எளியோரின் வலிமைக் கதைகள் 8 - ''போட்டோகிராஃபருக்கு அப்போ இருந்த மவுசு; இப்போ இல்லைங்க!''

எளியோரின் வலிமைக் கதைகள் 8 - ''போட்டோகிராஃபருக்கு அப்போ இருந்த மவுசு; இப்போ இல்லைங்க!''
எளியோரின் வலிமைக் கதைகள் 8 - ''போட்டோகிராஃபருக்கு அப்போ இருந்த மவுசு; இப்போ இல்லைங்க!''
Published on

புகைப்படம் என்றாலே அலாதியானதுதான். எந்த உணர்வில் இருந்தாலும், 'போட்டோ எடுக்கிறேன்' என்றால் உடனே சிறு மகிழ்ச்சி பிறந்துவிடும். அது தவிர்க்க முடியாது. 'போட்டோல நீ அழகா இருக்க' என்பது அத்தனை மகிழ்ச்சிக்குரியது. இது அந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், இது தாத்தாவுடன் எடுத்த புகைப்படம், இது அப்பாவுடன் எடுத்த புகைப்படம், இது என்னுடைய தலைவருடன் எடுத்த புகைப்படம், இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டே போவார்கள். அதிலும் புகைப்படத்துக்கு என்று தனி இடம் இருக்கிறது என்றால், ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் திருமண புகைப்படம் தான். எப்பொழுதெல்லாம் பசுமை நினைவுகள் அவர்களுக்கு வந்து போகிறதோ அப்போதெல்லாம் அந்த புகைப்படங்களை பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள்.

புகைப்படங்கள் என்பது வெறும் படங்கள் அல்ல. அது ஒரு காலக்கட்டத்தின் நினைவுகளின் பிரதிபலிப்பு; சம்பவங்களை உறைய வைத்துக்காட்டும் காலக்கண்ணாடி; வாழ்தலுக்கான அச்சாணி. தேடலுக்கான தோணி. அப்படிப்பட்ட புகைப்படங்களை எடுப்பது என்பது ஒரு மிகப்பெரிய கலை. புகைப்படக்காரர்கள் பெரும்பாலும் வசதிபடைத்தவர்களாக இருப்பதில்லை. நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் இந்த கலை மீது ஆர்வத்தோடு அதிகமாக பணியாற்ற தயாராக இருக்கிறார்கள். அப்படி பணியாற்றுகிற அந்த எளிய மனிதர்களின் வாழ்வியல் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

புகைபடக் கலையை தனது வாழ்க்கையாக கொண்டவர் தான் 46வயதாகும் ஸ்ரீதர். கடலூரை சொந்த ஊராக கொண்டவரைச் சந்தித்தே பேசினோம். ''எங்க குடும்பத்தில் எல்லாருமே போட்டோகிராபர் தாங்க. நான் மூன்றாவது தலைமுறை. என்னுடைய தாத்தா ஒரு புகைப்படக் கலைஞர். அவருக்கு அப்புறம் எங்க அப்பா, அவரும் ஒரு புகைப்படக் கலைஞர் தான். எங்க குடும்பத்தில் மூத்த அண்ணன் அவரும் ஒரு புகைப்படக் கலைஞர். இப்ப நானும் புகைப்படக் கலைஞராதான் இருக்கிறேன்.

எஸ்.எஸ் ஸ்டூடியோன்னா.. கடலூர்ல தெரியாத ஆளே இல்லைங்க. அந்த அளவுக்கு பரிச்சயமான ஸ்டூடியோ. எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்குது. தொடர்ந்து பாரம்பரியமா போட்டோ எடுக்கிறது வேலையா இருந்ததுனால, எனக்கு வேற எந்த துறை மேலேயும் நாட்டமில்லை. எந்த நேரமும் எங்க வீட்டுக்குள்ள பிலிம் ரோல்களும் கேமராக்களுமா கிடக்கும். அதையே பார்த்து பார்த்து பழகி போனதால நானும் இந்த துறைக்கு உள்ள நுழைஞ்சுட்டேன்.

