மேகதாது அணை விவகாரத்தில், அணை கட்வதற்கு ஆதரவாக கர்நாடக பாஜகவும், அணை கட்டுவதற்கு எதிராக தமிழ்நாடு பாஜகவும் குரலெழுப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் தமிழக பாஜகவின் அரசியல் கணக்கு என்ன? விவசாயிகள் பார்வை என்ன? - இந்தக் கட்டுரையில் விரிவான பார்க்கலாம்.
கர்நாடகம் மாநிலம் மேகதாது என்னும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதில் கர்நாடக பாஜக உறுதியாக உள்ளது. இதற்கு முன்பு முதல்வராக இருந்த எடியூரப்பா மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து தொடர்ந்து வலியுறுத்தினார். அதன்பின்னர் தற்போது கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை தனது முதல் பேட்டியிலேயே, ‘மேகதாது அணை என்பது எங்களின் உரிமை, அதனால் உறுதியாக அணையை கட்டுவோம்’ என்று சொல்லியிருந்தார். மேகதாது அணை கட்டுவதற்கு மாநில அரசின் சார்பில் 9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
கர்நாடக பாஜகவை எதிர்க்கும் தமிழக பாஜக:
மேகதாது அணை விவகாரத்தில், தற்போது தீவிரமாக கர்நாடக அரசுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது தமிழக பாஜக. கடந்த சில ஆண்டுகளாகவே மேகதாது அணை தொடர்பான சர்ச்சை இருமாநிலங்களிலும் அனலை கிளப்பினாலும், தமிழக பாஜக தரப்பிலிருந்து இதுவரை காத்திரமான குரல் எதுவும் எழுந்ததில்லை. ஆனால் தற்போது அண்ணாமலை பாஜக தலைவராக பதவியேற்ற பின்னர் மிக அழுத்தமாக மேகதாது அணை கட்டக்கூடாது என்று அவர் பேசி வருகிறார். மேலும், மேகதாது அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட் 5ஆம் தேதி தஞ்சாவூரில் உண்ணாவிரத போராட்டத்தையும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “ பாஜக என்பது தேசிய கட்சியாக இருந்தாலும், நாங்கள் எல்லா மாநிலங்களிலும் தேசிய உணர்வில் ஒற்றுமையுடன் நிற்கிறோம். ஆனால் மாநில உரிமைகள் என்று வரும்போது அந்தந்த மாநில நலன்களுக்காகவே நாங்கள் நிற்போம். அதன்படி மேகதாது அணை கட்டப்படக்கூடாது என்பது எங்களின் கோரிக்கை. ஒரு ஆற்றின் கீழ்ப்பகுதியில் பாசனம் பெறும் மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் அணையை கட்டக்கூடாது என்பது சட்டம். அதன்படி தமிழகத்திற்கு எதிரான இந்த அணையை கர்நாடகம் கட்டக்கூடாது, இந்த அணைக்காக ஒரு செங்கல் கூட கர்நாடகம் வைக்க விடமாட்டோம்” என தெரிவித்தார்.
தமிழ்நாடு பாஜகவின் அரசியல் கணக்கு என்ன?
