ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு யாருடைய உதவியாவது நமக்கு தேவை. அதாவது வாகன உதவிகள் என்று சொல்லலாம். எல்லோருமே சொந்தமாக வாகனங்கள் வைத்துக் கொண்டிருப்பவர்கள் இல்லை. அப்படி வாகனங்கள் இல்லாதவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் வாடகைக்கு வாகனங்களை எடுத்துச்செல்வது வழக்கம். குடும்பத்தோடு செல்ல வேண்டும் என்றால், ஐந்து பேர் இருந்தார்கள் என்றால் ஒரு கார் தேவைப்படும். கூட்டுக் குடும்பமாக இருந்தால் ஒரு வேன் தேவைப்படும். தனி நபராக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல கார் போன்ற அதிக வாடகை கொடுத்து செல்லமுடியாத சூழ்நிலை எல்லோருக்கும் இருக்கும்.
அது போன்று ஒருவர் மட்டுமே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று சொன்னால் இருசக்கர வாகனங்கள் பொருத்தமானதாக இருக்கும். ஆனால் அதை எல்லாம் யார் வாடகைக்கு விடுவார்கள். ஆமாம், இப்படி ஒரு கேள்வி எல்லோரிடத்திலும் இருந்து வந்தது. இப்போது அதை முறியடிக்கும் விதமாக சென்னை போன்ற பெரு நகரங்களில் இருசக்கர வாகனங்கள் வாடகை ஆட்டோ போல செயல்படுத்த தொடங்கி விட்டனர். எல்லா இருசக்கர வாகனங்களும் ஒரே நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருப்பதில்லை. அந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் யாராவது ஒருவர், இருவர் என இருசக்கர வாகனங்களை வைத்துக்கொண்டு இந்த வாடகை வாகனங்களை இயக்கி வருகின்றனர். வாகனங்களை ஓட்டிக்கொண்டு போகப் போகத்தான் அவர்களுக்கு வருமானமும் அந்த வருமானத்தை நம்பித்தான் அவருடைய குடும்பமும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு எளிய மனிதரை தான் இன்று நாம் சந்திக்கிறோம்.
’’என் பேரு நாராயணன். எனக்கு சொந்த ஊரு ஆம்பூர் பக்கம். படித்ததெல்லாம் மதுரையில. 12ஆம் வகுப்பு வரைக்கும் படிச்சிட்டு, திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் படிச்சேன். இப்போ எனக்கு வயசு 40 ஆகுது. திருமணம் ஆயிடுச்சு. அப்பா சென்னையில ஒரு நிறுவனத்தில் செக்யூரிட்டியா வேலை செய்தார். நானும் எவ்வளவோ கம்பெனிகளுக்கு சென்னையில வேலை தேடி ஏறி இறங்கிட்டேன். எங்கேயும் எனக்கு தகுந்த மாதிரி வேலை கிடைக்கல. அப்புறம் ஒரு எல்ஐசி முகவர்கிட்ட வேலைக்கு சேர்ந்தேன். மாசம் 9000 சம்பளம். அந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாது இல்லைங்களா... அதனால சின்ன சின்னதா யாராவது கொடுக்கிற வேலைகளை செய்துகிட்டு அதில் வர வருமானத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்திக்கிட்டு வரேன். அப்படி இருந்தும் கூடுதலா பணம் தேவைப்படுது குடும்பம் நடத்த.
அந்த நேரத்துல நண்பர்களும் என்னுடைய தம்பியும் இப்படி சில கம்பெனிகள் சென்னையில இயங்குது. அதுல நம்மகிட்ட இருக்கிற வண்டியை நம்ப டிரைவிங் லைசன்ஸ் பதிவு பண்ணிட்டா அவங்க நமக்கு ஆட்களை கொண்டுபோய் விடுகிற வேலை கொடுப்பாங்க. அப்படி வண்டில ஆட்களை கொண்டு போய்விட்டா காசு கிடைக்கும் அப்படின்னு சொன்னாங்க. அப்படித்தான் ஒரு மூணு நிறுவனத்தில் என்னுடைய ஆர்சி புக், டிரைவிங் லைசென்ஸ பதிவு பண்ணேன். ஒரு கிலோமீட்டரில் இருந்து 50 கிலோமீட்டர் வரைக்கும் கூட சில நேரத்துல ஆட்களை கொண்டுபோய் விடுகிற வேலை வரும். ஆட்களை கொண்டு போய் விடும்போது 15 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரைக்கும் கூட நமக்கு கிடைக்கும்.
