"மார்க் ஸக்கர்பெர்க் எங்கே?", "ஃபேஸ்புக் மீதான முன்னாள் ஊழியரின் குற்றச்சாட்டுகளுக்கு அவரது பதில் என்ன?" என எல்லா பக்கங்களில் இருந்தும் குவிந்த கேள்விகளுக்கு மத்தியில், ஒரு வழியாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தனது தரப்பு விளக்கத்தை அளித்திருக்கிறார். ஃபேஸ்புக் மீதான விமர்சனங்கள், சர்ச்சைகளுக்கு சற்றும் அசராமல் அவர் அளித்துள்ள பதிலில், பெரும்பாலான புகார்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் செயல்பாடுகளை தவறாக புரிந்துகொள்ளப்படும் வகையில் செய்திகள் வெளியாகி வருகின்றன என கூறியுள்ள மார்க் ஸக்கர்பெர்க், நிறுவனம் தொடர்பாக தவறான சித்திரம் உருவாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மிக கவனமாக ஃபேஸ்புக் பயனாளிகளை நோக்கிப் பேசுவது போல அமைந்துள்ள விளக்கத்தில் ஸக்கர்பெர்க், ஃபேஸ்புக் தொடர்பாக அண்மையில் வெடித்துள்ள சர்ச்சை தொடர்பான முக்கியக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார்.
ஃபேஸ்புக்கின் மீது தவறு இல்லை, மாறாக நிறுவனம் தவறாக முன்னிறுத்தப்படுவது போல அமைந்துள்ள மார்க் ஸக்கர்பெர்கின் பதில், நிறுவனம் மீதான தீவிர விமர்சனங்களுக்கு விளக்கம் அளிப்பவைதானா என்பதை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சர்ச்சையின் பின்னணி:
ஃபேஸ்புக் மீது தொடர்ந்து பல்வேறு புகார்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வந்தாலும், அண்மையில் முன்னாள் ஃபேஸ்புக் ஊழியர் ஹாகன், 'பயனாளிகள் நலனை விட வர்த்தக லாபத்தை முதன்மையாக கொண்டே ஃபேஸ்புக் செயல்பட்டு வருகிறது' என அம்பலப்படுத்திய தகவல்கள் பெரும் விவாதமாக உருவெடுத்துள்ளன.
ஹாகன் பகிர்ந்துகொண்ட ரகசிய ஆவணங்கள் அடிப்படையில் அமெரிக்காவின் 'தி வால்ஸ்டிரீட் ஜர்னல்', ஃபேஸ்புக்கின் மோசமான செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தது. இந்தக் கட்டுரைகளில் ரகசிய தகவல்களை வெளியிடுபவர் தொடர்பான அடையாளம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஹாகன் நேர்காணல் ஒன்றின் மூலம் தனது அடையாளத்தை வெளியிட்டு, ஃபேஸ்புக் செயல்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை பகிர்ந்துகொண்டார்.
வர்த்தக லாபத்திற்காக ஃபேஸ்புக் வெறுப்பரசியலையும், வன்முறையையும் ஊக்குவிக்கும் வகையிலான உள்ளட்டகத்தை ஊக்குவிக்கிறது எனும் வகையில் ஹாகனின் குற்றச்சாட்டுகள் அமைந்திருந்தன. இதுதொடர்பாக தானே நடத்திய ஆய்வுகளையும் ஃபேஸ்புக் அலட்சியம் செய்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் பரவலான விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், ஃபேஸ்புக் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டாலும், அதன் நிறுவனரான மார்க் ஸக்கர்பெர்க் அமைதி காத்து வந்தார். ஸக்கர்பெர்கின் மவுனம் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இறுதியாக அவர் இந்த விவகாரம் தொடர்பாக தனது விளக்கத்தை அளித்திருக்கிறார்.
ஆனால், செய்தியாளர்கள் சந்திப்பிலோ அல்லது அறிக்கையிலோ அவர் இந்த விளக்கத்தை அளிக்கவில்லை. மாறாக, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதப்பட்டுள்ள பொதுப் பதிவில் பதில் அளித்திருக்கிறார்.
"தவறான சித்திரம்"
மார்க் தனது பதிலை மிகவும் புத்திசாலித்தனமாகவே கையாண்டிருக்கிறார். இந்தப் பதிவில் அவர் நேரடியாக விஷயத்திற்கு வரவில்லை. ஹாகன் பெயரை குறிப்பிட்டும் குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை. மாறாக, பயனாளிகளுடன் ஃபேஸ்புக் பேசுவது போல தனது பதிலை துவக்கியிருக்கிறார்.
