குன்றத்தூர் அபிராமியின் ‘மியூசிக்கலி’ என்ன சொல்கிறது? : ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்
தற்போதைக்கு சமூக வலைத்தளத்தில் வைரல் கண்டெண்ட் அபிராமிதான். இந்தப் பெயரை சொன்ன உடனேயே அவரது முழு விவரத்தையும் புரிந்து கொள்ளும் அளவுக்கு மக்கள் கூர்மையாக இருக்கிறார்கள். இன்று ஊரையே தனக்கு எதிரியாக சம்பாதித்து வைத்திருக்கும் அபிராமி அதிமாக விரும்பியது இந்தச் சமூக வலைத்தளங்களைதான். அதற்கு அவர் ஆக்டிவ் ஆக செயல்பட்ட ‘மியூசிக்கலி’யே சரியான சான்று. இவர் மன ஆறுதல்களுக்காக வெளியிட்ட வீடியோக்கள் இன்று அவருக்கு எதிரான விசயமாக திரும்பி இருக்கிறது. அதை அவர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். தனது பிள்ளைகளையே அவர் கொலை செய்துவிட்டார் என்ற செய்தி வேகமாக பரவ ஆரம்பித்தபின் அவரது ‘மியூசிக்கலி’ வீடியோக்களை எடுத்துபோட்டு பலரும் அவரை ‘மியூசிக்கலி’ தளத்தில் வசை பாடி வருகிறார்கள். இதில் பலர் வரம்பு மீறிபோய் விமர்சிக்கும் காட்சிகளும் அடிக்கடி இந்தத் தளத்தில் உலா வருகின்றன.
சென்னை குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளையைச் சேர்ந்தவர் விஜய். இவரது மனைவிதான் அபிராமி என்று பழைய செய்திகளை நாம் சொல்லத் தேவையில்லை. அதையும் மீறி அவரது நடவடிக்கை தமிழக மக்களிடம் அவரை கொண்டு போய் சேர்த்திருக்கிறது. அதே பகுதியை சேர்ந்த சுந்தரத்திற்கும் இவருக்கும் உண்டான தொடர்பு தனது இரு குழந்தைகளை கொலை செய்யும் அளவுக்கு அவரை தூண்டி உள்ளது என காவல்துறை தெரிவிக்கிறது. அவரது கொலையை யாரும் நியாயப்படுத்த முடியாது. அவரது வீட்டு பக்கம் குடியிருக்கும் அக்கம்பக்கத்தினர் இந்தக் கொலையை கேள்விப்பட்டது முதல் கொதித்துப் போய் இருக்கிறார்கள். அவருக்கு தக்க தண்டனை தர வேண்டும் என கருத்து தெரிவிக்கிறார்கள். பல விசயங்களில் மெளனத்தை கடைப்பிடிக்கும் ரஜினிகாந்த் கூட அபிராமியின் கணவர் விஜய்யை அழைத்து ஆறுதல் கூறியிருக்கிறார். ரஜினியின் வீட்டுக்கதவே திறந்துள்ளது என்றால் இந்தச் சம்பவத்திற்கு பின் ஒளிந்திருக்கும் கொடூரத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இதுபோன்ற குற்றங்களுக்கு பலரும் குறை சொல்வது சமூக ஊடகங்களைதான். அக்கம்பக்கத்தினராக வருடக் கணக்கில் கூடவே குடியிருக்கும் அண்டை வீட்டார்களிடம் கூட ஏற்படாத ஒரு நெருக்கம் இந்தச் சமூக வலைத்தளங்களின் மூலம் எளிதில் கிடைக்கும் அறிமுகத்தில் உடனே உருவாகிவிடுகிறது என்பது உண்மை. நம் அருகாமையில் இருப்பவரை ஆயிரம் தடவைக்கு மேல் பரிசோதிக்க துடிக்கும் நம் மனம் எங்கோ ஒரு மூலையில் இருந்து சமூக வலைத்தளத்தின் மூலம் நம்மை தொடர்பு கொள்ளும் போது உடனே சிநேகத்தில் சிக்கிக் கொள்கிறது. அவர்களை ஆயிரம் முறை சந்தித்ததற்கு ஈடாக மனம் தானே உருவகித்துக் கொள்கிறது. சின்னச் சின்ன சேட்டைகள் வழியே நாம் அவர்களின் செய்கைக்குள் சிக்குண்டு விடுகிறோம். அந்தளவுக்கு இந்தத் தளங்கள் ரகசியமாக நம்மை வசியம் செய்துவிடுகின்றன. ஆகவேதான் மனநல மருத்துவம் சார்ந்தவர்கள் இந்தச் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கிறார்கள். ஆனால் இதை எல்லாம் மக்கள் எடுத்து கொள்கிறார்களா என்ன?
