கினா பியான்சினி (Gina Bianchini) பற்றியும், அவர் இணை நிறுவனராக உருவாக்கிய 'நிங்' (Ning) சமூக வலைப்பின்னல் சேவை குறித்தும் அறிமுகம் செய்துகொள்ளும்போது, முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான ஃபேஸ்புக்கை ஒப்பிட்டு பார்க்கத் தோன்றுவதோடு, 'ஃபேஸ்புக் பெற்ற வெற்றியை 'நிங்' பெறாமல் போனது ஏன்?' எனும் கேள்வியும் தோன்றும். இந்தக் கேள்விக்கு பதிலாக 'நிங்' தோல்வியடைந்ததற்கான காரணங்களை தேடுவதைவிட, ஃபேஸ்புக்கிற்கு பதிலாக 'நிங்' வெற்றி பெற்றிருந்தால் சமூக ஊடக பரப்பு எப்படி இருந்திருக்கும் என கேள்வி எழுப்புவது சுவாரஸ்யமாக இருப்பதோடு, சமூக வலைப்பின்னல் சேவையாக 'நிங்' தளத்தின் தனித்தன்மையை புரிந்துகொள்ள உதவும்.
அதற்காக 'நிங்' தளத்தை தோல்விக் கதையாக கருதிவிட முடியாது. சமூக ஊடக சேவையாக 'நிங்' தாக்குப் பிடித்து நிற்பதோடு, அந்த சேவையை உருவாக்கிய கினா பியான்சினியும் சமூக வலைப்பின்னல் பரப்பில் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கிறார். கினா அண்மையில் உருவாக்கி இருக்கும் சமூக வலைப்பின்னல் நிறுவனம், சர்ச்சைகளிலும், விமர்சனங்களிலும் சிக்கித் தவிக்கும் ஃபேஸ்புக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சேவையாக கவர்ந்திழுக்கிறது.
வலைப்பின்னல்: 'மைட்டி நெட்வொர்க்ஸ்' (Mighty Networks) எனும் பெயர் கொண்ட அந்நிறுவனம் படைப்பாளிகளும், உருவாக்குனர்களும் தங்களுக்கான இணைய சமூகத்தை உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது. இணையதள வசதி, உறுப்பினர்கள் பகுதி மற்றும் இணைய வகுப்புகள் ஆகியவற்றை இணைந்து அளிக்கும் இந்த சேவையை சமூக வலைப்பின்னல் தளங்களின் நவீன வடிவம் என்றும் வருணிக்கலாம்.
ஒருவிதத்தில் பார்த்தால், 'மைட்டி நெட்வொர்க்ஸ்' தளத்தை 'நிங்' சேவையின் நீட்சி என்றே குறிப்பிடலாம். 'நிங்' தளம் எப்படி, பயனாளிகள் தங்களுக்கான சொந்த வலைப்பின்னலை உருவாக்கிக் கொள்ள வழி செய்ததோ, அதேபோல 'மைட்டி நெட்வொர்க்ஸ்', பயனாளிகள் தங்களுக்கான இணைய சமூகத்தை உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது.
'மைட்டி நெட்வொர்க்ஸ்' சேவை செயல்படும் விதத்தை பார்க்கும்போது, கினா சமூக ஊடக பரப்பில் தன்னை காலத்திற்கு ஏற்ப புதுப்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதோடு, இந்தப் பரப்பை அவர் நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார் என்பதும் புரியும். ஏனெனில் 'நிங்' சேவை அறிமுகமானபோது எந்த அளவு புதுமையானதாக இருந்ததோ, அதைப்போலவே 'மைட்டி நெட்வொர்க்ஸ்' சேவையும் இப்போது புதுமையாக இருக்கிறது.
இப்போது 'நிங்' தளத்தை திரும்பி பார்ப்பதன் மூலம், கினாவின் தொழில்முனைவு பாதையில் பயணிக்கலாம். இந்தப் பயணம் சமூக வலைப்பின்னல் சேவை தளங்களின் வளர்ச்சியையும் சீர்தூக்கி பார்க்க உதவும்.
