தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி? எந்த நிலையில் இருக்கிறது நிர்பயா நிதி திட்டம்?

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி? எந்த நிலையில் இருக்கிறது நிர்பயா நிதி திட்டம்?
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எப்படி? எந்த நிலையில் இருக்கிறது நிர்பயா நிதி திட்டம்?
Published on

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மத்திய அரசு சார்பில் நிர்பயா நிதி என்ற பெயரில் 1000 கோடி ரூபாய் வரை ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டு பெண்கள் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது நிர்பயா நிதி திட்டத்தின் நோக்கம். ஆனால் இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு? அவற்றை மாநில அரசுகள் எந்த விதத்தில் பயன்படுத்தி வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை கொலை பெண்கள் பாதுகாப்பு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புவதாகவே பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன? குறிப்பாக சென்னை போன்ற மாநகரங்கள் பெண்கள் பாதுகாப்பில் எந்த அளவுக்கு கவனம் செலுத்தி வருகிறது என்பதை தமிழக அரசு சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டிய நேரமிது எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா புள்ளிவிவரங்கள் அடங்கிய செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி,

இந்தியாவின் மற்ற நகரங்களை பொறுத்தவரையில் சென்னையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக நடந்து வருகிறது. ஆனாலும் 2016ல் 533 குற்ற வழக்குகள் பதிவான நிலையில் 2017ம் ஆண்டு 642 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த வருடக் கணக்கின்படி தமிழகத்துக்கு மத்திய அரசு நிர்பயா நிதியில் ரூ.190.68 கோடி வழங்கியுள்ளது. அதில், ரூ.6 கோடியை மட்டுமே தமிழகம் பயன்படுத்தியுள்ளது.

அதில் பெண்கள் பாதுகாப்புக்கான அவசர அழைப்பு எண் 181 திட்டம் ஏற்படுத்தபட்டது. இதன் மூலம் 70ஆயிரத்துக்கும் குறைவான அழைப்புகள் மட்டுமே பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பிங்க் நிற ரோந்து வாகனங்கள் மகளிர் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் இன்னும் கூடுதலான நடவடிக்கைகள் தேவை என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

போடப்பட்ட திட்டங்களும், தேவைகளும்:

  • பேருந்துகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் சிசிடிவி பொருத்துதல்
  • மாநகர பேருந்துகளில் அவசர அழைப்பு அமைத்தல்
  • மகளிர் காவல் நிலையங்களை மேலும் வலுப்படுத்துதல்
  • குற்றம் நடக்கும் இடங்களை தேர்வு செய்து பாதுகாப்பை பலப்படுத்துதல்
  • பொது இடங்களில் பெண்கள் கழிப்பறை வசதியை ஏற்படுத்துதல்
  • 7000 எல்இடி தெரு விளக்குகள் பொருத்துதல்
  • சமூக வலைதளங்களில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது போன்ற சம்பவத்துக்காக அரசு காத்திருக்கக் கூடாது. வரும் முன் காக்க வேண்டும். நிர்பயா நிதியை சரியாக பயன்படுத்தி தமிழகத்தை பெண்களின் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் மாநிலமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளையில் சிசிடிவி கேமரா பொருத்துதல், பெண்களுக்கு தற்பாதுகாப்பு பயிற்சிகள் அளித்தல், அவசர அழைப்பு எண் 181 திட்டம், பிங்க் நிற பேட்ரோல் வாகனங்கள் என திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் நிர்பயா நிதியை முழுமையாக பயன்படுத்தி அனைத்து திட்டமும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்றும் தமிழக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com