சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தொகுதிகளை இறுதி செய்து பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இதில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. காரணம், காங்கிரஸில் இருந்து புதிதாக பாஜகவுக்கு தாவிய நடிகை குஷ்பு அந்த தொகுதியில் தீயாய் சுழன்று சுழன்று வேலைப்பார்த்து வந்தார்.
தாமரை நிச்சயம் தமிழகத்தில் மலரும் என வீடு வீடாய் சென்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வேலைப்பார்த்து வந்தார். எதிர்க்கட்சிகளை விமர்சித்து கடுமையாக பேட்டி அளித்து வந்தார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்னர் தொகுதியில் குஷ்பு, பணிமனை ஒன்றைச் சொந்த செலவில் உருவாக்கி அங்கு தினந்தோறும் நிர்வாகிகளை சந்தித்து வந்தார். சமீபத்தில் ஸ்கூட்டர் பேரணிகூட சென்றார். திமுக சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி களமிறக்கப்படுவார் என பேசப்பட்ட நிலையில் அவரை எதிர்த்து குஷ்புவே அந்த தொகுதியில் களமிறக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இதேபோல் நடிகை கவுதமி நீண்ட நாட்களாக பாஜகவில் உள்ளார். அவர் ராஜபாளையம் தொகுதியில் தீவிரமாக வேலைப்பார்த்து வந்தார். அதனால் அங்கு கவுதமிதான் களமிறக்கப்படுவார் என பேசப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாய் ஆகிவிட்டது. ஆம்.. அதிமுக பாஜகவுக்கு ஒதுக்கிய தொகுதிகள் பட்டியலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியும் ராஜபாளையம் தொகுதியும் இடம்பெறவில்லை. ராஜபாளையம் தொகுதியை அதிமுகவும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியை பாமகவும் கைப்பற்றியுள்ளன. ராஜபாளையம் தொகுதியில் அதிமுக, அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை வேட்பாளராக களமிறக்கியுள்ளது.
இதுமட்டுமில்லாமல் பாஜகவுக்கு சென்னையில் இரண்டே தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது ஆயிரம் விளக்கு தொகுதியும், துறைமுகம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுபோக, திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, திருக்கோயிலூர், திட்டக்குடி தனி தொகுதி, கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், நெல்லை, தளி, காரைக்குடி, தாராபுரம் தனித்தொகுதி, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுகவில் இருந்து கு.க.செல்வம் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். அதனால் அவருக்கே மீண்டும் அங்கு போட்டியிடும் வாய்ப்பு பாஜக சார்பில் கிடைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. துறைமுகம் தொகுதி ஒரு காலத்தில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் கோட்டையாக இருந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் திமுகவின் பி.கே.சேகர் பாபு வெற்றிபெற்றார். அந்த தொகுதி பாஜகவில் யாருக்கு ஒதுக்கப்படும் என்பது இதுவரை தெரியவரவில்லை.
இந்நிலையில் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் “உண்மையான தொண்டன் எதையும் எதிர்பார்க்காதவன். ஒரு உண்மையான தொண்டனாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கு நான் தரை மட்டத்தில் கடுமையாக உழைத்து வருகிறேன். அந்தத் தொகுதி மக்கள் என் மீது பொழிந்த அன்பு, பாசம் மற்றும் மரியாதை உண்மையானது தூய்மையானது.
நான் எப்போதுமே அவர்களுக்கு கடன்பட்டிருப்பேன். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் மகிழ்ச்சியைச் சேர்ப்பதற்கும் எனது கடமையை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன். நான் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளராக இருந்தேன். நான் ஒருபோதும் வேட்பாளர் என்று சொல்லவில்லை.
எனது பயணத்தில் என்னுடன் நின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு என்னை நம்பினர். கடந்த 3 மாதங்கள் அழகாக இருந்தன. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி உடனான எனது உறவு ஒரு சிறந்த மனிதராக மாற பாடம் கற்க உதவியது. தரைமட்டத்தில் வேலை செய்ய வாய்ப்பு தந்தமைக்கு பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா, அமித்ஷா, எல்.முருகன், சி.டி.ரவி, கிஷன் ரெட்டி ஆகியோருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே “அதிமுக கூட்டணியில் கேட்ட தொகுதிகள் கிடைத்துள்ளது. கூட்டணி என்றால் சில விட்டுக்கொடுத்தல் இருக்கும். உரிய நபர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்படும்” என பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியிருந்தார். இதனால் பாஜக சார்பில் நடிகைகள் குஷ்புவும், கவுதமியும் வேறு தொகுதிகளில் களமிறக்கப்படுவார்களா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.