என் சமூகம்: கினா ''எப்போதுமே தனியாக இருந்ததும் இல்லை, தனியாக உணர்ந்ததும் இல்லை'' என்று பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதாவது எப்போதுமே, குழுவாகவே இருந்ததாக கூறியிருக்கிறார். ''மிகப்பெரிய சவாலாக இருந்தாலும் சமூகமாக இணைந்து அதை எதிர்கொள்ளும்போது, அது அத்தனை அச்சம் தருவதாக இருக்காது'' என்று அவர் கூறியிருக்கிறார்.
சகோதரர்களும், குடும்பத்தினருமே தனது முதல் குழுவாக இருந்ததாக கூறும் கினா, பள்ளி - கல்லூரி என எப்போதுமே, எந்தக் குழுவிலும் தான் இல்லாமல் இருந்ததில்லை என்கிறார். குழுவில் இருந்த மற்றவர்கள் பிடித்து தள்ளியதாலேயே தான் வளர்ந்ததாக கூறுபவர், ''தோல்வி ஒரு போதும் என்னை மிரளச் செய்ததில்லை'' என்கிறார்.
கினா 'குழு' என்று கூறுவதை 'சமூகம்' என புரிந்துகொள்ளலாம். குடிபோதையில் இருந்த வாகன ஓட்டியால் தந்தை உயிரிழந்தபோதும், உதவிக்கு வந்தது, தன்னைச் சார்ந்த உள்ளூர் சமூகம்தான் என்கிறார். தன் வாழ்க்கையில் மாறாத அம்சமாக இருப்பதும் சிறு குழுக்களின் தாக்கமே என்று கூறும் கினா, ''ஏதேனும் ஒன்று அச்சுறுத்தினால் உங்களுக்கான குழுவை தேடிச் செல்லுங்கள்'' என்பதை தன் வாழ்க்கைப் பாடமாக கூறுகிறார்.
வாழ்க்கைப் பாடமாக கினா கற்றுக்கொண்டதையே அவரது தொழில் வாழ்க்கையிலும் செயல்படுத்தி வருகிறார். 'நிங்'கின் உருவாக்கத்தில் இருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம்.
ஃபேஸ்புக் போட்டி: ஃபேஸ்புக் அறிமுகமான 2004-ம் ஆண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்டு, அடுத்த ஆண்டு 'நிங்' அறிமுகமானது. ஒரே காலத்தில் அறிமுகமானாலும், இரண்டு தளங்களின் தன்மையும் நோக்கமும் வேறாக இருந்தது. பரவலாக அறியப்பட்டது போல, ஃபேஸ்புக் அமெரிக்க கல்லூரி மாணவர்களுக்கான வலைப்பின்னல் சேவையாக அறிமுகமானது. அதிலும் துவக்கத்தில் ஹார்வர்டு கல்லூரி மாணவர்களுக்கான சேவையாக அறிமுகமாகி, பின்னர் மற்ற கல்லூரிகளுக்கு விரிவானது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே, பொதுமக்களுக்கான சேவையாக அறிமுகமாகி, உலக அளவில் வெற்றி பெற்றது.
ஃபேஸ்புக் நண்பர்களைத் தேடுவதையும், நட்பு வலையை விரிவாக்கிக் கொள்வதையும் முக்கிய அம்சமாக கொண்டிருந்தது என்றால், 'நிங்' முற்றிலும் மாறுபட்ட சேவையாக அமைந்து, உறுப்பினர்கள் தங்களுக்கான சொந்த வலைப்பின்னலை தாங்களே உருவாக்கி கொள்வதற்கான மேடையாக அறிமுகமானது.
1997-ம் ஆண்டில் அறிமுகமான சிக்ஸ்டிகிரீஸ்.காம் சமூக வலைப்பின்னல் தளம் எனும் கருத்தாக்கத்தை அதிகாரபூர்வமாக துவக்கி வைத்ததாக கருதப்படும் நிலையில், அடுத்து வந்த ஆண்டுகளில் ஃபிரண்ட்ஸ்டர், மைஸ்பேஸ், ரைஸ், லிங்க்டுஇன், பெபோ என வரிசையாக சமூக வலைப்பின்னல் தளங்கள் அறிமுகமாகிக் கொண்டிருந்தன. புத்தாயிரமாண்டுக்கு பிறகு, பயனாளிகள் பங்கேற்புக்கு வழி செய்யும் தன்மை கொண்ட வலை 2.0 எனும் கருத்தாக்கம் சார்ந்த தளங்கள் பல துறைகளில் உருவாகத் துவங்கியபோது, இதன் முக்கிய அங்கமாக சமூக வலைப்பின்னல் அலையும் வீசியது.
