30 ஆண்டு போராட்டத்துக்குப்பின் வந்துள்ள மலேரியா தடுப்பூசி.... தாமதத்தின் பின்னணி என்ன?

30 ஆண்டு போராட்டத்துக்குப்பின் வந்துள்ள மலேரியா தடுப்பூசி.... தாமதத்தின் பின்னணி என்ன?
30 ஆண்டு போராட்டத்துக்குப்பின் வந்துள்ள மலேரியா தடுப்பூசி.... தாமதத்தின் பின்னணி என்ன?
Published on

உலகின் முதல் மலேரியா தடுப்பூசியாக 'மாஸ்க்ரிக்ஸ்' என்ற தடுப்பூசி பயன்பாட்டிற்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்தது. அந்த தடுப்பூசி குறித்த விரிவான தகவல்களை, இங்கே பார்க்கலாம்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுசெய்யப்பட்டு தற்போது ஒப்புதலை பெற்றிருக்கும் இந்த தடுப்பூசியை, GlaxoSmithKline Plc மற்றும் சில நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளது. 2019 முதலே இத்தடுப்பூசியானது இதுவரை பைலட் திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 8 லட்ச குழந்தைகளுக்கு தரப்பட்டுள்ளது. இக்குழந்தைகள் அனைவரும் கானா, கென்யா, மலாவி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். தற்போது அதை இன்னும் விரிவுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதுள்ளதென்பதே செய்தி. குறிப்பாக, சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் பிற பகுதிகளில் மிதமானது முதல் அதிகமாக மலேரியா பரவும் ஆபத்து உள்ள குழந்தைகளுக்கு உடனடியாக பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் இதை போட்டுக்கொண்ட குழந்தைகளை கவனித்துப் பார்க்கையில், இத்தடுப்பூசி 30% பேருக்கு மட்டுமே கடுமையான மலேரிய பாதிப்பை தடுப்பது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு இந்த தடுப்பூசி வேறு என்னென்ன பலன்களை தருமென மேற்கொண்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல இத்தடுப்பூசி தொடர்பான ஒரு ஆய்வில், நான்கு டோஸ் செலுத்தப்பட்ட 10 மலேரியா நோயாளிகளில் நான்கு பேரை மட்டுமே இந்த தடுப்பூசி பாதுகாக்கிறது என சொல்லப்படுகிறது. இருப்பினும் தடுப்பூசியின் மற்ற செயல்திறன்களின்மூலம், நூறாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதால் இது பரந்து விநியோகிக்கப்படுகிறது.

இந்த தடுப்பூசி ஒப்புதல் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் "இத்தடுப்பூசி மலேரியாவை உருவாக்கும் கொசுக்களுக்கு எதிரான போரில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இத்தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவது ஒரு வரலாற்று தருணம்" என்று கூறினார்.

மனித வரலாற்றில், உயிர்க்கொல்லியாக இருந்துள்ள மலேரியா, உலகளவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 4 லட்சம் பேரைக் கொல்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 20 வருடங்களில் இந்த நோய்த்தடுப்பில் அனைத்து நாடுகளும் தீவிரமாக இருந்தாலும்கூட, இதன் பரவல் நிகழ்வதை முழுமையாக தடுக்கப்படாமலேயே இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நோய் அதிகம் பரவும் இடங்களாக இருப்பவை ஆஃப்ரிக்கா, நைஜீரியா, காங்கோ, தான்சானியா, மொசாம்பிக், நிஜெர் உள்ளிட்டவை. இங்கிருந்து மட்டும், மொத்த இறப்பில் 50% நிகழ்வதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவிலும் மலேரியா மிகத்தீவிரமாக பரவக்கூடிய நோய்ப்பாதிப்புதான். இருப்பினும் இந்தியாவில் இதன் இறப்பு விகிதம் கடந்த வருடங்களில் வேகமாக குறைந்தது ஆறுதலளிக்கும் விஷயமாக உள்ளது. அதன்படி தற்போது இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கோடிகளில் இருந்தாலும், இறப்பு நூற்றுக்கணக்கிலேயே உள்ளது.

இதுவரை பல கோடி உயிர்களை எடுத்த மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வாளர்களும் விஞ்ஞானிகளும் முயற்சி செய்துவருகின்றனர். ஏன் இத்தனை காலமாக இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாமல் போனது என்பது குறித்து ஆஸ்திரேலிய மற்றும் சீன ஆய்வாளர்கள், கடந்த வருடம் கட்டுரையொன்று எழுதினர்.

