எளியோரின் வலிமைக் கதைகள் 3 - "உப்பளத்துல உழைக்கிறவங்களுக்கு பெருசா ஒண்ணும் கிடைப்பதில்லை!"
"உப்பிட்டவரை உள்ளளவும் நினை"... "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்றெல்லாம் சொல்வார்கள். உப்பு என்பது உணவுக்கு மிகத் தேவையான ஒன்று. அப்படிப்பட்ட உப்பு எப்படி உற்பத்தி ஆகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. கடல் நீரில்தான் உப்பு உற்பத்தி ஆகிறது என்றே சிலருக்குத் தெரியாததும் ஆச்சரியமில்லை. தமிழ்நாடு மாநிலத்தின் ஒரு பகுதி கடலால் சூழப்பட்டு இருந்தாலும், எல்லா இடங்களிலும் உப்பு உற்பத்தி செய்ய முடியாது. கடல் தண்ணீர் மட்டும் போதாது, உப்பு உற்பத்திக்கு. அதற்கான நிலமும் தேவை. அப்படியான நிலங்கள் தமிழ்நாட்டிலே தூத்துக்குடி, மரக்காணம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளில் உள்ளன. உப்பு விளையும் களம்... உப்பு + அளம் = 'உப்பளம்' என்று அழைக்கப்படுகிறது. இப்படியான ஓர் உப்பளத்தை நோக்கி புறப்பட்டேன்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் நெய்தல் நிலம் கடலும் கடல் சார்ந்த இடம். சென்னை - புதுச்சேரி சாலையை 'ஈசிஆர் சாலை' எனச் சொல்வார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தண்ணீர் நடுவில் தார்ச்சாலை; அடுத்தப் பக்கம் கடல்; இந்தப் பக்கம் ஆங்காங்கே வைரக்கல் கொட்டி வைத்ததுபோல உப்புக் குவியல். இடைவெளிவிட்டு இடைவெளிவிட்டு மனித தலைகள். அருகில் நெருங்கினேன். கட்டம் கட்டமா தடுத்து வைக்கப்பட்ட தண்ணீர் எதிரே வந்தவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர் பெயர் ராஜ சர்வேஷ் குமார். சுமார் 45 வயதுக்கு மேல் இருக்கும். தண்ணீரில் காலை கழுவிக் கொண்டிருந்தார். "இந்த உப்பு உற்பத்தி வருஷத்துல எவ்வளவு நாள் நடக்கும்?" என்றேன்.
"தமிழ்நாட்டுல உப்பு உற்பத்திக்கு பேர்போன ஊரு தூத்துக்குடி, அடுத்து மரக்காணம். இங்க உற்பத்தி செய்கிற உப்புதாங்க உணவுக்கு பயன்படும். மரக்காணத்தில உற்பத்தி செய்கிற உப்பு தென்னிந்தியா முழுக்க போகும். ஆந்திரா, கேரளா, கர்நாடகான்னு நம்ம ஊரு உப்புதாங்க.
மரக்காணம் பகுதியில் சுமார் 10,000 ஏக்கர் நிலப்பரப்பில் 3,500 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடக்குதுங்க. வருஷத்துக்கு ஆறு மாசம்தான் உற்பத்தி செய்யமுடியும். அதுலயும் அந்த வருஷம் மழை கூடுதலா ஒரு மாசம் பெய்தா உப்பு உற்பத்தி குறையும். வெயில் தாங்க உப்பு உற்பத்திக்கு முக்கியம். ஒவ்வொரு வருஷமும் ஜனவரி மாதம்தான் தண்ணீர் வடியும். "தை பிறந்தால் வழிபிறக்கும்" அப்படின்னு சொல்றாங்க இல்ல, அது இதற்கும் பொருந்தும்.
உப்பு உற்பத்தி நடக்காமலும் மழை நீர் தேங்கி இருக்கறதுனால பாத்திகளில் சேருகள் அதிகமா சேர்ந்திருக்கும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பாத்திகளில் இருக்கிற சேருகளை அகற்றுவோம். தண்ணீரை சேமித்து வைக்கிற இடத்துக்கு தாங்க 'பாத்தி'ன்னு பேரு. இந்த பாத்திகள் தோராயமா 15 அடிக்கு 15 அடி அளவில் இருக்கும். ஜனவரி மாதத்திற்கு முன்பே தொடர்ந்து மழை பெய்து இருப்பதால பாத்திகளில் மழைநீர் தேங்கி இருக்கும்; அதோட சேரும் இருக்கும். இரண்டையும் அப்புறப்படுத்தணும்.