இதுல அந்த கம்பெனிகளுக்கு 10% கமிஷனா போயிடும். ஏன்னா நமக்கு ஆட்கள அனுப்புறது அந்த கம்பெனியில்தான். ஆயிரம் ரூபாய் ஒரு நாளைக்கு சம்பாதித்தேன்னா 500 ரூபாய்க்கு பெட்ரோல், கம்பெனிக்கு கொடுக்கிற காசு எல்லாம் போச்சுன்னா 500 ரூபாய் கிடைக்கும். அதுலயும் காலையிலேயும் மத்தியானமும் வெளியில தான் சாப்பிடணும். அதுக்கு ஒரு நூறு ரூபா போச்சுன்னா ஒரு நாளைக்கு 400 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். லீவுநாள்ல அதுகூட கிடைக்காது. சனி, ஞாயிறு என்றால் 100, 200 கிடைக்கிறதே பெருசா இருக்கும். சென்னை பற்றி சொல்லவே வேணாம். போக்குவரத்து நெரிசில் அதிகம் உள்ள நகரங்கள் இதுவும் ஒன்று. இதனால அவங்க கொடுக்கிற காசுல கூடுதலா பெட்ரோல்தான் செலவாகும். இருந்தாலும் இந்த வேலையில பழகிட்டதால அதபத்தி எல்லாம் நினைக்கிறது கிடையாது.
எப்பயாவது யாரையாவது கூட்டிட்டு போகும்போது அவங்க டீ சாப்பிடாங்கன்னா நமக்கும் ஒரு டீ வாங்கி கொடுப்பாங்க. எனக்கு வேற எந்த பழக்கமும் கிடையாதுங்க. ஹெல்மெட் போட்டுக்கிட்டு பாதுகாப்பாத்தான் வண்டி ஓட்டுவேன். ஏனா குடும்பம்னு ஒன்னு இருக்குல்ல. அதையும் மனசுல வச்சுக்கிட்டுத்தான் வண்டி ஓட்டுவேன். மிதமான வேகத்தில் தாங்க போவேன். பெரும்பாலும் வண்டியில் உட்கார்ந்துட்டு வருகிறவர்கள் ஏதாவது ஒரு அவசர வேலைய வச்சுக்கிட்டு தான் வருவாங்க. குறிப்பா ஆஸ்பத்திரி வேலைதாங்க அதிகமா இருக்கும். காலைல 6 மணிக்கு தொடங்கினா ராத்திரி பத்து மணி வரைக்கும் கூட வேலை செய்வேன். சில நேரத்துல காலையிலேயே ஒரு ஆயிரம் ரூபா வரைக்கும் சம்பாதித்து விட்டன்னா வீட்டுக்கு போயிடுவேன்.
சில நாலு 500 ரூபாய் கூட கிடைக்காது. அந்த நாட்கள்ல ராத்திரி 11 மணி வரைக்கும் கூட ஆட்களை கொண்டுப்போய் விடுற வேலை செஞ்சிட்டு இருப்பேன். இதுல பணம் ஒரு முக்கியமே இல்லையே... ஏதோ அவசரமா அவங்ளை கொண்டுபோய் சேக்குறோம் அப்படிங்கற திருப்தி தாங்க. நமக்கு இப்போதைக்கு இந்த வேலைதான். எதிர்காலத்தில் இந்த வேலை கூட என்ன ஆகும்னு தெரியல. நமக்கு வேற எந்த வேலையும் தெரியல. வண்டி ஓட்ட கத்துகினது ஒரு வகைல பயனுள்ளதா இருக்குன்னு நினைக்கும்போது மனசு ஒரு மகிழ்ச்சியில சுத்துதுங்க’’ என்றார் நெகழ்ச்சியோடு.
யாருக்காவது உதவி செய்யணும் அப்படின்னு நினைச்சோம்னா இதுபோல ஒரு வேலைய கையில் எடுத்துக்கலாம். ஒரு வகையில வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு; வேலை செஞ்சோம் அப்படிங்கற திருப்திமாச்சு; மீண்டும் ஒரு எளிய மனிதரோடு சந்திக்கலாம்.
- ஜோதி நரசிம்மன்