர் பெற்றோர். அப்போது பிரபலமான, 'மோர்க் அண்ட் மிண்டி' என்ற டி.வி.ஷோவின் தாக்கத்தில் மிண்டி என்ற பெயரை மகளுக்கு வைத்தனர். ஆசையாக. வளர்ந்த பிறகு பெயருக்குப் பின்னால் இருந்த சொக்கலிங்கத்தின் (chockalingam) நடுவில் இருந்த காலிங்கை (kaling) மட்டும் எடுத்துக்கொண்டு மிண்டி காலிங் ஆகிவிட்டார். இந்த பெயரே நிரந்தரமாகிவிட்டது.
படிக்கும்போது காமெடி நாடகக் குழுவில் இணைந்த மிண்டி, நடிக்கவும், நாடகங்கள் எழுதவும் செய்தார். அவர் எழுத்தில் ஏதோ ஈர்ப்பு இருப்பதாக நினைத்தவர்கள், பாராட்டினார்கள். தொடர்ந்து எழுதினார். தனது 24-வது வயதில் அமெரிக்காவின் என்பிசி சேனலில் ஒளிபரப்பான 'தி ஆபீஸ்' என்ற காமெடி தொடருக்கு எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இதில், பல எபிசோட்களை பல பேர் எழுதினார்கள். அதில் ஒரே ஒரு பெண் எழுத்தாளர், மிண்டிதான்!
22 எபிசோடுகளை எழுதினார் மிண்டி. அதில் 'நயாகரா' மற்றும் 'தீபாவளி' எபிசோட்கள் மிண்டிக்குப் பாராட்டுகளைக் குவித்தன. அவர் எழுதி நடித்த 'தீபாவளி' தொடர், இந்தியர்களுக்கு அதிகம் பிடித்த தொடரானது. இந்த 'த ஆபீஸ்' தொடரில் அவர் நடித்த கெல்லி கபூர் கேரக்டர், ரீச் ஆனதை அடுத்து, சில தொடர்களை நடித்து இயக்கவும் செய்தார். இதன் வரவேற்பை அடுத்து, 'த மிண்டி புராஜக்ட்' என்ற காமெடி தொடரை தயாரித்து எழுதி நடிக்க, பாக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இதன் வரவேற்பு மிண்டியின் புகழை இன்னும் அதிகரித்தது.
'தி 40 இயர்ஸ் ஓல்ட் விர்ஜின்' என்ற ஹாலிவுட் காமெடி படம் மூலம் ஹாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் மிண்டி. தொடர்ந்து, 'அன்கம்பனிட் மைனர்ஸ்', 'லைசென்ஸ் டு வெட்', 'நைட் அட் மியூசியம்', 'நோ ஸ்டிரிங்ஸ் அட்டாச்ட்', 'தி பைவ் இயர் என் கேஸ்மென்ட்', 'திஸ் இஸ் த எண்ட்', 'இன்சைட் அவுட்' உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.
2013-ல் உலகில் மிகவும் செல்வாக்குள்ள 100 பேரில் ஒருவராக இவரை 2012 ஆம் ஆண்டு தேர்ந்தெடுத்திருக்கிறது டைம் பத்திரிகை. 2014 ஆம் ஆண்டு இந்த வருடத்தின் பெண் என்று இவரை வர்ணித்திருந்தது ’கிளாமர்’ இதழ்!.
தனது இளம் வயது அனுபவங்கள், நட்பு, உறவுகள் ஆகியவற்றைப் பற்றி இவர் எழுதிய, 'எவ்ரி ஒன் ஹேங்கிங் அவுட் வித்தவுட் மீ? (அண்ட் அதர் கன்சர்ன்ஸ்)’ என்ற புத்தகம் அமெரிக்காவில் அதிக விற்பனையான புத்தகங்களில் ஒன்று!
மிண்டி, ’த ஆபிஸ்’ தொடரில் பணியாற்றியபோது உடன் பணிபுரிந்த பி.ஜே.நோவாக்கை காதலித்தார். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு அழகான பெண்குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் மிண்டி.
'சின்ன வயசுல நான் ஒரு என்டர்டெயினரா ஆவேன்னு எங்க வீட்டுல யாரும் நினைச்சுப் பார்க்கலை. எனக்கு வீட்டுல சொல்லிக் கொடுத்ததெல்லாம் பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும், படிக்கணும், அமைதியா இருக்கணும். அப்பா- அம்மாவை மதிக்கணும்ங்கறதைத்தான். என் குழந்தைப் பருவம் இப்படித்தான் இருந்தது. அப்பாவை விட அம்மாகிட்டதான் நான் செல்லம். அவங்ககிட்ட இருந்துதான் நகைச்சுவை உணர்வு எனக்கு வந்திருக்கும்னு நினைக்கிறேன்' என்கிற இந்த ஹாலிவுட் தமிழச்சியின் அம்மா தற்போது உயிரோடில்லை!