மலையாள சினிமாவில் தனது மிமிக்ரி திறமை மூலம் காமெடி நடிகராக அறிமுகமாகி, உறுதுணைக் கதாபாத்திரங்களில் கவனம் ஈர்த்து வந்த சுராஜ் வெஞ்சரமூடு இப்போது முன்னிணி நடிகர்களில் தவிர்க்க முடியாத ஒருவராக வலம் வருகிறார். இந்தத் திரைப் பயணத்துக்காக சுராஜ் கடந்து வந்த பாதை மகத்தானது. உத்வேகமூட்டும் அந்தப் பின்புலத்தை சற்றே விரிவாகப் பார்ப்போம்.
திருவனந்தபுரத்தில் உள்ள வெஞ்சரமூடு ஒரு சிறிய நகரத்தில் பிறந்தவர் சுராஜ். அவரின் தந்தை ஒரு ராணுவ வீரர் என்பதால் சுராஜும், அவரின் இரண்டு சகோதரர்களும் மிகுந்த கட்டுக்கோப்போடு வளர்ந்தனர். தந்தையை போலவே சுராஜும் ராணுவ வீரர் ஆக வேண்டும் என்பதே கனவாக கொண்டிருந்தார். ஆனால், அண்ணனின் மிமிக்ரி கலை சுராஜின் வாழ்க்கைப் பாதையை மாற்றும் என்று சிறுவயதில் அவர் நினைக்கவில்லை. அண்ணனின் மிமிக்ரி நிகழ்ச்சிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த சுராஜுக்கு அண்ணனுக்கு கிடைக்கின்ற கைதட்டும் பாராட்டுகளும் ஒருவித உத்வேகத்தை கொடுக்க, தானும் மிமிக்ரி செய்ய ஆரம்பித்தார்.
எட்டாம் வகுப்பு படிக்கும்போது முதல்முறையாக பள்ளியின் விழா ஒன்றில் ஆசிரியர்களின் அனுமதியோடு சுராஜின் முதல் மிமிக்ரி நிகழ்ச்சி அரங்கேறியது. சுராஜின் திறமையை அந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. அன்று முதல் அனைத்து வருடங்களும் பள்ளியின் அனைத்து விழாவிலும் சுராஜின் மிமிக்ரி தவறாமல் இடம்பெறத் தொடங்கியது. இந்தத் தருணத்தில் சுராஜின் அண்ணன் தனது நண்பர்களுடன் மற்ற ஊர்களுக்குச் சென்று விழாக்களில் மிமிக்ரி செய்துவந்தனர். அவர்களுடன் சுராஜும் விரைவாகவே இணைந்துகொண்டார்.
முதல் வெளிமேடை நிகழ்ச்சியில் கலக்கி முதல்முறையாக 60 ரூபாய் சம்பளம் பெற்றார் சுராஜ். இந்த சம்பளம் அவரை இதே துறையில் முன்னோக்கிச் செல்ல வைத்தது. மிமிக்ரி சம்பளம் பெற்றுக்கொடுத்தாலும் அந்நாளில் ராணுவ வீரர் ஆக வேண்டும் என்பதே சுராஜின் மிகப்பெரிய கவனவாக இருந்தது. ஆனால், அந்தக் கனவுக்கு தடையாக மாறியது ஒரு துயரமான சம்பவம்.
பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது ஒருநாள் தனது நண்பருடன் சைக்கிளில் ஊர் சுற்றிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விபத்தில் சிக்க சுராஜின் வலது கையில் பாதிப்பு. விரைவாகவே மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கையை பழைய நிலைமைக்கு கொண்டுவர முடியவில்லை. மருத்துவர்கள் மூன்று, நான்கு முறை அவரின் கையை அறுவை சிகிச்சை செய்துள்ளனர். என்றாலும் அவரால் இன்றும் தனது வலது கையை உயர்த்தவோ அல்லது மடக்கவோ முடியாது.