எனக்கு 17 வயசு இருக்கும்போது நான் போட்டோகிராபர் ஆயிட்டேன். அப்பா, அண்ணன் கூட ஆர்டருக்கு போகும்போது, சின்ன சின்னதா ஒவ்வொரு வேலையும் கத்துக்கிட்டேன். அப்பல்லாம் போட்டோ எடுக்குறது ஒரு பெரிய சவாலா இருக்கும். ஏன்னா அப்போ ரோல் கேமரா தான். இப்ப இருக்க மாதிரி டிஜிட்டல் கேமரா கிடையாது. ஒரு போட்டோ எடுத்து தவறு ஆயிடுச்சின்னா, அந்த பிலிம் ரோலை டெவலப் பண்ணி வந்ததுக்கு அப்புறம் தான் அந்த தவறே நமக்கு தெரியும். ஆனா இப்ப அப்படி இல்லை. அடுத்த நிமிடமே பார்த்திடலாம். உடனே அந்த போட்டோவ டெலிட் பண்ணிட்டு, வேறு ஒரு போட்டோ எடுத்திடலாம்.

அப்ப ரொம்ப சிரமமான வேலையாக இருந்துச்சு. நுணுக்கமாக செய்ய வேண்டிய வேலையாவும் இது இருந்துச்சு. இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் போட்டோகிராபர்களுக்கு நல்ல வரவேற்பும் மரியாதையும் இருந்தது. திருமணவிழா,மஞ்சள் நீராட்டு விழா, காதணி விழா, வேறு ஏதாவது பிரிவு உபச்சார விழா எதுவா இருந்தாலும் போட்டோகிராபரை எதிர்பார்த்து காத்து இருப்பாங்க. இப்ப நிறைய தொழில்நுட்பம் வந்திடுச்சி. அவங்க அவங்க கையில வச்சிருக்கிற மொபைல் போன்லே போட்டோ எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதனால போட்டோகிராபர்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லன்னே சொல்லலாம்.

எல்லாருக்கும் ஒரு நினைவு ஏற்படுத்தணும். அப்படின்னு நினைச்சா அது போட்டோவாதாங்க இருக்கும். எங்க தாத்தா, அப்பா எடுத்த போட்டோ கூட இன்னும் நிறைய பேர் வச்சிருக்காங்க. நான் பார்த்திருக்கேன். எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், அதை ஆவணம் ஆக்கிறது போட்டோ தாங்க. ஆனா அப்படிப்பட்ட போட்டோகிராப்பருக்கு, பொருளாதார ரீதியாக பெரிய வருமானம் ஒண்ணும் கிடையாதுங்க. சமையல், நாதஸ்வரம், டெகரேஷன் பண்றவங்க, தாம்பூலம் போடுறவங்க, அப்படின்னு தனித்தனியா எல்லாருக்கும் அன்னைக்கே காசு கொடுத்துடுவாங்க. ஆனா, போட்டோகிராபருக்கு மட்டும் அனைக்கு காசு கெடைக்காது. அடுத்த வாரம், அப்டின்னு சொல்லி தள்ளிபோட்ருவாங்க. இந்த வருமானத்தை நம்பி தான் குடும்பம் இருக்குது. இதெல்லாம் அவங்களுக்கு எங்க தெரியபோகுது?

நான் மட்டும் இல்லீங்க, எல்லா போட்டோகிராபர் நிலைமையும் இப்படித்தான் இருக்கு. ஆனாலும், கூட பணம் தரலையே பணம் கம்மியா கொடுக்கிறார்களே, அப்படி எல்லாம் பார்த்து நாங்க எங்க வேலைய செய்வதில்லை. ஒவ்வொரு முறையும் புதுப் புது விதமா புகைப்படம் எடுக்கிறது, அழகுபடுத்தி அவங்கள காட்டுறதுன்னு, ஒவ்வொன்னும் நாங்க மெனக்கெட்டுதான் செய்வோம். இப்ப நிறைய சமூகவலைத்தளங்கள் எல்லாம் வந்து போனதால, புதுசு புதுசா வருகிற இளைஞர்கள் எல்லாம் விதவிதமா எங்களை விட அருமையா படமெடுக்கிற தொழில்நுட்பத்தை கத்திட்டு இருக்காங்க. அது ஒரு வகையில் வரவேற்கதக்கதுதாங்க.

