’ஓஹோ’ லெவல் ஹிட் அடித்து எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ பட ‘ஊ சொல்றியா’பாடல். அதேசமயம், சமந்தா சிறப்பு கெட்-அப்பில் நடனமாடியுள்ள இப்பாடல் வரிகள் ஆண்களை கொச்சைப்படுத்துவதாக சர்ச்சைகளும் வலுத்து வருகிறது. ஹைதராபாதில் இப்பாடலுக்கு தடைக்கேட்டு வழக்கே தொடர்ந்திருக்கிறார்கள் ஆண்கள் சங்கத்தினர். தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் ‘புஷ்பா’ பட அனைத்து தமிழ்ப் பாடல்களையும் எழுதியுள்ளார் பாடலாசிரியர் விவேகா. ஏற்கெனவே, ’ஸ்ரீவள்ளி’... ‘சாமி சாமி’ பாடல்கள் இன்ஸ்டா ரீல்ஸ் பிரியர்களின் ஃபேவரைட்களாய் மாறியச் சூழலில், தற்போது, மூன்றாவதாக வெளியாகியுள்ள ‘ஊ சொல்றியா’ பாடலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு, எதிர்ப்பு குறித்து விவேகாவிடம் பேசினோம்,
’ஊ சொல்றியா’ பாடலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு குறித்து?
”பாடல் வெளியானதிலிருந்து ஆண்கள்தான் அதிகம் கொண்டாடி வருகின்றனர். வாழ்த்துகளாக குவிகிறது. இந்தப் பாட்டுமாதிரியே ’சாமி.. சாமி’ பாடலுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. யூடியூபில் 30 மில்லியன் பார்வைகளை நெருங்கிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் பலரும் ’தினம் சாமி பாட்டுதான் மண்டையில் சுத்திட்டிருக்கு’ என்கிறார்கள். தற்போது, ’ஊ சொல்றியா’ பாடலும் ஹிட் அடித்ததில் ரொம்ப சந்தோஷம். நான் பாடலை ‘ஊ சொல்றியா.. ஊஹும் சொல்றியா’ என்றுதான் எழுதினேன். வீடியோவில் ‘ஓ ஓ’ போட்டிருந்ததால் ‘ஓ சொல்றியா’ என்று எடுத்துக்கொண்டார்கள். இன்று காலையில்கூட லிங்குசாமி சார் போன் செய்து ’உங்க ராஜ்யம்’ என்று பாராட்டியது ஊக்கம் கொடுத்தது. இப்படி நிறைய பேர் பாராட்டுகிறார்கள். இது ஒரு வித்தியாசமான பாட்டு. முதல்முறையாக இப்படி வரிகள் அமைந்துள்ளதால் எல்லோரும் கூர்ந்து கவனித்துள்ளார்கள்”.
’ஊ சொல்றியா’ தெலுங்கிலிருந்து அப்படியே மொழிமாற்றம் செய்ததா? நீங்களே எழுதினீர்களா?
|”மொழிமாற்றம் செய்யப்படவில்லை. இது பான் இந்தியா படத்தின் பாடல் என்பதால் தனியாகத்தான் எழுதினோம். தெலுங்கில் ஒரு வெர்ஷன் எழுதி ’எப்படி இருக்கு?’ என்று கேட்டு எனக்கு அனுப்பினார்கள். அதில், ஆண்கள் குறித்தெல்லாம் எதுவும் இல்லை. குறிப்பாக,‘ஆம்பளப் புத்தி’ வரிகளும் இல்லை. நான்தான் ’ஆம்பளப் புத்தி’... ‘வெளக்க அணைச்சா போதும் எல்லா வெளக்குமாறும் ஒண்ணுதாங்க’ வரிகள் எல்லாம் எழுதினேன். இந்த வரிகள் தேவிஸ்ரீ பிரசாத் சாருக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. அதனால், அனைத்து மொழிகளிலுமே இந்த கான்செப்ட்லயே பாட்டைக் கொண்டுபோலாம்னு சொல்லி மற்ற மொழிகளிலும் ‘ஆம்பளப் புத்தி’ வரிகளையெல்லாம் சேர்த்து மாற்றினார்கள். அது சிறப்பாக வந்திருக்கிறது.
எப்போதும் எனது பாடல்களை எழுத எடுத்துக்கொள்ளும் நேரம் குறைவுதான். இந்தப் பாடலை 1 மணி நேரத்திலேயே எழுதி முடித்துவிட்டேன். தேவிஸ்ரீ பிரசாத் சாரின் எல்லா படங்களிலும் கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். சிங்கம், கந்தசாமி என எங்கள் காம்பினேஷன் எல்லாமே ஹிட்டுதான். அவருடன் பணியாற்றும்போது ரொம்ப சந்தோஷமாக உணர்வேன். ஹிட் பாடல்கள் கொடுக்க அதுவும் காரணம்”.
