மக்களின் கேப்டன் தோனி ஒரு ஃபிளாஷ்பேக் !

மக்களின் கேப்டன் தோனி ஒரு ஃபிளாஷ்பேக் !
மக்களின் கேப்டன் தோனி ஒரு ஃபிளாஷ்பேக் !
Published on

ஓர் அணியில் உலகின் தலைச் சிறந்த வீரரை வைத்துக்கொண்டு இருப்பது பெருமையாக வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் அந்த வீரரை வைத்து உலகக் கோப்பையெல்லாம் வெல்ல முடியாது. அதற்கு தனித் திறமையும் தலைமைப் பண்பும் முக்கியம் என்ற கருத்து கிரிக்கெட் விமர்சகர்களால் பெரும்பாலும் சொல்லப்படுவதுண்டு. அதுவும், இந்திய கிரிக்கெட் அணி 2007 ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பு வரை மேலே சொன்ன வாசகத்தை இந்திய அணி வீரர்களே அதிகம் கேட்டிருக்கக் கூடும். அந்த வாசகங்களுக்கு ஏற்றார் போல அமைந்தார் மகேந்திர சிங் தோனி. தோனி மிகச்சிறந்த உலகத் தரம்வாய்ந்த பேட்டிங் நுணுக்கங்கள் கொண்ட வீரர் கிடையாது, கிரிக்கெட் புத்தகங்களில் உள்ள ஷாட்ஸ் அவரிடம் இல்லை, ஆனால் அவருக்கென பேட்டிங்கில் பிரத்யேக பாணியை கடைப்பிடித்தார். அதேபோல 2007 ஆம் ஆண்டு தொடங்கி ஏறக்குறைய 9 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்த எம்.எஸ்.தோனி அதிலும் தனித்தன்மை கொண்டவராக இருந்தார். மேலும், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டனாக விளங்கினார் என்றார் மிகையில்லை.

கபில் தேவ், அஸாருதீன், சவுரவ் கங்குலி ஆகியோருடன் ஒப்பிட்டால் தோனியே சிறந்த கேப்டனாக விளங்கினார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்திய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்த பெருமை தோனியின் அணியை மட்டுமே சேரும். 20 ஓவர் கிரிக்கெட் உலக் கோப்பை, ஆசியக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என தோனி தொட்டதெல்லாம் பொன்னான காலம் இந்திய அணியின் பொற்காலம்.

சச்சினின் பார்வை: மேற்கு இந்தியத் தீவுகளில் 2007 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக் கோப்பை போட்டிகளுக்கு ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணிச் சென்று லீக் சுற்றுகளிலேயே தோல்வியடைந்து வெளியேறியது. இதனையடுத்து டிராவிட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அப்போது, முதல் முறையாக 20 ஓவர் கிரிக்கெட் உலக் கோப்பை நடைபெற இருந்தது. அப்போது, இந்திய அணிக்கு தோனி புதியவர். எனினும், அவரது அதிரடி ஆட்டம் மூலம் ஏற்கனவே தனி கவனம் பெற்றவராய் இருந்தார். பிசிசிஐ தேர்வுக் குழுவினர் சச்சின் தலைமையில் 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு அணியை அனுப்ப தீர்மானித்தனர். ஆனால், சச்சினோ 20 ஓவர் கிரிக்கெட் என்பது இளைஞர்களுக்கானது, எனவே 20 ஓவர் கிரிக்கெட்டில் தான் விளையாட விரும்பவில்லை எனக் கூறி ஒதுங்கினார். அப்போது, யார் தலைமையில் அணியை அனுப்பவது என பிசிசிஐ குழம்பியபோது சச்சின் கைகாட்டியது மகேந்திர சிங் தோனியை. அதன் பின், கேப்டன் ஆனதும் கோப்பைகளை வென்று குவித்ததெல்லாம் எல்லாம் வரலாறு.

டிராவிட் கண்ட நிம்மதி: 

இந்திய அணிக்கு எப்போதும் பெரும் பிரச்சனையாக இருப்பது விக்கெட் கீப்பர்களை தேர்ந்தெடுப்பதுதான். 1980-களில் சையத் கிர்மானிக்கு பிறகு 1990- களில் நயன் மோங்கியா சிறந்த கீப்பராக விளங்கினர். 1998-க்கு பின்பு இந்திய கிரிக்கெட் அணி 10 ஆண்டுகள் நிலையான விக்கெட் கீப்பர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. 

