வாழ்தலுக்கு பெரிய அளவில் பணமோ, இடமோ எதுவும் தேவையில்லை. வாழ வேண்டும் என்ற எண்ணமே வாழ்வதற்கு தேவையான சூழலை உருவாக்கி கொடுக்கும் என்பதை நிரூபித்திருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த சந்திரசேகர். யார் அவர்.. என்ன செய்தார் என்பது குறித்து பார்ப்போம்.
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடம் மாட்டத்தில் உள்ள சுல்லியா தாலுகாவுக்கு உட்பட்ட கிராமத்துக்கு அருகே உள்ள காட்டில் வசித்து வருகிறார் சந்திரசேகர். 56 வயதான அவரின் பகலும், இரவும் அங்கிருக்கும் ஒரு ஒரே, 'ஹிந்துஸ்தான் அம்பாஸிட்டர்' காரிலே கழிந்திருக்கிறது. அவருக்கு அது போதுமானதாக இருந்திருக்கிறது. பெரிய பிரமாண்ட வாழ்க்கையை விரும்பாதவர், 17 வருடங்களாக அம்பாஸிட்டர் காரிலேயே வாழ்ந்து வருகிறார். அங்கிருந்து 3-4 கிலோமீட்டர் தூரம் காட்டில் நடந்து சென்று மீண்டு தன்னுடைய அம்பாஸிட்டரில் கூடடைந்துவிடுகிறார்.
காருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் காருக்கு மேற்புறமாக ஷெட் ஒன்றையும் அமைத்திருக்கிறார். அந்த காருக்குள் ஆகாஷ்வானியிலிருந்து ஹிந்தி பாடல்களை ஒலிக்க விட்டுக்கொண்டிருக்கிறது ஒரு பழங்கால ரேடியோ. காரை வீடாக்கி, ரேடியோவை தனது என்டர்டெயின்மென்டாக கருதி வாழ்ந்து வருகிறார். வன வாழ்க்கைக்கு தன்னை பழக்கப்படுத்திக்கொண்டவர், 17 ஆண்டுகளாக காரையே வீடாக்கிக்கொண்டுள்ளார். வன வாழ்க்கைக்கு பழகிகொண்ட சந்திரசேகர், இரண்டு செட் ஆடைகள், ஒரு ஜோடி செருப்பு என தன் வாழ்வாதாரத்தை சுருக்கிகொண்டு வாழ்கிறார். நீண்ட தாடி, மெலிந்த உடலுடன் காணப்படும் அவருக்கு காட்டில் இருக்கும் ஆறுகள் தான் குளியள் அறைகள்.
சந்திரசேகர் பணத்தை நம்பவுதில்லை. சொல்லபோனால் பணத்தை தொட்டு பார்த்தே பல ஆண்டுகள் இருக்கும். வாழ்வதற்கு பணம் வெறும் ஒரு டூல் என்பதை அவர் நம்புகிறார். காடுகளில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு கூடைகளை அவரே தயாரித்து, அருகிலுள்ள கிராமங்களில் விற்றுவிடுகிறார். அதற்கு பணம் வாங்குவதில்லை. மாறாக, சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பொருட்களை பெற்றுக்கொள்கிறார். அவரிடம் ஒரு சைக்கிளிலும் இருக்கிறது. அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று மளிகை பொருட்களை வாங்க அதை பயன்படுத்திக்கொள்கிறார். அவருக்கு ஒரே ஒரு ஆசைதான். அது அவருடைய திரும்ப பெறுவது. அவரிடம் இன்றும் அவருடைய நிலத்திற்கான அனைத்து அசல் ஆவணங்களும் உள்ளன. அதை சேதமடையாமல் அவர் பாதுகாத்து வருகிறார்.
சந்திரசேகருக்கு என்ன நடந்தது?
2003ம் ஆண்டு கூட்டுறவு வங்கி ஒன்றில் சந்திரசேகர் கடன் வாங்கியிருந்தார். ஆனால், பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும், அவரால் அந்த கடனை செலுத்த முடியவில்லை. எனவே, கடன் கொடுக்க முடியாத காரணத்தால், அவருடைய 1.5 ஏக்கர் நிலத்தை வங்கி ஏலத்தில் விற்றுவிட்டது. அதனை மீட்க வேண்டும் என்பது தான் அவருடைய ஒரே நோக்கமாக இருக்கிறது.
தனது நிலம் வங்கியால் விற்கப்பட்டதை சந்திரசேகரால் ஏற்க முடியவில்லை. மனம் உடைந்துபோனவர், தனது தங்கையின் வீட்டில் வசித்து வந்தார். சில நாட்களுக்கு பிறகு அவருடைய சகோதரியின் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறினார். அப்போதுதான் தனித்து வாழ முடிவெடுத்து தனது அம்பாசிட்டர் காரை காட்டுக்குள் எடுத்துச்சென்று அதில் வாழ்ந்து வருகிறார்.
வனத்துறையும் அவரை காட்டிலிருந்து விரட்டியடிக்கவில்லை. அவரை அங்கேயே வாழ அனுமதித்துவிட்டது. காரணம் அவர் அங்கிருந்து எதையும் கடத்தவோ, காட்டுக்கு பாதிப்பையோ என எதையும் ஏற்படுத்தவில்லை. தனது வாழ்வாதாரத்திற்காக காட்டை நாடியிருக்கிறார். பெரும்பாலும் யானை, காட்டுப்பன்றி, காட்டெருமை அல்லது சிறுத்தை கூட அவரது கூடாரத்திற்குள் எட்டிப்பார்த்தது உண்டு. சில பாம்புகள் கூடாரத்தைச் சுற்றி வலம் வருகின்றன.
சந்திரசேகர் கூறுகையில், "நான் காட்டில் மூங்கில்களைக் கூட வெட்டுவதில்லை. நான் ஒரு சிறிய புதரை வெட்டினால்கூட, வனத்துறை என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடுவேன்'' என்று தெரிவித்திருந்தார். சந்திரசேகருக்கு ஆதார் அட்டை கூட இல்லை. ஆனாலும், அவருக்கு கோவிட் -19 தடுப்பூசியை அருகிலிருக்கும் கிராம பஞ்சாயத்து உதவியுடன் செலுத்திக்கொண்டார். லாக்டவுன் காலத்தில் காட்டு பழங்கள் மற்றும் தண்ணீரை குடித்தே உயிர் வாழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.