மொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..? ஜாக்கிரதையாக இருங்கள்..!

மொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..? ஜாக்கிரதையாக இருங்கள்..!
மொபைல் ‘ஆப்’பில் கடன் வாங்குபவரா நீங்கள்..? ஜாக்கிரதையாக இருங்கள்..!
Published on

தீபாவளி நெருங்குகிறது நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் செலவுகள் காத்திருக்கிறது. தீபாவளி போனஸ் கிடைத்தவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், போனஸ் இல்லாதவர்களுக்கு தீபாவளி மாதம் கையை கடிக்கும். செலவுக்கு வெளியே கடன் வாங்குவார்கள். ஆனால் அதுவும் சுலபமாக கிடைக்காது. இதுபோன்ற சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினரை குறிவைத்து கடன் கொடுக்க பல்வேறு "ஆப்"கள் வந்துவிட்டன

ஆம், ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் போதும். இப்போதெல்லாம் சிறிய மற்றும் பெரிய தொகை லோன்கள் ரொம்ப ஈசியாகவே கிடைத்துவிடுகிறது. இது மிகப்பெரிய பலம் என்றாலும் ஆனால் இந்த "லோன் ஆப்"கள் மூலம் மிகப்பெரிய மோசடியும் நடைபெற்று வருகிறது என்பது பலருக்கு தெரியாது. எந்த ஆவணத்தையும் தூக்கிக்கொண்டு அலைய வேண்டியதில்லை, எந்த பேப்பரையும் நீட்ட வேண்டியதில்லை, மொபைல் ஆப் ஒன்றே போதும், கடன் வாங்குவதற்கு. இதை படிப்பதற்கே கவர்ச்சியாக இருக்கிறதல்லவா? ஆனால் இதெல்லாம் நீங்கள் கடன் வாங்கும்வரைதான். தவணைகளை ஒழுங்காகச் செலுத்தினால் பிரச்சனையில்லை. ஆனால் சில மாதம் தவணையை கட்ட தவறினால் சிக்கல் தான்.

அப்படி என்ன சிக்கல் ?

நீங்கள் செல்போனில் லோன் ஆப்பை பதிவிறக்கம் செய்கிறீர்கள். அது, உங்கள் இமெயில் கணக்கை எடுத்துக்கொள்ளலாமா என கேட்கும், நீங்கள் "Agree" என அழுத்துவீர்கள். பின்பு, "ஃபேஸ்புக்" கணக்கை கேட்கும். அதற்கும் "Agree" என அழுத்துவீர்கள். பின்பு, உங்கள் சம்பள விவரங்கள், ஆதார் எண் என எல்லாவற்றையும் ஆப் வாயிலாகவே கொடுப்பீர்கள். பின்பு, உங்களுக்கு லோன் கிடைத்துவிடும். உதாரணத்திற்கு 35, ஆயிரத்துக்கு லோன் கேட்டால் கிடைக்கும். பின்பு ரூ.30 ஆயிரம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துவிடும். ரூ.5 ஆயிரம் பிராசஸிங் சார்ஜ். பின்பு, நான்கு மாதத்திற்குள் லோனை அடைத்துவிட வேண்டும். மாதம் லோன் வழங்கிய கம்பெனி, வங்கிக் கணக்கில் ரூ.8750 செலுத்தி விட வேண்டும். நீங்கள் முதல் இரண்டு மாதத் தவணையை செலுத்தி விடுகிறீர்கள். ஆனால், அதன் பின் உங்களால் செலுத்த முடியவில்லை என்றால் அங்குதான் பிரச்சனை.

தகவல் திருட்டு !

ஆப் லோன் வழங்கிய நிறுவனம் உங்களுக்கு கால் செய்வார்கள். உடனடியாக பணத்தை கட்ட வேண்டும் என்பார்கள். நீங்கள் ஓரிரு நாள் நேரம் கேட்டாலும் தரமாட்டார்கள். பின்பு, உங்களை மிகவும் கேவலமான வார்த்தைகளில் திட்ட ஆரம்பிப்பார்கள். உங்கள் அன்பு மனவைி, குழந்தை, தாய், தந்தை, சகோதர, சகோதரிகளை தகாத வார்த்தையில் திட்டுவார்கள். பின்பு, அவர்கள் செய்வதுதான் அதிர்ச்சி தரும் விஷயம். உங்கள் உறவினர் ஒருவருக்கு கால் செய்து, நீங்கள் கடன் பெற்று இருக்கிறீர்கள் என அவதூறு செய்வார்கள். உங்கள் உறவினரை பணத்தை கட்டச் சொல்வார்கள். இதுபோல உங்கள் செல்போனில் பதிவிடப்பட்டுள்ள நண்பர்கள், உறவினர்களின் எண்களை எடுத்து கால் செய்து அவதூறு செய்து மிரட்டுவார்கள். நீங்கள் மானம் போகக் கூடாது என்று அங்குமிங்கும் பணத்தை வாங்கி கடனை அடைப்பீர்கள். இத்துடன் உங்களது பிரச்சனை முடிந்ததா, இல்லையா என தெரியாது. லோன் வழங்கிய நிறுவனம் உங்களுக்கு NOC வழங்கும் வரை அவர்களுக்கு நீங்கள் கடன் காரர்தான். இந்த  நிறுவனங்கள் பெரும்பாலும் மும்பை நகரில் இருந்து இயங்குகிறது. அங்கிருந்து பேசுபவர்கள் யாரும் தங்கள் உண்மையான பெயரைச் சொல்லமாட்டார்கள், ஆனால் நன்றாக மிரட்டுவார்கள். 

இந்த விவகாரம் குறித்து தொடரந்து போராடி வரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், வடிவழகிய நம்பி கூறும்போது, "ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்களுக்கு பிரைவசி என்பதே இல்லை. நீங்கள் எந்த ஆப்பை பதிவிறக்கம் செய்தாலும், கூகுள் கணக்கில் இணைக்க வேண்டும். ஏற்கெனவே நமது செல்போனில் வைக்கப்பட்டிருக்கும் எண்கள், கூகுளின் இமெயில் முகவரியில் சேமித்து வைத்திருப்போம். அந்த தகவலைதான், ஆப் மூலம் லோன் வழங்கும் நிறுவனங்கள் திருடி, உங்கள் உறவினர்களுக்கு கால் செய்து தன்மானத்தை உரசிப் பார்க்கின்றன. நீங்கள் நேரடியாக வங்கிக்கு சென்று கடன் பெறும்போது, பத்திரத்தில் உள்ளவற்றைப் படித்துப்பார்த்து கடன் வாங்குவீர்கள், கையெழுத்து போடுவீர்கள். அதில், சில தரவுகள் உங்களுக்கு திருப்தியில்லை என்றால் கடன் பெறமாட்டீர்கள். ஆனால், ஆப்-பில் நீங்கள் Agree என்ன அழுத்தினால்தான் அந்த ஆப் வேலை செய்யும். எனவே, உங்களை அவர்களின் சட்டதிட்டத்துக்கு கட்டாயமாக வற்புறுத்துகிறார்கள். முதலில், இதுபோன்ற தகவல் திருட்டுகள், சைபர் கிரைமில் வரும். பின்பு, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 -இன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். பாதிக்கப்பட்டவர்கள், உடனடியாக காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை அணுக வேண்டும். மேலும், இதுபோன்ற நிறுவனங்கள் உங்கள் செல்போனில் உள்ள புகைப்படங்களைக் கூட எடுக்கலாம். ஜாக்கிரதை" என்று எச்சரிக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com