பெரியார் மீது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த மதிப்பு உண்டு. 1978-79ல் எம்.ஜி.ஆர்.ஆட்சியில் பெரியார் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரியார் நினைவுத் தூண் எழுப்பப்பட்டது. பெரியாரின் பொன்மொழிகள் நூல் வடிவில் கொண்டுவரப்பட்டன.1979-ம் ஆண்டு பெரியார் பிறந்த நாளில் ஈரோடு மாவட்டத்திற்கு முதன்முதலில் பெரியார் மாவட்டம் என எம்ஜிஆர் பெயர் சூட்டினார். பெரியாருக்கும் எம்ஜிஆருக்கும் டிசம்பர் 24 ஆம் தேதி தான் நினைவு நாள்.
சில நாட்களுக்கு முன்பு கோவையில் பெரியார் சிலையின் மீது காவிச்சாயம் ஊற்றியதாக பரபரபரப்பு கிளம்பியது. இதுதொடர்பாக திராவிடக்கட்சிகள் போர்க்கொடி தூக்கினர். பின்னர் இந்து அமைப்பை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சில நாட்களில் கோவையில் 4 கோயில்களில் முன்பு மர்ம நபர்கள் டயர்களை எரித்து கோயிலின் பொருட்களை சேதப்படுத்தினர். இதுதொடர்பாக அரசு உத்தரவின்பேரில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அரசு மெத்தனப்போக்காக செயல்படுவதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதை கண்டுகொள்ளாத அதிமுக அரசு சட்டம் கடமையை செய்துள்ளதாக தெரிவித்து வந்தது.
இந்த காலகட்டத்தில் புதுச்சேரி விழுப்புரம் புறவழி சாலையில் வில்லியனூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவி துண்டு அணிவித்து விட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் இந்த விஷமிகளை கண்டறிந்து தோலுரித்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் எனவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர்களும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இதனிடையே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த மர்மநபர்களை கண்டுப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் கடும் எதிர்ப்பு எதை காட்டுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அதிமுகவின் கோவை சத்யன் கூறுகையில், “எம்.ஜி.ஆர் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர். அவருக்கு மதச்சாயம் பூசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒழுங்கீன செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களை எச்சரிக்கை செய்ய நிர்வாக ரீதியாக கூட முதலமைச்சர் இந்த சம்பவத்தை அணுகியிருக்கலாம். அதற்கான பொறுப்பும் அவருக்கும் உள்ளது. மரியாதை நிமித்தமாக சால்வை அணிவிப்பது வேறு. சூழ்நிலைகளை பொறுத்து அதற்கு ஏற்றவாறு சால்வை அணிவித்து கலகம் விளைவிப்பது வேறு.
அமைதியை சீர்குலைக்கும் உள்நோக்கத்தோடு இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்த செயலை யார் வேண்டுமானாலும் செய்திருக்கலாம். அபிமாணியாக இருக்கலாம். காவி மீது பற்றுடையவர்களாக இருக்கலாம். உள்நோக்கத்துடனு இருக்கலாம். ஆனால் இந்த சூழ்நிலையில் அது ஏற்புடையதாக இல்லை என்பதுதான் சொல்ல வருகிறோம். எல்லா மதமும் ஒன்றுதான். எல்லா ஜாதியும் ஒன்றுதான். ஏற்றத்தாழ்வு கிடையாது என்பது அதிமுகவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட ஒரு சாயத்தை பூச முயன்றால் எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து பாஜகவின் எஸ்.ஆர்.சேகர் கூறுகையில், “காவி என்பது இந்தியாவின் புனிதமான நிறம். காவி என்பது ஒரு தீண்டத்தகாத விஷயமல்ல. தேசவிரோதமல்ல. எம்ஜிஆருக்கு காவி துண்டு அணிவித்தவரின் உள்நோக்கம் தெரியாமல் இவ்வளவு காட்டமான அறிக்கை வெளியிட்ட முதல்வரின் உள்நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. காவியை வைத்து ஓட்டு அரசியலில் ஈடுபடுவது என்றைக்குமே கிடையாது. இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக காவி என்றைக்குமே கிடையாது. 100 ஆண்டு சரித்திரம் உள்ள ஒரு கொள்கைக்கு இவ்வளவு பாதுகாப்பு கொடுக்கிறார் முதல்வர், பத்தாயிரம் ஆண்டுகள் பாரம்பரிய நிறம் காவி. முனிவர்கள் அணிந்த நிறம் காவி. கலரை வைத்து விமர்சனம் செய்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரது பேச்சில் உள்நோக்கம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து திமுகவின் பரந்தாமன் கூறுகையில், “எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமிதான். காரணம், தமிழகத்தில் இதுவரை பலமுறை பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டபோது இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும். பெரியார் குறித்து அதிமுகவினர் பேசுவார்களே தவிர அதன்படி நடக்கமாட்டார்கள். சிலைகள் அவமதிக்கப்பட்டபோது எடப்பாடி அரசு சட்டம் ஒழுங்காகத்தான் பார்த்தது. கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் இப்போது பயம் வந்திருக்கும். இதற்கே எடப்பாடி இவ்வளவு பெரிய கண்டனத்தை தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
எடப்பாடி அரசில் புலனாய்வுத்துறை தோற்றுப்போயுள்ளதா? யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது அரசு? இந்த விஷயத்தில் ஒபிஎஸ்சுக்கும் இபிஎஸ்சுக்கும் முரண்பாடு உள்ளது. முதலமைச்சர் வன்மையாக கண்டிக்கிறார். ஆனால் ஒபிஎஸ் காவித்துண்டை போட்டுக்கொண்டு மோடிக்கு ஆதரவாக செயல்படுகிறார். கட்சியின் நிறுவனர் எம்ஜிஆரை காப்பாற்றக்கூட இவர்களால் ஒன்று சேர்ந்து வரமுடியவில்லை” எனத் தெரிவித்தார்.