எங்க தொழில்ல வருமானம்னு பார்த்தா அப்படி ஒன்னும் பெருசா அதுல இல்லைங்க. இப்படியேதான் தினமும் ஒவ்வொரு போட்டோகிராப்பர்கள் வாழ்க்கையும் ஓடிக்கிட்டு இருக்கு. மற்றவர்களை போலதான் நாங்களும், குடும்பத்த பாத்துக்கணும், புள்ளைங்கள படிக்க வைக்கணும், அவங்களுக்கு தேவையானத வாங்கிக் கொடுக்கணும். ஆனால் பொருளாதாரம் தான் எங்களுக்கு பெரிய கேள்விக் குறியா இருக்கு. இருந்தாலும், நாங்க கத்துகிட்ட இந்த கலையை நாங்க இன்னமும் செயல்படுத்திக்கிட்டு தான் இருக்கிறோம் என்றார்.புகைப்படம் என்பதே ஆவணப்படுத்துவது தான். அப்படிப்பட்ட இந்த தொழில், நவீனமயம் என்ற பெயர்ல அழிஞ்சிடுமோ என பயமா இருக்கு'' என்றார்.

புகைப்படத்தை எடுத்தால் மட்டும்போதாது. அந்த படத்தை ஒழுங்குபடுத்துவது, அழகுபடுத்துவது என பல்வேறு வேலைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அதை ஒழுங்குபடுத்துகிற பூங்குழலனைச் சந்தித்து பேசினோம்.

''போட்டோ எடுக்குறது மட்டும் தெரிஞ்சிட்டா போதாதுங்க. ஆல்பம் தயார் பண்ணனும். அதுக்கு டிசைனிங் கத்துக்கணும். எங்களுக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாம் போட்டோ எடுக்கறதோட நிறுத்திக்குவாங்க. கம்ப்யூட்டர் உள்ள வரவே மாட்டாங்க. என்னை போன்ற இளைஞர்கள் எல்லாம் இப்ப டிசைனிங் மேல ரொம்ப ஆர்வமாக இருக்கிறோம். சாதாரணமா ஒரு ஆல்பம் டிசைன் பண்றதுக்கு 3,000 - 8,000 ஆயிரம் வரைக்கும் கொடுக்க வேண்டியிருக்கும். அதுவே நாம சொந்தமா டிசைன் பண்ணா அந்த பணம் நமக்கு மிச்சமாகும். சாதாரணமாக ஒரு மாசத்துக்கு நாலு முகூர்த்தம் இருக்குதுன்னா, இரண்டு முகூர்த்தம் முழுமையாக கிடைக்கும்.

இன்னும் சொல்லப்போனால் சில மாசத்துல ஒரு முகூர்த்தம் கூட இருக்காது அந்த மாசத்துல போட்டோ எடுத்து கொடுக்கிற கூலி வேலைக்கு தான் போவங்க. நிறைய பேர் போட்டோ எடுப்பதில் ஆர்வம் காட்டற அந்த வேளையில, ஆல்பம் வாங்குவதில்லை அந்த ஆர்வம் காட்றதில்லிங்க; 60 சதவீதம் பேர் தான் முழுசா பணம் கொடுத்து ஆல்பம் வாங்குவாங்க. மீதமிருக்கும் பேர் பொறுமையா வாங்கிக்கலாம் அப்படின்னு அசால்டா விட்ருவாங்க. அப்படி அவங்க இருக்கிறது எங்களுக்கு தான் பெரிய கஷ்டமா இருக்கும். அத நம்பி பெரிய பட்ஜெட் எல்லாம் போட்டு அந்த மாசத்து எப்படி ஓட்டுவதுன்னு தயாராக இருக்கிற எங்களுக்கு இது ஒரு ஏமாற்றமாகவே இருக்கும்'' என்கிறார் அவர்.

இன்றைய ஸ்மார்ட் போன்களின் அதிநவீன கேமராக்கள் வருகை, போட்டோகிராபர்களுக்கு பெரும் சவலாக இருக்கிறது. காலம் காலமாக இந்த தொழிலை செய்துவருபவர்களை மொபைல் கேமராக்கள் அச்சுறுத்தி வருகிறது. ஆவணப்படுத்துவது என்பது ஒரு முக்கியமான கலை அந்த கலையை செய்கிற இந்த எளிய மனிதர்களின் வாழ்க்கை போராட்டமாகவே இருக்கிறது என்பதை நம்மால் உணர முடிகிறது.

- ஜோதி நரசிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com