சாப்பாடு சாப்பிடக்கூட கஷ்டப்பட வேண்டியிருக்கும் கையை வைத்து எப்படி ராணுவத்தில் சேர முடியும் என்பதால் அவரின் ராணுவ கனவு தகர்ந்தது. இந்தத் துயரம் அவரை மிமிக்ரியில் அதிக கவனம் செலுத்த வைத்த அதேநேரம், அவரின் சகோதரர் ஷஜி ராணுவத்தில் இணைய, மிமிக்ரி குரூப்பில் சுராஜுக்கு நிரந்தரம் இடம் கிடைத்தது. தான் சந்தித்த துயரத்தில் இருந்து வெளிவர சுராஜுக்கு மிமிக்ரி உதவினாலும், அவர் மிமிக்ரியின் பின்னால் செல்வதை பெற்றோர் விரும்பவில்லை.
மகன் படித்து ஏதேனும் நல்ல வேலை தேட வேண்டும் என்பதே சுராஜ் தந்தையின் ஆசை. அவரின் ஆசைப்படி ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்தார். தந்தையின் ஆசைப்படி இன்ஜினியரிங் படித்தாலும் அவரின் விருப்பம் முழுவதும் மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கைத்தட்டல் பெறுவதாக மட்டுமே இருந்தது. மிமிக்ரி செய்பவர்களின் அதிகபட்ச ஆசை, சினிமாவாகத்தான் இருக்கும். ஆனாலும், சுராஜுக்கு சினிமா மீது மோகம் ஏற்படவில்லை. அதைவிட அவர் சினிமாவில் நடிக்க விரும்புவதாக சொன்னாலும் அதை யாரும் அனுமதிக்கவில்லை என்பதே உண்மை.
யதார்த்தத்தில் சினிமாவில் நடிக்கப்போவதாக சுராஜ் சொன்னதபோதெல்லாம் அவருடன் இருந்தவர்கள் சொன்ன பதில் `குறைபாடு உள்ள கையை கொண்டு சினிமாவில் ஒருபோதும் நடிக்க முடியாது' என்பதே. அப்படி, ராணுவ கனவோடு சேர்ந்து சினிமா கனவையும் மூட்டை கட்டினார். சுராஜ் நடிப்பு பக்கம் திரும்பி பார்க்காவிட்டாலும் காலம் ஒரு நல்ல நடிகனை இழக்கத் தயாராக இல்லை.
ஒருநாள் சுராஜ் மிமிக்ரி செய்துகொண்டிருந்ததை பார்த்துகொண்டிருந்த யாரோ ஒருவர், நிகழ்ச்சி முடிந்தும் `உங்கள் நடிப்பு நன்றாக இருக்கிறதே ஏன் சினிமாவில் முயற்சி செய்யவில்லை' என்று கேட்டுள்ளார். அவரிடம் தன் கையை காண்பித்து `இந்தக் கையை கொண்டு சினிமாவில் எப்படி நடிக்க முடியும்' என்றுள்ளார். அப்போது அந்த நபரின் பதில் இப்படியாக இருந்தது. ``இவ்வளவு நேரம் உங்கள் நிகழ்ச்சியை பார்த்த பிறகும் உங்கள் கை ஒரு குறைபாடாக தெரியவில்லை. ஆனால் உங்களின் நகைச்சுவையை கண்டு நாங்கள் நன்றாகவே சிரித்தோம். உங்கள் நகைச்சுவை திறன் எங்களுக்கு ஒரு மருந்தாக இருக்கிறது" என்பதுதான் அந்த நபர் கொடுத்த பதில்.