ஹைதராபாத்தில் இந்தப் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தடை கேட்டிருக்கிறார்களே?
“ஆந்திராவில்தான் இப்படி. ஆனால், தமிழ்நாட்டில் ’ஊ சொல்றியா’ பாடலை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு தொடர்ந்து வாழ்த்து வந்துகொண்டே இருக்கிறது. ஆந்திராவில் சும்மா விளம்பரத்துக்காக எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள். அங்கு அப்படி பண்ணியதற்கு நாம் என்ன பண்ண முடியும்? இந்த இணைய யுகத்தில் விளம்பரத்திற்காக செய்யப்படும் விஷயங்கள் நிறைய உள்ளன. அதில், ஒன்றுதான் இதுவும்”.
பாடல் எழுதும்போது எதிர்ப்பு வரும் என்று தோன்றியதா?
”இல்லவே இல்லை. இதெல்லாம் சர்வசாதரணமாக பெண்கள் கிராமங்களில் சொல்லும் வார்த்தைகள்தான். ’இருட்டுல எல்லா பயலும் இப்படித்தாண்டா நீங்க’ என்பார்கள். இதுவும் ஒரு சொலவடை மாதிரிதான். ‘டேய்... தெரியும்டா.. உங்க ஆம்பளப் புத்தி’ என்று சொல்வதுதான் இந்தப் பாடலும்”.
பெண்களையே குற்றம் சாட்டி திட்டி எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில் இப்படி எழுதவேண்டும் என்று எப்படி தோன்றியது?
“இது ஒரு ஜாலியான பாடல்தான். ஆண்களைப் பெரிதாக குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் பாடல் அல்ல. ஆண்களை நான் எங்குமே திட்டவில்லை. தமிழர்கள் பல நூற்றாண்டுகளாக ’ஆண்கள் பெண்களைப் பார்க்கிறோம் என்பதையும் பெண்கள் பின்னால் சுற்றுகிறோம்’ என்பதையும் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் மனோபாவத்துடன் வளர்ந்தவர்கள்தான். ஒரு ஆண்மைய சமூகமாகத்தான் இருந்திருக்கிறது. அதனை, வெளிப்படையாக சொல்லக்கூடிய தைரியத்தில்தான் இருந்திருக்கிறார்கள். அதனால்தான், தமிழகத்தில் இப்பாடலை கொண்டாடுகிறார்கள். சினிமா பாடல்களும் ஒரு வணிக ஊடகம். பெரிய சமூக புரட்சி செய்யக்கூடிய இடம் அல்ல. பெண்களை இப்படி எழுதினால் ஆண்கள் கொண்டாடுகிறார்கள். ஆண்களை எழுதினால் பெண்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், இப்பாடலை இரு தரப்பினருமே கொண்டாடுகிறார்கள். இது கொண்டாட்டத்துக்கான பாடலாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. அதேபோல பெண்களை குற்றம் சாட்டி எழுதி வரும் பாடல்களிலும் எனக்கு உடன்பாடில்லை. பெண்கள் நம் சக மனுஷிகள். நான் எப்போதுமே சமமாக மதிக்கிறேன். இந்தப் பாடலை எழுதியதற்கு சந்தோஷம்தான் படுகிறேன்”.
ஆனால், ஆண்கள் என்றாலே பெண்களைப் பாலியல் ரீதியாகத்தான் அணுகுவார்கள் என்று தவறாகவும் புரிந்து கொள்ளப்படுமே?
”இந்தப் பாடலில் எந்த இடத்திலும் பெண்கள் என்றாலே ஆண்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லவில்லை. அந்த மனநிலையில் இருக்கும் ஆண்கள் பெண்களை எப்படியெல்லாம் பார்க்கிறார்கள் என்பதுதான் மேட்டர். அந்த மனநிலைக் கொண்டவர்களை குறிக்கும் பாடல்தானே தவிர ஆண்கள் என்றாலே பெண்களை அப்படித்தான் பார்ப்பார்கள் என்று சொல்லவில்லை. தாய், தங்கை என எத்தனையோ உறவுகள் இருக்கும்போது எல்லோரையும் எப்படி சேர்த்து எழுதுவேன்? உரிய இடத்தில் ஆண்கள் இப்படித்தான் யோசிப்பார்கள் என்றுதான் எழுதியுள்ளேன்”.
பாடல் வெளியானபிறகு இயக்குநர் சுகுமார், தேவிஸ்ரீ பிரசாத் என்ன சொன்னார்கள்?
“சுகுமார் சார் இன்னும் பேசவில்லை. ஆனால், தேவிஸ்ரீ பிரசாத் சாரிடம் தினமும் பேசிக்கொண்டிருக்கிறேன். பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்ததில் பயங்கரமாக எஞ்சாய் செய்துகொண்டிருக்கிறோம்”.
- வினி சர்பனா