அடுத்து 'தொட்டம்'. இந்த பகுதிதான் கடல்நீரை தேக்கி வைக்கிற பகுதி. இங்கே இருந்து வரும் 'கிடங்கல்' பகுதி. கிடங்கல் என்றால் உப்பு தண்ணீரை பாத்திகளுக்கு கொண்டுவர வாய்க்கால். இவற்றை சுத்தப்படுத்தி அதுல இருக்கிற சேருகளை அகற்றி கடற்கரை மணல் கலந்து நல்லா காலால் மிதித்து தரை போல சரி செய்யணும். ஒரு பாத்திக்கு ஒன்பது நாளுக்கு ஆறு பேர் மிதிப்பார்கள். இந்த பாத்திகளை இப்படி லெவல் பண்ணாதான் தண்ணீரைத் தேக்கி உப்பு தயாரிக்க முடியும்.
அப்புறம் பாத்திகளில் இருக்குற வரப்புகளை மொழுகி தயாராக்கணும். இந்த நேரத்துலதான் வெயில் தொடங்கும். கிடங்கள் வழியாக தண்ணீர் பாத்திகளுக்கு கொண்டு வரணும். முதல்ல கடல்நீரை கொண்டு வரமாட்டோம். ஏன்னா, மழை நீர் கலந்து இருக்கும். உப்புத்தன்மை அதுல குறைவா இருக்கும். அதனால நிலத்தடியில் 10 அடிக்கு போர் போட்டு தண்ணீரை கொண்டுவருவோம். அந்த தண்ணீரில்தான் உப்புத்தன்மை அதிகமா இருக்கும். அப்படி வருகிற தண்ணீரை பாத்திகளில் தேங்க வைக்கணும்.
அப்படித் தேங்குகிற தண்ணீர் சூரிய வெப்பத்துல கொஞ்சம் கொஞ்சமா உப்பாக மாறும். உப்பு படிவங்கள் பால் ஏடை போல மிதக்கும். அப்படி மிதக்கும் படிமங்களை வார் பலகை கொண்டு வரப்பு ஓரத்துல சேர்த்து வைப்பாங்க. இப்படி சேர்த்து வைக்கிற உப்பு 5 நாளைக்கு ஒருமுறை சேகரித்து தரையில் கொட்டி வைப்பாங்க. அப்படி தரையில் கொட்டி வைக்கிற இடத்துக்கு பேரு 'அம்பாரம்'. அஞ்சு நாளைக்கு ஒரு பாத்தியில 60 கிலோ உப்பு சேறும். இப்படி சேமிச்சிதாங்க மொத்த வியாபாரிகளுக்கு விற்று கடைகள் மூலம் மக்களுக்கு கிடைக்கும்" என்று உப்பு உற்பத்தி முறையை விளக்கினார்.
"இப்படி உற்பத்தி செய்கிற உப்பு என்ன விலைக்கு விற்கிறார்கள்?" என்றதும், "அதெல்லாம் கேட்காதீங்க. நல்ல விலைக்கு விற்பனை செய்தால் நாங்க ஏன் இன்னும் இப்படியே இருக்கோம். கிலோ 80 பைசாவிலிருந்து மூன்று ரூபாய்க்கு தாங்க விக்கும். எப்பயாவது மழை சீசனை தாண்டி அதிகமா மழை இருந்தா மூன்று ரூபாய்க்கு மேல விக்கும். ஆனால், கடையில 25 ரூபாயில் தொடங்கி 40 ரூபாய் வரைக்கும் வெவ்வேறு பெயரில் விக்கிறாங்க.
உப்பளத்துல உழைக்கிறவங்களுக்கு பெருசா ஒண்ணும் கிடைக்கிறதில்லை. அதுவும் கோடை காலத்தில மழை வந்துட்டா அவ்வளவுதான். உப்பு கரைந்து போய்டும். அந்த வருஷம் குடும்பம் அவ்வளவுதான். இதையெல்லாம் சரி செய்யணும் கவர்மென்ட். அதுக்கு கூட்டுறவு சங்கம் அமைச்சு விலைய ஒழுங்குபடுத்தணும். நாங்களும் எவ்வளவோ நாளா சொல்லிக்கிட்டுதான் இருக்கிறோம், யாருங்க கேட்கிறாங்க?!" என்று வருத்தப்பட்டுக் கொண்டார் சர்வேஷ்.