அடையாளம் தெரியாத அந்த நபர் சொன்ன வார்த்தைகள் சுராஜ் மனதில் உறங்கிக்கொண்டிருந்த சினிமா என்னும் கனவை மீண்டும் தட்டியது. தாமதிக்காமல் தனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு சென்றார். தனியார் சேனலின் சீரியல் ஒன்றில் வாய்ப்பு வந்தது. சினிமா நட்சத்திரங்கள் வேடமிட்டு சிரிக்கவைக்கும் சீரியல் அது. மக்கள் மத்தியில் அந்த சீரியல் ஹிட் அடித்தது. குறிப்பாக பிரபுத்தன் என்னும் கதாபாத்திரத்தில் அந்த சீரியல் நடித்த சுராஜ், திருவனந்தபுரத்தின் உள்பகுதிகளில் பேசும் தமிழும், மலையாளமும் கலந்த பாஷையை பேசி காமெடியில் தனித்துவம் காண்பிக்க பெரிய வெற்றிபெற்றது சீரியல். மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
2002-ல் முதல் முறையாக சினிமா வாய்ப்பு வந்தது. அவர் நடித்த ஜகபுகா சீரியல் படமாக எடுக்கப்பட மலையாள சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்தில் மூன்று வேடங்களில் நடித்தார். முதல் படம்தான் நடித்த சீரியலின் தொடர்ச்சியாகவே இருந்தது. என்றாலும் இரண்டாவது பட வாய்ப்பு வந்தது. முதல்முறையாக தனக்கு பழக்கமில்லாத கூட்டணியில் இணைந்து பணியாற்றுகிறார். அவரின் குறைபாடுள்ள கை குறித்து கவலையுடன் நடிக்கச் சென்றார். அந்தப் படத்தின் இயக்குநர் நடிப்புக்கு உடம்பில் உள்ள குறைபாடுகள் தேவையில்லை என்பதை சுராஜுக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தினார்.
அவர் அப்படி சொல்லி நடிக்க வைத்தாலும், சில பிரச்னைகளால் அந்தப் படம் ரிலீசாகவில்லை. 2004-ல் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் சூப்பர் ஹிட் படமான 'சேதுராமன் அய்யர்' படத்தில் ஜகதி ஸ்ரீகுமார் உடன் ஒரே ஒரு சீனில் மட்டும் நடிக்கும் வாய்ப்பு சுராஜுக்கு கிடைத்ததும் ஒப்புக்கொண்டு நடித்தார். படமும் ரிலீசாகியது. சொந்த ஊரில் உள்ள தியேட்டரில் அந்தப் படத்தின் முதல் நாள் ஷோவை பார்க்க செல்கிறார். இந்த தியேட்டர்தான் சிறுவயதில் இருந்து சினிமா கண்டுகளித்து வரும் தியேட்டர். சினிமாவில் நடித்தால் தனக்கும் கைதட்டல்கள் கிடைக்கும் என்பதை கனவாக மாற்றியதும் இதே தியேட்டர்தான். அவர் கனவு அன்று நனவானது. 'சேதுராம அய்யர்' படத்தில் ஒரு சீனில் நடித்தாலும், அவரின் காமெடி காட்சிக்கு கைதட்டல்கள் கிடைக்க, அந்த சந்தோஷத்தில் அன்று தியேட்டரை விட்டு வெளியேறினார்.
இந்தநிலையில்தான் மம்மூட்டியின் 'ராஜமாணிக்கம்' படத்தில் பணிபுரிய அழைப்பு வந்தது. மேடை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு, அழைப்பின் பேரில் பொள்ளாச்சிக்கு வண்டி ஏறினார். அங்கு சென்ற பிறகுதான் நடிக்க அவர் அழைக்கப்படவில்லை என்பது. படம் முழுக்க, மம்மூட்டி திருவனந்தபுரம் பாஷையில் பேச வேண்டும் என்பதால், அதற்குப் பயிற்சி கொடுக்கவே சுராஜ் அழைக்கப்பட்டார். என்றாலும், படத்தில் ஒரு சீனில் நடிக்கும் வாய்ப்பும் சுராஜுக்கு கிடைத்தது. ஆனால், அந்த சீன் தேவையில்லை என்று எடிட்டிங்கின்போது இயக்குநர் அன்வர் ரஷீத், சுராஜின் சம்மதத்துடன் அதனை வெட்டினார். இது சுராஜை வேதனைப்படுத்தியது. ஏனென்றால், படத்தின் ஷூட்டிங்கில் மம்மூட்டியுடன் நீண்ட நாள் இருந்ததாக, சொந்த ஊரில் சொல்லி இருந்தவருக்கு அந்த ஒற்றை காட்சிதான் ஆதாரமாக இருந்தது. அதுவும் இல்லை என்றவுடன் விரக்தி அடைந்தார்.