கடந்த 20 ஆண்டுகளாகவே தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட கிடையாது, அதன் காரணமாக தமிழக உரிமை சார்ந்த விஷயங்களில் பாஜக அமைதியாகவே இருந்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைந்த பிறகு, தமிழகத்திலும் பாஜகவை வளர்க்க மேலிடம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
எப்படியேனும் 2021 தேர்தலில் கூட்டணி கட்சியான அதிமுகவை வெற்றிபெற வைத்துவிட வேண்டும், ஆட்சியில் பங்கேற்கவேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த இரு ஆண்டுகளாகவே தமிழகத்தில் பல கட்சியில் இருந்தவர்களையும் பாஜகவில் இணைத்தனர். உறுப்பினர் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எல்லா ஊர்களிலும் கொடியை ஏற்றினார்கள். கிட்டத்தட்ட திமுக, அதிமுக பாணியில் கீழ் மட்டம் வரை கட்சியை வளர்க்க பணிகளை மேற்கொண்டனர். இதற்கெல்லாம் 2021 தேர்தலில் முழுமையான பலன் கிடைக்கவில்லை என்றாலும், 4 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். இதனால் மீண்டும் சுறுசுறுப்பாகிவுள்ள கமலாலயம், தமிழ்நாட்டு அரசியலை புதிய உத்திகளுடன் அணுக தொடங்கியுள்ளது, மத்திய தலைமையும் இதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. இதன் விளைவாகவே முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டு, அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவராக்கப்பட்டுள்ளார். மாநில நலன் சார்ந்த விஷயங்களில் குரல் கொடுத்தால் மட்டுமே தமிழகத்தில் வளரலாம் என்பதால், முதன் முதலாக மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் பக்கம் தமிழக பாஜக நிற்கிறது, இனிவரும் காலங்களிலும் இந்த யுக்தி தொடரலாம் என்று கணிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
விஷமநாடகம் நடத்துகிறது பாஜக:
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக பாஜகவின் நிலைப்பாடு குறித்து பேசும் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுந்தர.விமல்நாதன் “காவிரி தீர்ப்பாயம் 192 டி.எம்.சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொடுக்கவேண்டும் என்று முதலில் தீர்ப்பளித்தது. அதன் பிறகு வந்த இறுதி தீர்ப்பில் உச்சநீதிமன்றம் அதிலிருந்து 14.75 டி.எம்.சி தண்ணீரை பெங்களூருக்கான குடிநீர் தேவைக்கு வழங்கவேண்டும் என்று சொன்னார்கள், அதிலேயே நமக்கு அநீதி இழைக்கப்பட்டது. இப்போது மீண்டும் பெங்களூருவின் குடிதண்ணீருக்காக மேகதாதுவில் 67.16 டி.எம்.சி கொள்ளளவில் அணை கட்டப்போவதாக சொல்வது சட்ட விரோதம்.
மேகதாது அணை 67.16 டி.எம்.சி கொள்ளளவில் கட்டப்படுகிறது. இது கபினி, ஹேரங்கி உள்ளிட்ட அணைகளை விடவும் பெரியது. இந்த அணை கட்டப்பட்ட பிறகு ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழகத்துக்கு வர வாய்ப்பில்லை. மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசும், மத்திய அரசும் பல வகைகளில் லாபி செய்கிறது. அதில் ஒன்றுதான் தற்போது தமிழ்நாடு பாஜக மேகதாது அணைக்கு எதிராக குரல் கொடுப்பது போல நடத்தும் கபட நாடகம். மத்திய அரசும் பாஜகவின் கையில்தான் உள்ளது, கர்நாடக அரசும் பாஜகவின் வசம்தான் உள்ளது. அப்படியிருக்கையில் சட்டவிரோதமாக அணைகட்டுவோம் என்று பேசும் கர்நாடகாவை மத்திய அரசு நினைத்தால், ஒரே வார்த்தையில் வாலை சுருட்ட வைக்கலாம். ஆனால் ‘பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும்’ மோடி அரசின் விஷம நாடகத்தின் ஒரு பகுதியாகத்தான் தமிழ்நாடு பாஜக தற்போது தமிழகத்திற்கு ஆதரவானவர்கள் போல போராட்டத்தை அறிவித்துள்ளது.
நான்கு மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் கர்நாடகம் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதலை பெறவேண்டும். இருந்தாலும் கர்நாடக அரசு எந்த மாநில ஒப்புதலும் இல்லாமல், மேகதாதுவில் அணையை கட்டுவோம் என பேசக் காரணம், மத்திய அரசின் துணிவில்தான். அப்படிப்பட்ட மத்திய பாஜக அரசையும், பிரதம்ர் மோடியையும் எதிர்த்துதான் தமிழ்நாடு பாஜக போராட்டம் நடத்தவேண்டும். தமிழக மக்களும், விவசாயிகளும் பாஜக ஆடும் கபட நாடகத்தை பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்” என தெரிவித்தார்.