இணையத்தில் திரும்பிய இடமெல்லாம் சமூக வலைப்பின்னல் தளங்கள் முளைத்துக்கொண்டிருந்த சூழலில்தான் நிங் டாட் காம் சேவை அறிமுகமானது. வலையின் முதல் வெகுஜன பிரவுசர் என கொண்டாடப்படும், நெட்ஸ்கேப் நிறுவனர் மார்க் ஆண்டர்சனுடன் இணைந்து, கினா பியான்சினி 'நிங்' தளத்தை துவக்கினார்.
டாட் காம் அலை: அமெரிக்காவின் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பட்டதாரியான கினா, தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் கொண்டிருந்ததோடு, தொழில்முனைவிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இணைய விளம்பரங்களின் வீச்சை கண்காணித்து, அளவிட வழி செய்த மென்பொருள் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றை கினா நடத்திக்கொண்டிருந்தார். இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் மார்க் ஆண்டரசன் இடம்பெற்றிருந்தார். டாட் காம் குமிழ் வெடித்துச் சிதறிய பாதிப்பால், கினா நிறுவனமும் மூடப்பட்டது.
இதனிடையே, ஆண்டர்சன் புதிய நிறுவனத்தை துவக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். சீன மொழியில் அமைதியை குறிக்கும் 'நிங்' எனும் பெயரில் உருவாக இருந்த இந்நிறுவத்தில் இணையுமாறு அவர் விடுத்த அழைப்பை ஏற்று கினா, இணை நிறுவனராக இணைந்தார். இப்படித்தான் 'நிங்'கின் பயணம் துவங்கியது.
ஆண்டர்சன் மென்பொருள் வல்லுனர் என்றால், கினா சமூகப் பட்டாம்பூச்சியாக இருந்தார். வீட்டில் தனித்திருப்பதைவிட நிறுவன அரங்கில் மற்றவர்களுடன் கலந்து பழகுவதையே அவர் விரும்பினார். இருவரின் இந்த இரண்டு தன்மையும் 'நிங்' தளத்தின் ஆதாரமாக அமைந்தன.
இணையவாசிகள் வெறும் பார்வையாளர்களாக இருந்த நிலை மாறி, அவர்களைப் பங்கேற்பாளர்களாக வலை 2.0 தளங்கள் மாற்றியிருந்தன என்றால், அவர்கள் பரஸ்பரம் இணையம் வழியே தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும், தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும் சமூக வலைப்பின்னல் தளங்கள் வழிவகுத்தன.
இந்தப் பின்னணியில் அறிமுகமான 'நிங்' மற்றொரு சமூக வலைப்பின்னல் சேவையாக அமையாமல், உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அவர்களுக்கான வலைப்பின்னலை அமைத்துக்கொள்ள வழி செய்தது. பெரும்பாலான சமூக வலைப்பின்னல் தளங்கள் உறுப்பினர்கள் நண்பர்களை தேடிக்கொள்ளவும், தொடர்புகளை உருவாக்கி கொள்ளவும் வழிவகுத்தன என்றால், நீங்களே உங்களுக்கான சமூக வலைப்பின்னலை உருவாக்கிக் கொள்ளுங்கள் எனும் வகையில் 'நிங்' அமைந்திருந்தது.
சொந்த வலைப்பின்னல்: ஆக, 'நிங்'கில் உறுப்பினராக பதிவு செய்துகொள்ளும் நபர்கள், தாங்களே தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு அவற்றை பரமாரிக்கவும் முடிந்தது. இதற்கான மேடையாக அமைந்ததோடு, வலைப்பின்னலை உருவாக்க பயனாளிகளுக்கு தேவையான வசதிகளை எல்லாம் 'நிங்' அளித்தது. பயனாளிகள் தங்கள் அறிமுகப் பக்கத்தை அமைத்து, நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து, அவர்களுடன் கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட்டனர். புகைப்படப் பகிர்வு. இ-மெயில் வசதி போன்றவையும் அளிக்கப்பட்டன.