அண்மையில் நிகழ்ந்த ஃபேஸ்புக் சேவை முடக்கம் பற்றி முதலில் குறிப்பிட்டுள்ளவர், இரண்டாவதாக ஃபேஸ்புக் தொடர்பான பொது விவாதம் தொடர்பான விஷயம் பற்றி பேசியிருக்கிறார். மிக நேர்த்தியாக, ஃபேஸ்புக் பயனாளிகளை துணைக்கு அழைத்து, "நிறுவனம் தொடர்பான அண்மைச் செய்திகள் உங்களால் ஜிரணித்துக்கொள்ள கடினமாக இருந்திருக்கும், ஏனெனில் அவை உண்மையை பிரதிபலிக்கவில்லை" என தெரிவித்திருக்கிறார்.
"பாதுகாப்பு, மன நலன் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தீவிர அக்கறை கொண்டிருக்கிறோம். எங்கள் நோக்கம் தவறாக முன்னிறுத்தப்படுவது வருத்தம் தருகிறது. அடிப்படையில் பார்த்தால், நம்மில் பலரும் நிறுவனம் பற்றி தீட்டப்படும் தவறான சித்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை" என அவர் கூறியிருக்கிறார்.
நிறுவனம் பற்றி தவறான சித்திரம் தீட்டப்படுவதாக கூறும் மார்க், பயனாளிளும் அவ்விதமே நினைப்பதாக அவர்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டுள்ளார்.
பெரும்பாலான புகார்களில் எந்த அர்த்தமும் இல்லை என கூறியுள்ள மார்க், "ஆய்வுகளை அலட்சியம் செய்ய விரும்பினால் நாங்கள் ஏன் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்?" என கேட்டிருக்கிறார். "பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உள்ளடக்கம் பற்றி கவலை கொள்ளவில்லை எனில், நிறுவனம் ஏன் அவற்றை நெறிப்படுத்த எண்ணற்றவர்களை பணிக்கு அமர்த்த வேண்டும்?" என்றும் கேட்டுள்ளார்.
விளம்பர வருவாய்க்காக, வெறுப்பைத் தூண்டும் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதாக கூறும் புகார் தொடர்பாக பதில் அளித்துள்ளவர், "ஃபேஸ்புக் வருமானம் விளம்பரம் மூலம் வருகிறது, விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பரம் கோபத்தைத் தூண்டும் உள்ளடக்கம் அருகே வருவதை விரும்புவதில்லை" என தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் மீதான அடுக்கான புகார்களில் வெறுப்பைத் தூண்டும் உள்ளடக்கம் பற்றி மட்டுமே அவர் ஓரளவு நேரடியாக பதில் அளித்திருக்கிறார். மற்றபடி எல்லாமே பொதுவான விளக்கம்தான்.
ஃபேஸ்புக் செயல்பாடுகள் தொடர்பான மிகத் தீவிரமான விமர்சனங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு, சிறார் தொடர்பான இன்ஸ்டாகிராம் சர்ச்சைக்குத் தாவி, இந்த விஷயத்தையும் நேரடியாக கையாளாமல், தனியார் நிறுவனங்களை நெறிப்படுத்துவது தொடர்பான பொதுவான விஷயத்திற்கு சென்றுவிட்டார்.
ஃபேஸ்புக் நிறுவனர் ஓடி ஒளிந்திருக்கிறார் எனும் புகாருக்கு பதில் அளிக்கும் வகையில் மார்க்கின் பதில் அமைந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால், ஃபேஸ்புக் மீதான விவாதம் மற்றும் முக்கிய விமர்சனங்கள் தொடர்பாக பதில் அளிக்கும் பொறுப்பை மார்க் தட்டிக் கழித்திருக்கிறாரா அல்லது நிறைவேற்றியிருக்கிறாரா என்பதை அவரது பதிலே பதில் சொல்லிவிடும்.
| தொடர்புடைய செய்திக் கட்டுரை: 'வெறுப்பரசியலால் லாபம்'- விசில்ப்ளோயர் பெண் அம்பலப்படுத்திய ஃபேஸ்புக்கின் 'உள்ளடி' வேலைகள் |