எளியோரின் வலிமைக் கதைகள் 20: கருவாடு விற்பவர்களின் வாழ்க்கையில் வசந்தம் எப்போது?

எளியோரின் வலிமைக் கதைகள் 20: கருவாடு விற்பவர்களின் வாழ்க்கையில் வசந்தம் எப்போது?

எளியோரின் வலிமைக் கதைகள் 20: கருவாடு விற்பவர்களின் வாழ்க்கையில் வசந்தம் எப்போது?
Published on

சாதாரணமாக நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் சந்தைகள் கூடுவது வழக்கம். அப்படி கூடுகிற சந்தைகளில் தாய், தந்தையை தவிர அனைத்தும் வாங்கலாம் என்பார்கள் கிராமத்து மக்கள். இந்த வகையில் சந்தையில் கிடைக்கக்கூடிய பல்வேறுபட்ட பொருள்களில் கருவாடு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. கடலிலிருந்து பிடிக்கப்படும் மீன் தன்மையை இழந்துபோகிற நிலையில் அவற்றை கருவாடாக உற்பத்தி செய்கிறார்கள் மக்கள்.

அவற்றின் அழுகிய பாகங்களான குடல், தலை போன்றவற்றை தவிர்த்து விட்டு நன்றாக அலசி உப்புடன் சேர்த்து காயவைத்து அந்த மீனை கருவாடாக மாற்றுகிறார்கள். கிட்டத்தட்ட இது ஊறுகாய் போலதான்; பதப்படுத்தப்பட்ட ஊறுகாயாகவே கருவாடு பார்க்கப்படுகிறது. அப்படி பதப்படுத்தப்படும் கருவாடுகள் என்னதான் இப்போதெல்லாம் அதிக அளவில் ஷாப்பிங் மால்களில் விற்பனைக்கு வந்தாலும்கூட சந்தைகளில் கிடைக்கும் கருவாடு அதிகம். அப்படி சந்தையில் கருவாடு விற்கும் சாமானியர் ஒருவரை சந்தித்தோம்..

"என் பேரு திரேஷ்குமாருங்க.. எனக்கு சொந்த ஊர் செஞ்சி பக்கத்தில் இருக்கிற அவலூர்பேட்டைதான். எங்க மாமா, அத்தை, தாத்தா எல்லாருமே கருவாட்டு வியாபாரம்தான் செஞ்சுகிட்டு இருந்தாங்க. நான் இப்ப ஒரு அஞ்சு வருஷம்தான் தனியா கருவாடு வியாபாரம் செய்கிறேன். கருவாட்டு வியாபாரம்னா சொந்தமாக கடை வச்சிருக்கிறது இல்லேங்க. சந்தை எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் போய் கடைபோடணும்.

தினமும் ஒரே ஊர்ல சந்தை நடக்காதுங்க. வெள்ளிக்கிழமை செஞ்சி சந்தை, புதன்கிழமை அவலூர்பேட்டை சந்தை, ஞாயிற்றுக்கிழமை வளத்தில் சந்தை அப்படிwwன்னு வாரம் ஏழு நாளும் சந்தை இருந்துட்டே இருக்கும். அங்க ஒவ்வொரு சந்தையாபோய் டாட்டா ஏசி வண்டியில கருவாடு வைக்கிறதுதான் எனக்கு வேலை. வாழ கருவாடு, நெத்திலி கருவாடு, பால்சுறா, மொதகண்ட, கிழிச்ச, சுறா, வேட்டை, விலாங்கு அப்படின்னு நிறைய வகை கருவாடு இருக்குங்க.

சாதாரணமாகவே கருவாடு விற்கணும்னா 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை முதல் போடணும். அப்படி முதல் போட்டா அந்த கருவாடு விக்கிறதுக்கு ஒரு வாரம் ஆகிவிடும். 50,000 முதல் போட்டா ஒரு வாரத்துல ஒரு 15 ஆயிரம் வரைக்கும் கிடைக்கும். இவ்வளவு கருவாடுகளையும் ஒரே ஆள் வித்திட முடியாது. கூலிக்கு 2 பேர் வைக்கணும். அவங்களுக்கு ஒரு நாளைக்கு 700 ரூபா கூலி கொடுக்கணும். மற்ற வேலைகளுக்கெல்லாம் 500 ரூபாய் கொடுத்தாலே போதும். ஆனால் கருவாட்டு வாசனை எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்ல முடியாது இல்லையா? . அதனால 200 ரூபாய் கூலி அதிகமாக கொடுத்தால்தான் வேலைக்கு வருவாங்க. இந்த வருமானத்தை வைத்துதான் என் குடும்பத்தை ஓட்டிட்டு இருக்கேன். எனக்கு ரெண்டு குழந்தைங்க.

பங்குனி, சித்திரை மாதங்களில் கருவாடு அதிகமாக விற்பனையாகும் . மழைக்காலம் இருந்துச்சுன்னா வியாபாரமே இருக்காதுங்க .50 ரூபாயில் தொடங்கி 200 ரூபாய் வரைக்கும் கருவாடு விற்கும். மொத்தமா வாங்கிட்டு வர்ற கருவாடு ஒரு வாரத்துக்கு மேல் ஆச்சுன்னா எடை குறைய ஆரம்பிச்சிடும். அந்த நஷ்டத்தையும் நாம தான் ஏத்துக்கணும்.

சாதாரணமா கருவாடு வாங்க வர்றவங்க அரை கிலோ, ஒரு கிலோ வாங்குவாங்க. அதுல அவங்க பேசுற பேரம் தாங்க ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம் அப்படி நினைக்கத் தோணும். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்ற கருவாடு இன்னைக்கு 200 ரூபாயிலிருந்து 450 ரூபாய் வரைக்கும் விக்குது. தினமும் காலையில அஞ்சு மணிக்கு வியாபாரத்துக்கு வந்தா ராத்திரி ஏழு மணி ஆயிடும் வியாபாரம் முடியறதுக்கு. இது தவிர வேறு எந்தத் தொழிலும் எனக்கு தெரியாது. என்னைபோலவே ஒவ்வொரு சந்தைகளிலும் குறைந்தது 10 பேராவது வியாபாரம் பண்ணுவாங்க. எல்லார் குடும்பமும் இப்படிதாங்க இருக்கும்.

‘கருவாடு மீனாகாது என்பார்கள்’ இப்படி இவர்கள் வாழ்க்கை மேலும் சிறக்க வேறு வழி இருக்கிறதா என்று தினந்தோறும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அன்றாட வாழ்வில் அசைவம் சாப்பிடுகிற நாம் பயன்படுத்துகிற உணவுப் பொருட்களில் கருவாடும் ஒன்றாக இருந்தாலும் அந்த வியாபாரம்,செய்கிறவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. கருவாடு கெட்டுப்போகாமல் இருக்க பதப்படுத்துகிறார்கள். ஆனால் கருவாட்டு வியாபாரிகள் வாழ்க்கை சிறக்க அவர்களை யாரும் கவனிப்பது கூட கிடையாது என்பதே நிதர்சனம். தொடர்ந்து பயணிப்போம்.

-ஜோதி நரசிம்மன்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com