தனிநபர்கள் துவங்கி, வர்த்தக நிறுவனங்கள், அமைப்புகள், பிராண்டுகள், கல்வி நிறுவனங்கள் என பலதரப்பினரும் நிங் சேவையாக ஈர்க்கப்பட்டனர். ஆரம்பத்தில் 'நிங்' சேவை பலருக்கு குழப்பமாக அமைந்தாலும், மெல்ல அதன் அருமை புரியத் துவங்கியது. உறுப்பினர்கள் தங்களுக்கான சொந்த சின்னஞ்ச்சிறு இணைய சமூகத்தை அமைத்துக்கொள்ள முடிந்தது. ஒவ்வொரு குழுவில் இருப்பவர்களும் தங்கள் பங்கிற்கு நண்பர்களை கொண்டு வந்ததாலும், பலர் தங்களுக்கான தனிக் குழுக்களை அமைக்க முற்பட்டதாலும் 'நிங்' வளர்ச்சி அடைந்தது.
ஒருகட்டத்தில் 'நிங்' தளத்தின் மூலம் லட்சக்கணக்கானோர் தங்களுக்கான வலைப்பின்னலை உருவாக்கிக் கொண்டிருந்தனர். குறிப்பாக, கல்வி நிறுவனங்கள் மாணவர்களுடன் தொடர்புகொள்ள 'நிங்' சேவையை பெரிதும் பயன்படுத்தின. 'நிங்' விளம்பரம் சார்ந்து இயங்கிய நிலையில் பயனாளிகளுக்கு இலவசம் மற்றும் கட்டணம் சார்ந்த வசதிகளை அளித்தது. 'நிங்' பயனாளிகளியும் ஈர்த்தது, முதலீட்டாளர்களையும் ஈர்த்தது.
ஒருவரும் அறியாத உலகின் மிகப் பெரிய சமூக வலைப்பின்னல் என 'நிங்'கை கினா ஒரு கூட்டத்தில் வர்ணித்திருந்தார். அந்த அளவுக்கு 'நிங்' ஆற்றல் மிக்கதாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் வர்த்தக நோக்கம் கொண்டவர்கள் தங்களுக்கான இணை இனக்குழுக்களை உருவாக்கிக் கொள்ள வழி செய்த டிரைப்.நெட் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களும் அறிமுகம் ஆகின.
பாதை மாற்றம்: ஒரு மாபெரும் வலைப்பின்னல் சேவை உருவாக்குவதற்கு பதில், லட்சக்கணக்கான சின்னச் சின்ன வலைப்பின்னல்களை உருவாக்கிவதில் 'நிங்' வெற்றி பெற்றது. இந்தக் காலகட்டத்தில், 'மைஸ்பேஸ்' தளம்தான் பிரபலமான வலைப்பின்னல் சேவையாக இருந்தது. 'மைஸ்பேஸ்' தளம் பிரதானமாக பாடர்களும், இசைக்கலைஞர்களும் ரசிகர்களை தொடர்பு கொள்வதற்கான மேடையாக இருந்தது.
ஆனால், 'மைஸ்பேஸ்' தளமே பின்னுக்குத் தள்ளப்படும் வகையில் ஃபேஸ்புக் முன்னணிக்கு வந்தது. தொடர்ந்து ஃபேஸ்புக் எழுச்சி பெற்ற நிலையில், 'நிங்' தளமும் முக்கியத்துவத்தை இழக்கத் துவங்கியது. இலவச சேவையாக இருந்தது ஃபேஸ்புக்கின் பலமாக அமைந்தது என்றால், கட்டணச் சேவையாக இருந்தது 'நிங்'கை பாதித்தது. ஃபேஸ்புக்கின் எழுச்சியும், 'நிங்'கின் சரிவும் ஆழமான ஆய்வுக்குரியது என்றாலும், ஃபேஸ்புக் தொடர்ந்து அறிமுகம் செய்த அம்சங்கள் பயனர்களுக்கு நட்பாக இருந்தன என்பது அதன் வெற்றிக்கு வழிவகுத்த முக்கிய அம்சமாக கருதலாம்.
ஆனால், சொந்த சமூக வலைப்பின்னலை பராமரிப்பதும், அதை வளர்த்தெடுக்க கட்டணம் செலுத்துவதும் 'நிங்'கின் பாதகமான அம்சமாக அமைந்தது. இதனிடையே முதலீட்டாளர் நெருக்கடி, நிர்வாக தடுமாற்றம் என பல காரணங்களினால 'நிங்' பாதிக்கப்பட்டு வேறு நிறுவனத்திடம் விற்கப்பட்டது.
