மதுரை மாநகரத்தின் விரிவாக்கப் பகுதியில் அமைந்துள்ள தோப்பூர்- உச்சப்பட்டியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான மேம்பாட்டுப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன என்று பேரவையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் துணைக்கோள் நகரம் பற்றிப் பார்ப்போம்.
மதுரையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் மதுரை-திருநெல்வேலி நான்குவழிப் பாதையில் தோப்பூர்-உச்சப்பட்டி கிராமங்கள் உள்ளன. அங்கு தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 586.86 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவை 27 ஆண்டுகளுக்கு முன்னால் வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டவை.
இந்த அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு துணைக்கோள் நகரத்தை உருவாக்க வேண்டும் என்று கடந்த 2013ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
இந்தத் துணைக்கோள் நகரத்தில் பள்ளி வளாகம், வணிக மனைகள், காவல் நிலையம், அஞ்சலகம், ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு நிலையம், மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் என அனைத்து வசதிகளும் இடம்பெறும் என்றும், துணைக்கோள் நகரத்தில் ஆயிரக்கணக்கான மனைகள் உருவாக்கப்பட்டு அவை குறைந்த வருவாய், மத்திய வருவாய், உயர் வருவாய் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு பிரித்து ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
துணைக்கோள் நகரத்தின் அடிப்படை வசதிகளான சாலைகள், குடிநீர், கழிவுநீர் வெளியேற்றம், மழைநீர் கால்வாய், சிறு பாலங்கள், தெரு விளக்குகள் ஆகியவற்றுக்காக முதற்கட்டமாக 120 கோடியும் ஒதுக்கப்பட்டது. 2016ல் இந்தத் துணைக்கோள் நகரத்துக்கான பணிகள் தொடங்கிய நிலையில், இப்போது அதன் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளன. துணைக்கோள் நகரத்தில் மத்திய பூங்கா, வணிக வளாகம், கூட்ட அரங்கம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அது ஒரு தன்னிறைவு பெற்ற நகரியமாக இருக்கும் எனப் பேரவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
இப்போது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள நிலையில், துணைக்கோள் நகரம் இன்னும் அதிக முக்கியத்துவமும் தேவையும் உள்ள மருத்துவ நகரமாகத் திகழ அதிக வாய்ப்புகள் உள்ளன.