அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கொடுத்தாச்சா ? மோடி சொல்வது உண்மையா ? பொய்யா ?

அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கொடுத்தாச்சா ? மோடி சொல்வது உண்மையா ? பொய்யா ?
அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கொடுத்தாச்சா ? மோடி சொல்வது உண்மையா ? பொய்யா ?
Published on

நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் என்ற இலக்கு எட்டப்பட்டு விட்டதாக கூறி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பெருமிதத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி சென்றுவிட்டது என்பது உண்மையில் மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால் பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் அதனை கொண்டாடும் விதம் தான் மீண்டும் அவர்கள் மீதான நம்பக தன்மையை இழக்க வைக்கிறது. உண்மையில் ஒரு நாடு எட்டியுள்ள மைல் கல்லாக தான் பாஜக அரசு இதனை கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால், பாஜகவோ 70 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்யாத சாதனையை பாஜக அரசு 4 ஆண்டுகளில் செய்து முடிந்துவிட்டது என்று பெருமைப்பட கூறுகிறது. அடிப்படை உண்மை தெரிந்தவர்களுக்கு கூட தெரியும் இது எவ்வளவு பெரிய அபத்தமான பொய் என்று.  

பிரதமர் மோடி தனது 2015ம் ஆண்டு சுதந்திர தின உரையில் அடுத்த 1000 நாட்களில் நாட்டில் மின்வசதி கிடைக்காத அனைத்து கிராமங்களுக்கு மின்சார வசதியை பாஜக அரசு ஏற்படுத்தும் என்று உறுதி மொழி அளித்தார். தீன தயாள் உபத்யாயா மற்றும் தீனதயாள் உபத்யாயா கிராம் ஜோதி யோஜ்னா திட்டங்கள் மூலம் இந்த இலக்கு எட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அப்பொழுது மின்சார வசதி இல்லாத கிராமங்கள் மொத்தம் 18,452 மட்டுமே. 1000 நாட்களுக்கு 13 நாட்கள் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 28-ம் தேதியே அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு நிறைவு செய்தது. அதாவது 987 நாட்களில் தன்னுடைய இலக்கை முடித்தது. கடைசியாக மணிப்பூர் மாநிலத்தில் உள்ள லெய்சாங் கிராமத்திற்கு மின் வசதி ஏற்படுத்தப்பட்டது. 

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “நாட்டின் வளர்ச்சிப்பாதையில் நேற்றைய தினம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. நிர்ணயித்த இலக்கை எட்டிவிட்டோம். ஒவ்வொரு கிராமமும் மின்வசதி பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து கிராமங்களும் மின்சார வசதி பெற உழைத்த அனைத்து ஊழியர்களையும், அலுவலர்களையும் வணங்குகிறேன்” என்று பெருமைப் பட கூறியிருந்தார். 

‘ஒரு கிராமம் மின்வசதி பெறுவது’ என்றால்..

மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் ஒரு வரையறைபடி, ஒரு கிராமத்தில் உள்ள 10 சதவீத வீடுகளுக்கு மின்சார இணைப்பு கிடைத்துவிட்டால் அந்த கிராமம் மின்சார வசதி பெற்று விட்டதாக அர்த்தம். அதேபோல், பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலங்கள், சுகாதாரத் துறை மையங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களில் மின்சார வசதி இருக்க வேண்டும். அவ்வளவு தான் ஒரு கிராமம் மின்சார வசதி பெற்றுவிட்டதாக அர்த்தமாகி விடும். அதன் அடிப்படையில் தான் 100 சதவீதம் இந்திய கிராமங்கள் மின்சார வசதி பெற்றுவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ஒரு கிராமம் மின்வசதி பெறுவதற்கான வரையறை ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறது. அதாவது, ஒரு கிராமத்திற்கு மின்சார வசதி கிடைத்துவிட்டது என்பது ஒருபோதும், அந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கு மின்வசதி கிடைத்தது ஆகாது. அரசின் தகவல்கள் படி நாட்டில் 3 கோடி வீடுகளுக்கு மேல் இன்னும் மின்சார இணைப்பு கிட்டவில்லை. பாஜக ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆன நிலையில், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் 60 சதவீதத்திற்கும் குறைவான வீடுகளில் தான் மின்சார வசதி உள்ளது. நாட்டில் உள்ள 12 மாநிலங்களில் 80 சதவீதத்திற்கும் குறைவான வீடுகளில் மின்சார வசதி உள்ளது. 