அதில், “மலேரியாவுக்கான தடுப்பூசியை உருவாக்கும்போது, பெரும்பாலும் மலேரியாவை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகளின் வாழ்க்கைச் சுழற்சியை அடிப்படையாக வைத்தே அமையும். அதில் ஏற்படும் சிக்கலில் இருந்தே சிக்கல்கள் யாவும் உருவாகிறது. இந்த சுழற்சி என்பது கொசுக்களாகவும் இருக்கலாம்; அல்லது மனித கல்லீரல், மனித ரத்த வகைகளாகக்கூட இருக்கலாம். அதெப்படி மனித உடலுக்குள் இவை இருக்குமென்றால், அவை ஏதாவதொரு வகையில் உடலுக்குள் சென்று, பின் மனித உடலிலுள்ள திசுக்களின் உள்ளே மறைந்திருந்து, பின் மெதுமெதுவாக உடலின் நோய் எதிர்ப்புத் திறனை ஏமாற்றி உடல் உறுப்புகளுக்குள் சென்று அங்கிருந்த அடுத்த பிரச்னையை உருவாக்கும். குறிப்பிட்ட அந்த ஒட்டுண்ணியின் அடுத்தடுத்த ஆன்டிஜெனிக் மாறுபாடுகள் (கொரோனா புதிது புதிதாக மாறுபாட்டுக்குட்பட்டு திரிவது போல)” எனக்குறிப்பிட்டுள்ளனர்.

மற்றொரு ஆய்வுக்குழுவான இந்தியாவின் சண்டிகர் பகுதியை சேர்ந்த பி.ஜி.ஐ.எம்.இ.ஆர். என்ற ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் நவ்நீத் அரோரா, லோகேஷ் அன்பழகன், அஷோக் உள்ளிட்டோர் கடந்த வருடம் ஒரு மருத்துவ இதழுக்கு தெரிவிக்கையில், “மலேரிய தடுப்பூசியை கண்டறிய முறையாக நிதி ஒதுக்கப்படவில்லை. கவனித்துப் பார்த்தால் மலேரியா என்பது பொருளாதார ரீதியில் பின் தங்கிய மற்றும் நடுத்தர வர்க்க நாடுகளில் தான் அதிக தாக்கத்தை செலுத்துகிறது. காரணம், அங்கு மருத்துவ கட்டமைப்புகளில் சரிவு உள்ளது. இதுவே ஒரு ஏற்றத்தாழ்வுதான். இதற்கு அடுத்தபடியாக, இந்தத் தடுப்பூசி ஆய்வை முன்னெடுத்தோருக்கு சரியாக நிதி ஒதுக்கப்படவில்லை. குறைவான நிதியில், உலக சந்தைக்கு அவர்கள் முன்னெடுத்ததால், ஆய்வு முடிவில் பின்னடைவு ஏற்பட்டது” என்றுள்ளனர்.

இன்னும் நிறைய விஞ்ஞானிகள், ஹெச்.ஐ.வி., எய்ட்ஸ் போல மலேரிய தடுப்பூசி கவனத்தையும் முக்கியத்துவத்தையும் பெறவில்லை என்கின்றனர். இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில், தற்போது மலேரிய தடுப்பூசியொன்று வந்துள்ளது.

தடுப்பூசி இல்லாமல் மலேரியாவை ஒழிக்க முடியாதா என்றால், அப்படியும் வரலாறு இல்லை. 11 நாடுகள், மலேரியா அற்ற நாடுகளாக, உலக சுகாதார நிறுவனத்தால் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த 20 வருடங்களில் மலேரியா யாருக்கும் உறுதிசெய்யப்படாத நாடுகள் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொராக்கோ, இலங்கை, அர்ஜெண்டினா ஆகியவை உள்ளது. 2019 கணக்குப்படி, 27 நாடுகளில் 100க்கும் குறைவாக மலேரியா பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 20 வருடங்களுக்கு முன்பு இந்தளவு குறைவாக மலேரியா பதிவான நாடாக 6 நாடுகள்தான் இருந்தது.

எது எப்படியோ தற்போது இதற்கென ஒரு தடுப்பூசியை விரிவுப்படுத்த முயன்றிருப்பதால், வருங்காலத்தில் மலேரியா தாக்கத்தின் எண்ணிக்கை இன்னும்கூட குறையலாம். இந்த மாஸ்க்ரிக்ஸ் தடுப்பூசி போலவே, இன்னும் சில தடுப்பூசிகள் அடுத்தடுத்த ஆய்வுக்கட்டத்தில் இருக்கிறது. கடந்த மே மாதம் மேட்ரிக்ஸ் எம் என்றவொரு தடுப்பூசி 77% செயல்திறனுடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் டெல்லியை சேர்ந்த மருத்துவரான வி.எஸ்.சௌஹான் என்பவரும் அந்த தடுப்பூசிக்காக உழைத்துள்ளார். விரைவில் அதுவும்கூட பயனளிக்கலாம் என சொல்லப்படுகிறது. பார்ப்போம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com