'நிங்' நிறுவனத்தில் இருந்து ஆண்டர்சன், கினா இருவருமே வெவ்வேறு கட்டங்களில் வெளியேறிய நிலையில், சமூக வலைப்பின்னல் பரப்பிலேயே கினாவின் பயணம் தொடர்கிறது. இதற்கேற்ப அவர் சமூக வலைப்பின்னல் பரப்பின் வளர்ச்சியை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார். 'சமூக வலைப்பின்னல் தொழில்நுட்பங்கள் பல உருவாகி ஆதிக்கம் செலுத்தும்' என்று அவர் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். மக்கள் பகிர்வதை இயலபாக உணரத் துவங்கியிருப்பதால் சமூக தொழுல்நுட்பங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்கிறார்.
புதிய பயணம்: இந்த நம்பிக்கையோடு, 'மைட்டிபால்' எனும் சமூக ஊடக நிறுவனத்தை துவக்கி நடத்தியவர், தற்போது 'மைட்டி நெட்வொர்க்ஸ்' நிறுவனத்தை நடத்தி வருகிறார். படைப்பாளிகள் தங்களுக்கான சமூகத்தை தேடிக்கொண்டு தொடர்புகொள்ள வழி செய்யும் மேடையாக இது விளங்குகிறது.
ஃபேஸ்புக் ஏற்கெனவே அறிமுகனான நண்பர்களை தொடர்புகொள்ள வழி செய்து, பயனாளிகளின் ஆர்வம் பற்றி தகவல்களை வைத்துக்கொண்டு விளம்பர வருவாய் ஈட்டுகிறது என கூறும் கினா, ''ஒத்த கருத்துள்ள புதியவர்களை தொடர்புகொள்ள வழி செய்வதில் ஃபேஸ்புக்கிற்கு ஆர்வம் இல்லை'' என்கிறார். மாறாக, ஒத்த கருத்து மற்றும் ஒருமித்த ஆர்வத்தின் அடிப்படையில் புதியவர்களை தொடர்பு கொள்வதை மைட்டிநெட் வொர்க்ஸ் தனது ஆதார தன்மையாக கொண்டிருக்கிறது.
இலவசம் மற்றும் கட்டணச் சேவை அளிக்கும் இந்நிறுவனம் ஏற்கெனவே பல்வேறு ஆர்வங்களை கொண்டவர்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது. ''பயனாளிகள் தங்களுக்கான ரசிகர்களை தொடர்புகொள்ள வைத்து, வருவாய் ஈட்ட வழி செய்வதே எங்கள் நோக்கம்'' என்கிறார் கினா. பயனாளிகளுக்கு தேவையான வசதிகளை நிறுவனம் அளிக்கிறது.
படைப்பூக்கம் மிக்கவர்கள் ரசிகர்களை நேரடியாக தொடர்புகொண்டு தங்களுக்கான வருவாயை தேடிக்கொள்ள வழி செய்யும் சேவைகள் பிரபலமாக உள்ள கட்டத்தில், இதற்கான இணைய சமூகத்தை உருவாக்கிக் கொள்ளும் சேவையாக 'மைட்டி நெட்வொர்க்ஸ் விளங்குவதாக கினா கூறுகிறார்.
தொழில்முனைவில் அனுபவசாலியான கினா, போட்டிச் சூழலில் தனித்து விளங்க மாறுபட்ட சேவை தேவை என்கிறார். மாறுபட்ட தன்மை என்பது சேவையை பயன்படுத்துவதற்கான மாறுபட்ட பயன்பாட்டை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்கிறார். வெறும் செய்திகளை நுகர வழி செய்யும் பெரிய சமூக ஊடக சேவைகளை விட, ஒருமித்த ஆர்வம் சார்ந்த சமூக வலைப்பின்னல்கள் மாறுபட்டதாக இருக்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த நம்பிக்கையே அவரது புதிய நிறுவனத்தின் அடிப்படையாக அமைகிறது.
முந்தைய அத்தியாயம்: ஸ்டார்ட் அப் இளவரசிகள் 10: இணையம் வளர்த்த இவா பாஸ்கோ - அது ஒரு சைபர் கஃபே காலம்!