சுதந்திர இந்தியாவில் மின் வசதி - காங்கிரஸ் Vs பாஜக

1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தபோது வெறும் 1500 கிராமங்களுக்கு மட்டுமே மின்சார வசதி இருந்தது. 2004-15 வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சுமார் 10 லட்சத்து 82 ஆயிரத்து 280 கிராமங்களுக்கு மின்சார வசதி கொடுக்கப்பட்டது. அதன் மூலம் சுமார் 2 கோடி வீடுகளுக்கு மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டது. அதில் 1.9 கோடி வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு அளிக்கப்பட்டது. மோடி அரசு தான் அறிவித்த திட்டப்படி 18,452 கிராமங்களுக்கு மின்சார வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆண்டுக்கு 4,842 கிராமங்களுக்கு மின்வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஆண்டுக்கு 12,030 கிராமங்களுக்கு மின்சார வசதியை ஏற்படுத்தியுள்ளது. 

2017 டிசம்பர் வரை மொத்தமுள்ள 30 மாநிலங்களில் 6 இல் மட்டுமே 24 மணி நேர தடையில்லா மின்வசதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டும் செப்டம்பரில் ஆற்றல், சுற்றுச் சூழல் மற்றும் தண்ணீர் கவுன்சில் நடத்திய ஆய்வில் உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மின்வசதி கொடுக்கப்பட்ட 50 சதவீதம் கிராமங்களில் தினசரி 12 மணி நேர மின்சாரம் கூட வீடுகளுக்கு  கிடைப்பதில்லை. 

பாஜகவின் கொண்டாட்டமும், விமர்சனங்களும்

இது சிறிய அளவிலான சாதனைதான், பெருமைப்படும் அளவிற்கு பெரியது அல்ல என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பொருளாதார துறை பேராசிரியர் ஹிமாங்ஷு கூறுகின்றார். மேலும், “கிராம மின் இணைப்பு திட்டப்படி, மீதமுள்ள 3 சதவீத கிராமங்களுக்கு தான் மின்வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான கிராமங்கள் மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள கிராமங்கள் தான்” என்றார்.

பாஜக தலைவர்களின் கொண்டாட்டங்களை விமர்சித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன் தீப் சுர்ஜிவாலா, “டியர் அமித்ஷா, இந்தியாவில் மொத்தம் 6,49,867 கிராமங்கள் உள்ளது. காங்கிரஸ் கட்சி 97 சதவீதம் கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுத்துவிட்டது. 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு 10 ஆயிரம் கிராமங்களுக்கு மின்வசதி கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தன்னுடைய சாதனையை இப்படி விளம்பரப்படுத்தியதில்லை” என்றார். 

இது ஒருபுறம் இருக்க இன்னும் தன்னுடைய கிராமத்திற்கு மின் வசதி கொடுக்கப்படவில்லை என்று சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், பாஜகவின் இந்த அவசரமான கொண்டாட்டம் அவர்களுக்கு எதிராக மாறிவிடும். 

பாஜக அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் வெறும் 18,452 கிராமங்களுக்கு மட்டுமே மின் இணைப்பை மட்டுமே கொண்டு சென்றுள்ளது. பாஜக அரசின் கைகளில் இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. ஆனால், பாஜக கொடுத்த வாக்குறுதி என்ன?. 2019-ம் ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று மோடி அரசு வாக்குறுதி அளித்து இருந்தது. எல்லா வீடுகளுக்கும் தடையில்லா மின்சாரம் கொடுப்பது என்பது மிகவும் கடினமான இலக்கு. மேலும், மின் இணைப்பை பெறும் மக்களுக்கு இருக்கும் சிரமங்களும் ஏராளம். அதனால், கொண்டாட்டங்களை தவிர்த்து இனி செய்ய வேண்டிய விஷயத்தில் கவனம் செலுத்துவதே சிறப்பாக இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com