1887 டிசம்பர் 22 அன்று ஈரோட்டில் பிறந்தவர்தான் சீனிவாச ராமானுஜன். நிதி உதவி பெற்று கும்பகோணம் உயர் நிலைப்பள்ளியில் கல்வி பயின்றார். அப்போதே கணித இணைப்பாடு (ஃபார்முலா) பலவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவித்து ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்தினார்.
இதனால் அப்போதே இவரை பலர் கணித மேதையாக கருதத் தொடங்கினார். தொடர்ந்து கும்பகோணம் அரசு கல்லூரி, சென்னை பச்சையப்பா கல்லூரியில் படித்தார். கணக்கு பாடத்தில் நம்பர் ஒன்னாக திகழ்ந்தார். படிப்பை முடித்த பின் சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கணித தேற்றங்களை எழுதி கலக்கினார். ஒவ்வொரு நாளும் தனது கணித குறிப்புகளை, சூத்திரங்களை அவர் தாள்களில் எழுதிவைத்தார். அதுவே பிற்காலத்தில் “ராமானுஜன் கணிதம்” என்ற புகழ்பெற்ற நூலானது.
1909-ல் திருமணமானது. மனைவி ஜானகியின் அறிவுறுத்தலின் பேரில் வேலைக்குச் செல்லத் தொடங்கினார் ராமானுஜன். வேலை பார்த்துக்கொண்டே இவர் ஆற்றிய கணிதப் பணிக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து இவருக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்ற ராமனுஜன், உதவித்தொகையின் மூலம் டிரினிடாட் கல்லூரியில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டார்.
அப்போது 3 ஆண்டுகளில் 32 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி தமிழகத்தை உலகளவில் தலைநிமிரச் செய்தார். சில காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்து வரவில்லை. உடல்நிலை பாதிக்கப்பட்டு, 1917ல் இந்தியா திரும்பி அவர் 1920-ல் மறைந்தார்.
33 வயதில் மரணத்தைத் தழுவியபோதும் அவருடைய புகழ் உலகச் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு ராமானுஜரின் 125வது பிறந்த ஆண்டையொட்டி, அந்த ஆண்டை தேசிய கணித ஆண்டாகவும், அவர் பிறந்த தினமான டிசம்பர் 22ம் தேதியை தேசிய கணித தினமாகவும் அரசு அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு டிசம்பர் 22ம் தேதி கணித தினம் கொண்டாடப்படுகிறது.