எங்கும் எதிலும் தொழில்நுட்பமாக மாறியுள்ள இந்த டிஜிட்டல் உலகில் எமோஜிக்கள் இல்லாமல் எந்த ஒரு உரையாடல்களும் இருப்பதில்லை. மகிழ்ச்சி, கவலை, சோகம், கோபம் என அனைத்து வகையான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதற்காக அந்தந்த முகப்பாவத்துடனும், வித்தியாசமான முகபாவத்துடன் ஆயிரக்கணக்கான எமோஜிகள் இருக்கின்றன.
ஒரு சிலரிடம் தங்கள் உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்த முடியாமல் இருக்கும் பலருக்கும் இந்த எமோஜிக்கள் தான் உதவியாக இருக்கின்றன. அது காதலாக இருந்தாலும், கோபமாக இருந்தாலும். இப்படி, பல வகைகளில் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் இந்த எமோஜிக்கள் யார்? இந்த எமோஜிக்களின் உலகை உருவாக்கியவர் யார்? தெரிந்து கொள்ளலாம் வாங்க..
செல்போன்களின் பயன்பாடு அதிகரித்து வந்த சூழலில், மனிதனின் உணர்வுகளை எமோஜியாக முதன்முதலில் வடிவமைத்தது ஷிகேடகா குரிடா (Shigetaka Kurita) தான். ஜப்பானில் வானிலை அறிக்கைகளை வாசிக்கும் போது சின்ன சின்ன கிராப்பிக்ஸ் மூலம் செய்திகளைச் சொல்ல எமோஜிக்களை பயன்படுத்தி வந்தனர். 1995-களில் செல்போன்களில் இணையம் பயன்படுத்தும் வசதிகள் வந்தது. அப்போது இந்த எமோஜிக்கள் அனைத்தும் மொபைல் இன்டர்நெட் பிளாட்பார்ம்-க்கு வந்தது. அப்போது இருந்த எமோஜிக்களின் எண்ணிக்கை வெறும் 76 தான். இதையடுத்து 2002ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி எமோஜி காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எமோஜி அப்போது அதிகம் பயன்படுத்தப்பட்டு, மிகவும் பிரபலமானது. எனவே அதனை அறிமுகப்படுத்தப்பட்ட ஜூலை 17ம் தேதியை எமோஜி தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டு, 2014 ஜூலை 17-ம் தேதி முதன்முதலில் உலக எமோஜி தினம் கொண்டாடப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் புதிதாக பல்வேறு வகையான எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி ஒவ்வொரு வருடமும் அதிகம் பயன்படுத்தும் டாப் எமோஜிகளுக்கு விருதுகளும் கொடுக்கப்படுகின்றன.
அதன்படி, 2022ம் ஆண்டில் புதிதாக அறிமுகமான எமோஜிக்களில், அதிகம் பயன்படுத்தப்பட்டு முதலிடத்தைப் பிடித்திருப்பது ஆனந்தக் கண்ணீருடன் முகம் இருக்கும்படி உள்ள எமோஜிதான் முதல் பரிசை வென்றுள்ளது. இரண்டாவது இடத்தில் இதய கைகள் கொண்ட எமோஜியும், மூன்றாவது இடத்தில் உருகும் முகம் கொண்ட எமோஜியும் முதல் மூன்று இடத்தை பிடித்து, 2022ம் ஆண்டின் சிறந்த எமோஜிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
2022ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எமோஜிக்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது இதய எமோஜிதான். அதுவும் Pink Heart எமோஜி. 38.1% வாக்குகளைப் பெற்று அதிகம் எதிர்பார்க்கப்படும் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து 10.7% வாக்குகளைப் பெற்று Shaking Face எமோஜி இரண்டாவது இடத்தையும், 7.3% வாக்குகளைப் பெற்று Light Blue Heart எமோஜி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
பழையதாக இருந்தாலும் புதியதாக இருந்தாலும், ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களிலும் ஒவ்வொரு நாளும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் எமோஜி இதய எமோஜி தான். உலகம் முழுவதும் உள்ளவர்களின் இதயத்தில் இடம் பிடித்து 2022ம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளர் விருதைத் தட்டிச் சென்றுள்ளது சிகப்பு இதய எமோஜி.
ஃபேஸ்புக்கில் இருக்கும் எமோஜிக்களை ஒவ்வொரு நாளும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது 6 கோடிக்கும் அதிகம். அதேபோல் ஃபேஸ்புக்கின் மெஸெஞ்சரில் ஒருநாளைக்கு 500 கோடி எமோஜிக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் 70 கோடி எமோஜிக்கள் ஃபேஸ்புக் பதிவுகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாகக் காதல், முத்தம், இதயங்கள், அதிக மகிழ்ச்சி, கண்ணடிப்பது, வெட்கம், அழுகை போன்ற எமோஜிக்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களில் 2022-ம் ஆண்டு கணக்குப்படி தற்போது 3,460 எமோஜிக்கள் உள்ளன. மேலும் புதிதாக 31 எமோஜிக்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வந்துள்ளதால் 2023ம் ஆண்டில் எமோஜிக்களின் எண்ணிக்கை 3,491 ஆக அதிகரிக்கவுள்ளது.
பல்வேறு மாற்றங்களுடன் புதிய ஸ்கின் டோன் வித்தியாசங்களுடன் புதிது புதிதான எமோஜிக்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அதில் உங்களுக்குப் பிடித்த, நீங்கள் அதிகம் பயன்படுத்தும் எமோஜிக்களை கமெண்டில் தெரிவிக்கலாமே...