அடுத்தமாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர இருக்கும் 14-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து பல வெளிநாட்டு வீரர்கள் விலகியிருக்கின்றனர்.
8 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் குறிப்பிட்ட சில வெளிநாட்டு வீரர்கள் துருப்புச் சீட்டாக இருப்பார்கள். அப்படிப்பட்ட சில வீரர்கள் ஐபிஎல்லில் இருந்து விலகியிருப்பது சில அணிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கொரோனா அச்சம், சொந்த விவகாரங்கள் எனக் கூறினாலும் பெரும்பாலான வீரர்கள் அக்டோபரில் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியை மனதில் வைத்தே வீரர்கள் விலகியதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் இந்தாண்டு திட்டமிட்டதுபோல பார்வையாளர்களின்றி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, இடையிலேயே போட்டி தொடர் நிறுத்தப்பட்டது. நீண்ட ஆலோசனைகளுக்கு பின்பு ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள ஆட்டங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.
இதனையடுத்து செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை போட்டிகள் நடைபெற உள்ளது. அதன் பின்பு அக்டோபர் 23 ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை அமீரகத்திலும் ஓமனிலும் நடைபெறுகிறது. இதுவரை ஐபிஎல்லில் இருந்து விலகிய வீரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
பாட் கம்மின்ஸ் - ஆஸ்திரேலியா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2020 ஐபிஎல் ஏலத்தின்போது ரூ.15.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் பாட் கம்மின்ஸ். கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சு பலமில்லாமல் இருப்பதால் பாட் கம்மின்ஸை பெரிய தொகை கொடுத்து ஏலம் எடுத்தது அந்த அணி. வேகப்பந்துவீச்சில் மட்டுமல்லமால் முக்கியமான கட்டங்களில் அதிரடியாக ரன் சேர்க்கும் திறன் படைத்தவர் கம்மின்ஸ். ஆனால் அமீரகத்தில் தொடர இருக்கும் போட்டிகளில் தான் பங்கேற்கபோவதில்லை என தெரிவித்திருக்கிறார். கம்மின்ஸின் மனைவி பேறு காலத்தில் இருப்பதாலும், செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க இருப்பதாலும் தான் ஐபிஎல்லில் விளையாட முடியாது எனக் கூறியுள்ளார்.
ஜோஸ் பட்லர் - இங்கிலாந்து: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரின் மனைவி லூசி இரண்டாவது குழந்தைக்கு தாயாக இருப்பதால் பட்லர் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக நியூசிலாந்தின் க்ளென் பிலிப்ஸை அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஏறக்குறைய பட்லர் பாணியில் விளையாடக் கூடியவர் கிளென் பிலிப்ஸ். அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான ஜோப்ரா ஆர்ச்சரும் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். அவர் ஏற்கெனவே இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடம் ஜாம்பா - ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியா சுழற்பந்துவீச்சாளரான ஆடம் ஜாம்பா ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல்எலின்போது நிறையப் போட்டிகளில் அவர் விளையாடவிட்டாலும் ஜாம்பா அந்த அணியின் முக்கியமான வீரர். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல்லின்போது நாடு திரும்பிய ஜாம்பா இந்தியாவில் பாதுகாப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். பின்பு தன்னுடைய கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதாக விளக்கமளித்தார். ஆனாலும் இனி ஆர்சிபிக்காக ஜாம்பா விளையாடமாட்டார் என்றே தெரிகிறது. அவருக்கு பதிலாக டி20 போட்டிகளில் நம்பர் 1 ஆல்ரவுண்டரான ஹசரங்காவை ஒப்பந்தம் செய்துள்ளது பெங்களூரு.
ரிலே மியர்டித், ஜை ரிச்சர்ட்சன் - ஆஸ்திரேலியா: பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இருவரும் அமீரக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர். அதுவும் ஜை ரிச்சர்ட்சனை ரூ.16 கோடிக்கு 2021 ஐபிஎல் ஏலத்தில் ஏலம் எடுத்தது பஞ்சாப். அதே ஏலத்தில் ரிலே மியர்டித்தை ரூ.8 கோடிக்கு எடுத்தது. இருவரும் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல்லில் சிறப்பாகவே விளையாடினார்கள். ஆனாலும் இந்தியாவில் போட்டி நிறுத்தப்படுவதற்கு முன்பு கொரோனா பயம் காரணமாக முதலில் ஓட்டம் பிடித்தவர் ஜை ரிச்சர்ட்சன். சொந்த காரணங்களுக்காக இருவரும் ஐபிஎல்லில் பங்கேற்க முடியாத சூழலில் அவர்களுக்கு பதிலாக நாதன் எலிசை வாங்கியிருக்கிறது பஞ்சாப்.
மேலும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விடுப்பு எடுத்துள்ளதால் அவரும் ராஜஸ்தான் அணிக்காக விளையாடமாட்டார் என்றே தெரிகிறது. இன்னும் ஐபிஎல் அமீரகத்தில் தொடங்க நாள்கள் இருப்பதால் எத்தனை வெளிநாட்டு வீரர்கள் இன்னும் 'ஜகா' வாங்க காத்திருக்கிறார்கள் என்பது போக போகதான் தெரியும்.