இப்போது அபிராமி, தன் இரண்டு குழந்தைகளோடு செய்த மியூசிக்கலி வீடியோ வைரலாக பலரால் விமர்சிக்கப்படுகிறது. அவர் தன் குழந்தைகளை வைத்துக் கொண்டு ‘என்ன பேசலாம்? என்ன பேசலாம்?’ என யோசிக்கும் போது அவரது மகன் அப்பாவியாக தெரிகிறார். மகள் ஓரமாக உட்கார்ந்து கொண்டு வீட்டுப் பாடம் படிக்கிறார். அந்தப் பிள்ளைகள் இன்று உயிரோடு இல்லை. இந்தச் சோகம் சொந்தங்களை தாண்டி பொது சமூகத்தை வாட்டி வைக்கிறது. ஆகவே இந்த வீடியோவை எடுத்து போட்டு அபிராமியை விமர்சிக்கிறார்கள் பலர். அதே போல ஒரு வீடியோ. அபிராமியுடன் தவறான உறவை மேற்கொண்டதாக கூறப்படும் சுந்தரமும் இவரும் இணைந்து செய்ததாக ஒரு மியூசிக்கலி வீடியோ தீப்பொறியை போல வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ உண்மையா? இல்லை வேண்டும் என்றே சிலர் செய்த போலி வீடியோவா என எதையும் உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் அந்த வீடியோ உண்மைதான் என பலரும் நினைத்து எடுத்துப் போட்டு விமர்சிக்கிறார்கள்.
அபிராமிக்கு ‘மியூசிக்கலி’ ஆப்பில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேல் ரசிகர்கள் இருக்கிறார்கள். அபிராமியின் கொலை சம்பவம் வெளியே தெரிய ஆரம்பித்த பிறகு அவருக்கு ரசிகராக இருந்தவர்களின் எண்ணிக்கையைவிட வெறுப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக கூடியிருக்கிறது. 17.6 கே அளவுக்கு எதிர்ப்பாளர்களை சம்பாதித்திருக்கிறார் அபிராமி. அவர் இதுவரை 76 க்கும் மேலான வீடியோக்களை மியூசிக்கலியில் பதிவேற்றம் செய்திருக்கிறார். அதில் சில காமெடி வீடியோஸ். சில அன்பு ததும்பும் ரொமாண்டிக் வீடியோஸ். மேலும் ஹாரர், டெரர், சண்டை என்று பல முகங்களில் அபிராமியின் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவரது டிபியாக ‘காலா’ ரஜினியைதான் வைத்துள்ளார். அந்த ரஜினிதான் இன்று இவரை அதிகம் வெறுக்கும் மனிதராக மாறியிருக்கிறார் என்பதை அபிராமி அன்றைக்கு உணர்ந்திருக்க எந்த நியாயமும் இல்லை.
ஒரு வீடியோவில் அபிராமி பேசும் வசனம் அவரது மனநிலையை விளக்கும் விதமாக உள்ளது. “எனக்கு நான் தான் ராணி.. உலகத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச பொண்ணு யார் தெரியுமா? நான் தான். லைவ் மைசெல்ஃப்” என்கிறார். அதிகமாக தன்னை நேசிக்க தெரிந்த அபிராமிக்கு அவரது குழந்தைகளை இந்தளவுக்கு வெறுக்க முடிந்திருப்பது சோகம். அதே போல அவரது மகன் ஒரு வீடியோவில் மழலை குரல் மாறாமல் ‘அம்மா, இது யாரோ ஃப்ரீயா கொடுத்த பீன்ஸ்தானே?’ என்கிறார். அதற்கு அவனது அக்கா, ‘எப்படி கிடைச்சா உனக்கு என்ன?’ என்கிறார். மீண்டும் மகள் ‘ஓசியில கிடைச்சா உடம்புல ஒட்டுமா?’என்கிறார் பதிலுக்கு. அதற்கு ‘எது உடம்புல ஒட்டும் ஒட்டாதுனு எனக்கு தெரியும்’ என்கிறார் மகள். இந்த வீடியோவில் வரும் குரல் அம்மா அபிராமியை குறிப்பிடும் விதமாய் உள்ளது. அன்று வீடியோவில் ஓசி பீன்ஸ் என குழந்தைகள் கேட்ட கேள்விக்கு அம்மா அபிராமி பதில் தரவில்லை. ஆனால் இன்று அதே அபிராமியை மக்கள் ‘எக்ஸ்ட்ரா பிரியாணி’, ‘ஓசி பிரியாணி’ என்று வசைப்பாடி வருகிறார்கள்.
ஆயிரம் விமர்சனங்களை மக்கள் அவர் மீது வைக்கலாம். ஆனால் அபிராமிகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. ஏழு வருடங்கள் காதலித்த தன் கணவர் விஜய்யை அவர் ஏன் வெறுக்க வேண்டும். அதன் அடையாளமாக கிடைத்த இரண்டு குழந்தைகளை ஏன் அவர் கொல்ல வேண்டும்? இந்த உறவுகளை மீறி அவருக்கு ஏன் சுந்தரம் என்பவர் தேவைப்படுகிறார் எனப் பல கேள்விகளை பலரும் எழுப்பி வருகிறார்கள். அதற்கு யார் பதில் சொல்ல போகிறார்கள். வேறு யார் அபிராமிதான்.