இந்த விரக்தி 'ராஜமாணிக்கம்' படம் ரிலீஸ் செய்யும்வரை மட்டுமே இருந்தது, படத்தின் முதல் காட்சி முடிந்த உடனே படம் பார்த்தவர்கள் பலரும் சுராஜை அழைத்து வாழ்த்த தொடங்கினர். குழம்பி நின்றவருக்கு படம் பார்த்தபோதுதான் புரிந்தது. படம் தொடங்கும் முன் நன்றி தெரிவித்து சுராஜின் பெயர் திரையில் வெளிவந்தது. இதைப் பார்த்துதான் பலர் வாழ்த்து தெரிவித்ததும் புரிந்துகொண்டார்.
இந்த தருணத்தில் திருமணம் செய்துகொண்ட சுராஜுக்கு மீண்டும் மேடை நிகழ்ச்சிகளே வருமானம் தந்தது. ஒரு மேடை நிகழ்ச்சியின் போது ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று அழைப்பு வருகிறது. 15 நாள் ஷூட்டிங் என்றதும், தனது வாழ்க்கையில் கிடைத்துள்ள மிகப்பெரிய கதாபாத்திரம் கொண்ட சினிமா என்று வருமானம் தந்து கொண்டிருந்த மேடை நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு ஊர் முழுக்க, படத்தில் நடிப்பபோவதாக சொல்லி கொச்சிக்கு வண்டி ஏறினார். வண்டி எறியபின்னரே படம் ரத்து செய்யப்பட்ட தகவல் வர உடைந்துபோனார் சுராஜ்.
ஊரிலும் வீட்டிலும் நடிக்கப் போவதாக சொன்னது மட்டுமில்லாமல், தனக்கு இருந்த ஒரே வருமானமான மேடை நிகழ்ச்சியையும் ரத்து செய்தது அவரை சோகத்தில் ஆழ்த்தியது. அந்த சோகம் ஊர் மக்கள் முகத்தில் முழிக்க கூடாது என்று தோணவைத்தது. அன்று இரண்டு நண்பர்களின் அறையில் மூன்று மணிநேரம் அழுதுகொண்டிருந்த சுராஜுக்கு நண்பர்கள் கொடுத்த அட்வைஸ், ``மம்மூட்டியின் மாயாவி பட ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. அதில் சான்ஸ் கேட்கலாம்" என்பது.
சுராஜ் அதன்படி மம்மூட்டியை அழைத்து வாய்ப்பு கேட்டார். நடிகர்கள் தேர்வு முடிந்துவிட்டது என்பதால் பார்க்கலாம் என்றும், எதற்கும் ஒரு சீன் இருக்கும். நேரடியாக வந்து இயக்குனரையும் தயாரிப்பாளரையும் பார்க்க சொல்கிறார் மம்மூட்டி. ஒரு சீன் என்றாலும், ஊர் மக்களிடம் இருந்து தப்பித்துவிடலாம் என்று நினைப்புடன் 'மாயாவி' பட ஷூட்டிங் தளத்திற்கு சென்ற சுராஜுக்கு, கிடைத்தது மம்மூட்டியின் படம் முழுக்க வரும் கதாபாத்திரம். வேறு ஒரு நடிகர் நடிக்க வேண்டிய அந்தப் பாத்திரம், அந்த நடிகர் வர முடியாமல் போக அது சுராஜ் வசம் வந்தது. இறுதியில் `மாயாவி' திரைப்படம் சுராஜின் நடிப்பு வாழ்க்கையில் திருப்பமாக அமைந்தது.
'மாயாவி'க்கு பிறகு சினிமா சுராஜை கைவிடவில்லை. கைநிறைய படங்கள் கிடைக்க தொடங்கின. எல்லாவற்றிலும் காமெடி கதாபாத்திரங்களே கிடைத்தன. என்றாலும் மக்களை தனது தனித்துவமான நடிப்பால் சிரிக்க வைத்தார். காமெடி பாத்திரங்கள் ஒருவித அயர்ச்சியை தர, கேரக்டர் ரோல் செய்ய ஆசைப்பட்டார். அப்படி, 2012-ல் இயக்குநர் ரஞ்சித், மோகன்லால் நடிப்பில் வெளிவந்த 'ஸ்பிரிட்' படம் மூலம் அதுவும் சாத்தியமானது. இதில் சிறிய வேடம் என்றாலும், அது மற்றொரு திருப்பமாக அமைந்தது.