அடுத்து என்னிடம் பேசியவர் சின்னக்குட்டி. இவர் கூலி தொழிலாளி. "வருஷத்துல ஆறு மாசம் தாங்க வேலை இருக்கும். இங்க மட்டும் 1,200 குடும்பங்கள் இந்த உப்பளத்தில கூலி வேலை செய்யறவங்க இருக்கோம். வெயில் காயிற 6 மாசம்தான் வேலை. மீதமிருக்கிற ஆறு மாசம் வீட்டில்தான் இருக்கணும். இதுல நேரடி தொழிலாளி, மறைமுக தொழிலாளின்னு இரண்டு வகையா இருக்காங்க.
உப்பு உற்பத்தி செய்றவங்க நேரடி தொழிலாளி. மூட்டை தூக்கறது, பாக்கெட் பண்றது, இதுபோல வேலை செய்யறவங்க மறைமுக தொழிலாளி-ன்னு சொல்லுவாங்க. பெரும்பாலும் உப்பளத்தில் வேலை செய்ற ஆம்பளைக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாயும், பெண்களுக்கு 250 ரூபாயும் கூலி தருவாங்க. இத வெச்சிகிட்டு என்ன செய்ய முடியும்?
எங்க புள்ளைங்க எல்லாம் பெருசா ஒண்ணும் படிக்கலை. படிக்கவைக்க முடியல. இதுல வேலை செய்து, வேலை செய்து கால் பாதம் எல்லாம் தேஞ்சி போய்டும். அதைவிட கொடுமை, உப்பு பார்த்து பார்த்து கண் பார்வை கோளாறு ஆகிடும். ஆமாங்க உப்பு உற்பத்தி ஆகி தரைக்குக் கொண்டு வந்தா வைரக்கல்லு போல மிணுக்கும். இதுக்கெல்லாம் அரசாங்க ஏதாவது மருத்துவ உதவி செய்யணும்னு ரொம்ப நாளா கேட்கிறோம், கிடைக்கல.
இதுவாச்சும் பரவாயில்லீங்க. உடம்புல, கால்ல எங்கேயாச்சும் காயம் பட்டுச்சின்னா அவ்வளவுதான், அந்த வருஷம் முழுக்க வேலைக்கே போக முடியாது. ஆறு மாசம் சும்மா இருக்குற காலத்திலேயே மீதம் இருக்கிற காலத்துல குடும்பம் நடத்துவது கஷ்டம். அதுல ஒரு வருஷம் வேலை செய்யலன்னா, எப்படி இருக்கும் பாருங்க.
இதுபோல காலத்துல அரசாங்கம் ஏதாவது உதவி செஞ்சா நல்லா இருக்கும். நாங்க எங்களுக்காக கேட்கலீங்க, உங்களுக்கும் சேர்த்து தான் கேட்கிறோம். நாங்க வேலை செய்யலைன்னா உங்களுக்கு எப்படி உப்பு கிடைக்கும்? அதுமட்டுமில்ல, வெள்ளைக்காரன் காலத்தில் இருந்து அரசாங்கம் 'பேக்டரி ஆபீஸர்'-ன்னு ஒருத்தர நியமிப்பாங்க. அவங்கதான் எங்களுக்கு வேலை செய்யும்போது குடிக்க தண்ணீர் ஏற்பாடு பண்ணி கொடுக்கணும். ஏன்னா முழுக்க முழுக்க உப்புத்தண்ணியிலதான எங்களுக்கு வேலை. அதை குடிக்க முடியாது இல்லையா?
இப்போ ஒரு நாலு வருஷமா அந்த ஆபீஸரையே காணோம். அவருக்கு இது மட்டும் வேலை இல்லைங்க, உப்போட தரத்தை நிர்ணயிக்கவும், எவ்வளவு உப்பு உற்பத்தி ஆகுதுன்னு அரசாங்கத்துக்கு கணக்கு காட்டணும். கணக்கு எங்க காட்றாங்க... இப்ப எல்லாம் போலி கணக்குதாங்க காட்டுறாங்க. வருஷத்துக்கு 3 லட்சம் டன் உப்பு உற்பத்தி பண்றோம். அரசாங்கத்துக்கு எவ்வளவு கணக்குப் போவுதுன்னு தெரியல. எங்களுக்கான தேவைகளை அரசாங்கம் செய்து கொடுத்தால், நாங்க இன்னும் கூடுதலாக உழைக்க தயாராக இருக்கிறோம்" என்றார்.
- ஜோதி நரசிம்மன்