“தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை” - புனித் ராஜ்குமாரின் கண்களை தானம் செய்த நெகிழ்ச்சி கதை

 “தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை” - புனித் ராஜ்குமாரின் கண்களை தானம் செய்த நெகிழ்ச்சி கதை
 “தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை” - புனித் ராஜ்குமாரின் கண்களை தானம் செய்த நெகிழ்ச்சி கதை
Published on

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது, அவரின் குடும்பத்திலிருந்து தானம் செய்யப்படும் மூன்றாவது கண் இவருடையது. இந்த கண் தானத்திற்கு பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதையும் உள்ளது.

1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டாக்டர். ராஜ்குமார் கண் தான வங்கி இதுவரை 14,901 கண்களை தானமாக பெற்றுள்ளது.  இந்த வங்கியில் கண்களை தானமாக தந்த மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவரது குடும்பத்தில் கண் தானம் செய்யக்கூடிய மூன்றாவது நபராவார். ஏற்கனவே அவரின் தந்தையான கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் மற்றும் தாய் பர்வதம்மாள் ஆகியோர் இறப்புக்கு பின்னர் அவர்களின் கண்கள் இதே வங்கிக்கு தானமாக வழங்கப்பட்டது.

இது குறித்து பேசிய புனித் ராஜ்குமாரின் கண்களை தானமாக பெற்ற டாக்டர் ராஜ்குமார் கண் தான வங்கியின் நிறுவனர் புஜாங் ஷெட்டி, “ புனித் ராஜ்குமாரின் கண்களை தானமாக பெற நேற்று மதியம் மறைந்த சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இரண்டாவது மகன் ராகவேந்திரா ராஜ்குமார் என்னை அழைத்தார். ஏற்கனவே 2006 ஆம் ஆண்டில் ராஜ்குமாரின் கண்களையும், 2017 ஆம் ஆண்டு பர்வதம்மாளின் கண்களையும் தானமாக பெற்றோம். இப்போது அவர்கள் இளையமகன் புனித் ராஜ்குமாரின் கண்களையும் தானமாக பெற்றுள்ளோம்.

தனது குடும்பத்தில் உள்ள அனைவரின் கண்களையும் தானமாக கொடுப்போம் என்ற ராஜ்குமாரின் உறுதிமொழியை காக்க அவர்களின் குடும்பம் இதுவரை மூன்று கண்களை தானமாக அளித்துள்ளது பெருமிதத்துக்குரியது. நேற்று மதியம் 2.45 மணியளவில் அவரின் கண்களை பெற்றோம். விரைவில் அவரின் கண்களை உரியவர்களுக்கு பொருத்துவோம்” என தெரிவித்தார்.

புனித் ராஜ்குமாருக்கு கொரோனா தொற்று மற்றும் கண் பிரச்னைகள் ஏதும் இல்லாததால் அவரின் கண்களை வேறு நோயாளிகளுக்கு பொருத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என கண் மருத்துவனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்குமார் பெயரில் கண் தான வங்கியை தொடங்கியது குறித்து பேசும் புஜாங் ஷெட்டி, “1990களில் கர்நாடகாவில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை. அப்போது நோயாளிகளுக்கு பொருத்த கண்கள் தேவையென்றால் இலங்கையிலிருந்து பெறவேண்டிய சூழல் நிலவியது. அப்போதுதான் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் பெயரில் கண் தான வங்கி தொடங்க அவரிடம் அனுமதி கேட்டோம். அவரும் உடனே அவரின் பெயரை பயன்படுத்த ஒப்புக்கொண்டார். இப்போது நாட்டில் கண் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதேபோல அவர் கூறிய சொல்லை அவரின் குடும்பத்தினரும் பின்பற்றி இப்போதுவரை கண் தானம் செய்வது நாட்டுக்கே முன்னுதாரணம்” என தெரிவித்தார்

எங்கள் குடும்பத்தில் நான் மட்டுமல்ல, எனது மகன்கள், பேரக்குழந்தைகள் உட்பட அனைவருமே கண் தானம் செய்வோம் என்று கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் கொடுத்த வாக்கினை, அவர்களின் குடும்பத்தினர் இது போன்ற பேரிழப்பு ஏற்பட்டுள்ள சூழலிலும் காப்பாற்றிவருவது அனைவரையும் நெகிழ்ச்சியில் உறையவைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com