இடைப்பட்ட காலத்தில் சபா கரீம், தீப் தாஸ்குப்தா, விஜய் தாஹியா, அஜய் ராத்ரா, பார்த்திவ் பட்டேல் என விக்கெட் கீப்பர்கள் வந்து போனார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அணியின் பல சுமைகளை தாங்கி வந்த ராகுல் டிராவிட் வேண்டா வெருப்பாக விக்கெட் கீப்பிங் பணியையும் பார்த்து வந்தார். 

பின்பு, தினேஷ் கார்த்திக் உத்வேகமான விக்கெட் கீப்பராக அணிக்கு வந்தார், விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விலங்கினாலும் பேட்டிங்களில் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. அப்போதுதான் தோனி அணிக்கு வந்து அதிரடி காட்டினார். அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த கங்குலி ஒரு நாள் போட்டிகளுக்கு தோனியும், டெஸ்ட் போட்டிகளுக்கு தினேஷ் கார்த்திக்கும் கீப்பர்களாகப்பட்டார்கள். ஆனால் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கும் கீப்பரானார் தோனி. 

பாரபட்சமா ? 

தோனி மிகச்சிறந்த கேப்டனாக இருந்தாலும் அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. முக்கியமாக அணியில் சீனியர் வீரர்களான கவுதம் காம்பீர், யுவராஜ் சிங், விரேந்திர சேவாக், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு தோனிதான் காரணம் என் சொல்லப்படுவதுண்டு. 
தோனி இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற  சில ஆண்டுகளிலேயே அவருக்கென விதமுறைகளை வகுத்துக்கொண்டார். எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் பெர்ஃபார்மன்ஸ் இல்லையென்றால் அணியில் இருந்து தூக்கப்படுவர் அதில் தயவுதாட்சன்யம் காட்டவே இல்லை. அவருக்கு பதில் வேறு, அவரும் இல்லையென்றால் வேறு, வேறு என சென்றுக்கொண்டிருந்தார். அதன் பலனாகத்தான் அஷ்வின், கோஹ்லி, ரோகித் சர்மா, ரஹானே, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சமி போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்தார்கள்.

அடி சறுக்கியது ! 
தோனியின் இந்திய கிரிக்கெட் அணி பல வெற்றிகளையும்  சில தோல்விகளையும் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை பெற்று வந்தது. அதன் பின், தோனியின் அணி பெரிய வெற்றியை பெறவில்லை. வங்கதேசம் உடனான ஒருநாள் போட்டிகளில் கூட தோல்வியை தழுவியது இந்திய கிரிக்கெட் அணி. அதன் பின் அவ்வப்போது சீறி எழும் இந்திய கிரிக்கெட் அணி 2016 ஆம் ஆண்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் வரை சென்றது. ஆனால், சொந்த மண்ணிலேயே மேற்கு இந்தியத் தீவிடம்தோற்றது. முன்புபோல வேகமான முடிவுகளை எடுக்க தோனி தயங்குகிறார் முன்பு போல அவரால் வேகமாக செயலாற்ற முடியவில்லை என்று பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

டெஸ்ட், ஒரு நாள், 20 ஓவர் போட்டிகள் கொண்ட அணிகள் கோலி கைக்கு சென்றுவிட்டது. இப்போது தோனி அணியில் ஒரு வீரராக, தான் எந்த வரிசையில் இறக்கிவிடப்படுவோம் என்று கூட தெரியாமல் இருந்துக்கொண்டிருக்கிறார்.

மக்களின் கேப்டன்:  

கிரிக்கெட் போட்டியில் யாரை எந்த இடத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில்தான் கேப்டனின்  புத்திசாலித்தனம் இருக்கிறது. தோனியை பொறுத்தவரையில் அவர் களத்தில் இருக்கும் 11 பேரை கையாளுவதில் மிகவும் தேர்ந்தவர். தோனியின் ஸ்ட்ராட்டஜி அல்லது போட்டிக்கான திட்டம் இன்னமும் பலருக்கும் புரியாத புதிர். 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பைக்கு பின் தோனி கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறக் கூடும்.தோனி என்ற மிகச் சிறந்த விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனும் மீண்டும் வெளிப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பெரிதாக உள்ளது.  மிக முக்கியமாக ஜார்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலத்தில் இருந்து வந்து இந்தியாவுக்கு மிகப்பெரிய பெருமையை பெற்றுத் தந்த தோனி, காலத்தால் கடந்துபோன கேப்டன்கள் மத்தியில் மக்களின் கேப்டனாக எப்போதும் இருப்பார் என்பதனை மறுப்பதற்கில்லை.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com