மெள்ள மெள்ள காமெடி ட்ராக்கில் இருந்து மாறி, 'ஆதாமிண்டே மகன் அபு' போன்ற படங்களில் கேரக்டர் ரோல் செய்யத் தொடங்கினார். 'காட் ஃபார் சேல்' (God for sale) என்னும் திரைப்படத்தில் முதல் முறையாக முழு நீள கதாபாத்திரத்தில் நடித்தார். 2013-ல் வெளிவந்த மலையாளத்தின் குடும்ப இயக்குநர் என்னும் பெயர் பெற்ற லால் ஜோஸின் 'புள்ளிபுலிகளும் ஆட்டின்குட்டியும்' என்னும் திரைப்படத்தில் சுராஜின் மாமாச்சன் என்னும் கதாபாத்திரம் நடிப்புக்கான முதல் விருதை பெற்றுக் கொடுத்தது. மாநில அரசின் சிறந்த காமெடி நடிகர் விருதை வென்றார்.
2013-ல் மலையாளத்தின் தேசிய விருது பெற்ற இயக்குநர் டாக்டர் பிஜு உடன் 'பெயர் அறியாதவன்' படம் அவரை தேசிய விருது வரை அவரை தரம் உயர்த்தியது. இந்தப் படம் அதிகமான தியேட்டர்களில் வெளியாகாததால் அவரின் காமெடி நடிப்பை கணக்கில் கொண்டு பலரும் அவருக்கும் ஏன் தேசிய விருது கொடுத்தார்கள் என்று பேசத் தொடங்கினர். விரைவாகவே, அவருக்கு தேசிய விருது கொடுத்தது சரி என்று பலர் புரியத் தொடங்கினர். அதற்கு வித்திட்டது, நியூ ஸ்டார் ஆக உயர்ந்திருந்த நிவின் பாலி நடிப்பில் 2016-ல் வெளிவந்த 'ஆக்ஷன் ஹீரோ பிஜு' படம். இந்தத் திரைப்படம் சுராஜை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க வைத்தத்து. உண்மையில் இந்தப் படம் நிவின் பாலியை விட சுராஜுக்கே அதிக வரவேற்பை பெற்று தந்தது எனலாம். இந்தப் படத்தில் குழந்தைக்காக மனைவியிடம் கெஞ்சும் பாத்திரம். இரண்டே இரண்டு சீன்கள்தான் அதில் அவருக்கு. என்றாலும் தான் தேசிய விருதுக்குரிய நடிகர் என்பதை அந்த இரண்டு சீன்களின் நடிப்பின் மூலம் ரசிகர்களுக்கு புரியவைத்தார்.
இந்தப் படத்துக்கு பின்பு தான் சுராஜ் ஆசைப்பட்ட நல்ல பாத்திரங்கள் கிடைக்க தொடங்கின. 'தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியும்', 'குட்டன்பிள்ளையோடு சிவராத்திரி', 'பைனான்ஸ்', 'ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்', 'விக்ருதி', 'லைசன்ஸ்' என்று அவர் நடிப்பை பறைசாற்றும் பல திரைப்படங்கள் கிடைக்க தொடங்கின. நூற்றுக்கணக்கான மேடைகளில் நடித்த அனுபவங்கள் சுராஜ் என்னும் நடிகரை மெருகேற்ற, அதை இதுபோன்ற படங்கள் உலகுக்கு காட்டின.
இப்போது மலையாளத்திலும் பிஸியான நடிகர் சுராஜ். 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படம் மலையாளம், தமிழ் ரசிகர்களைத் தாண்டி இந்திய அளவில் கவனிக்கவைத்தது. இதோ, சமீபத்தில் வெளிவந்துள்ள 'காணேக்காணா' படத்தில் கண்ணசைவுகளாலும் உடல்மொழியாலும் உள்ளார்ந்த உணர்வுகளை உடனுக்குடன் வெளிப்படுத்தி ரசிகர்களையும் விமர்சகர்களையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார் சுராஜ்.
- மலையரசு