“டிச.6-ல் ‘வேல் யாத்திரை’யை முடிப்பதில் மகிழ்ச்சியே” : பாஜகவின் நரேந்திரன் சிறப்பு பேட்டி

“டிச.6-ல் ‘வேல் யாத்திரை’யை முடிப்பதில் மகிழ்ச்சியே” : பாஜகவின் நரேந்திரன் சிறப்பு பேட்டி
“டிச.6-ல் ‘வேல் யாத்திரை’யை முடிப்பதில் மகிழ்ச்சியே” : பாஜகவின் நரேந்திரன் சிறப்பு பேட்டி
Published on

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெற்றிவேல் யாத்திரையை அறிவித்துள்ளார். வரும் நவம்பர் 6 ஆம் தேதி திருத்தணியில் ஆரம்பித்து டிசம்பர் 6 ஆம் தேதி திருச்செந்தூரில் முடியும், இந்த யாத்திரையில் கர்நாடக முதல்வர் எட்டியூரப்பா, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். ’பாஜக யாத்திரை என்றாலே, அது கலவரம் செய்யத்தான்’ என்றுக்கூறி எதிர்கட்சிகள் தடைக்கோரி வரும் நிலையில், பாஜக துணைத்தலைவரும் ’வேல் யாத்திரை’ பொறுப்பாளருமான கே.எஸ் நரேந்திரனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்.

கொரோனோ சூழலில் வேல் யாத்திரை தேவையா?

’வேல் யாத்திரை’ மூலம் கருப்பர் கூட்டம் கந்த சஷ்டிக் கவசத்தை அவமதித்தையும், திமுக அதற்கு துணைப்போனதையும் வெளிச்சம் போட்டுக் காட்டவுள்ளோம். கருப்பர் கூட்டத்தை நேரடியாக திமுக கண்டிக்கவே இல்லை. அதனால், ’இந்து மக்களுக்கு நாங்கள் இருக்கிறோம்’ என்ற நம்பிக்கையை விதைக்கவுள்ளோம். அதோடு, யாத்திரையின்போதே கொரோனா சூழலில் களப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்களை பாராட்டவும், அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும் கொடுக்கவிருக்கிறோம். கொரோனா சூழல் என்றாலும் அனைவரும் பாதுகாப்போடுதான் யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளோம்.  

ஆனால், தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டத்தான் பாஜக வேல் யாத்திரையை அறிவித்துள்ளதாக சொல்கிறார்களே?

தமிழகத்தில், இதுவரை பாஜகவின் ஐந்து யாத்திரைகளுக்கு நான்தான் பொறுப்பாளராக இருந்துள்ளேன். எந்தக் கலவரங்களும் வெடித்ததில்லை. 2000 ஆம் ஆண்டு மூத்த தலைவர் இல.கணேசன் நடத்திய யாத்திரை, 2003 ஆம் ஆண்டு சி.பி ராதாகிருஷ்ணன் நடத்திய யாத்திரை, 2006 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக கே.என் லட்சுமணன் நடத்திய யாத்திரை, 2010 ஆம் ஆண்டு முதல் பொன். ராதாகிருஷ்ணன் ‘தாமரை யாத்திரை’ மூலம் தமிழகம் முழுக்க 72 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றார். இந்த யாத்திரைகளில் எல்லாம் சின்ன அசம்பாவிதம்கூட நடக்கவில்லை. அப்போதெல்லாம் நடக்காமல், இப்போது மட்டும் கலவரம் நடக்கும் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. ’பாஜக யாத்திரை என்றாலே கலவரம்தான் வெடிக்கும்’ என்று கற்பனையில் கூறும் இவர்களுக்கு நாங்கள் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.

ஐந்து யாத்திரைகளுக்குப் பொறுப்பாளராக இருந்துள்ளீர்கள். ஆனால், எத்தனை யாத்திரை நடத்தினாலும் தமிழகத்தில் பாஜகவால் குறிப்பிட்ட இடங்களைக்கூட பிடிக்க முடியவில்லையே?

இந்தமுறை அதுபோல் ஆகாது. நிச்சயம் வேல் யாத்திரை மாற்றத்தைக் கொடுக்கும். மாற்றுக் கட்சியினர் மட்டுமல்ல, தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பாஜகவில் இணைந்துகொண்டு இருக்கிறார்கள். கட்சி மிகப்பெரிய வளர்ச்சியைடைந்து கொண்டு வருகிறது. இந்த யாத்திரை முடிந்த பின்பு அனைத்துக் கட்சிகளின் கூடாரங்களும் காலியாகிவிடும். அந்தப் பயத்தில்தான்  யாத்திரையை தடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இதுவரை யாரும் தடைக்கேட்டு நீதிமன்றம் செல்லவில்லை. பாஜக எது வந்தாலும் எதிர்கொள்ளும் என்ற மனநிலையில்தான் இந்த யாத்திரையை துவங்கியிருக்கிறோம்.

அப்படி இல்லையெனில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் வாக்குக்காகவே வேல் யாத்திரையா?

தேர்தல் நடக்கும் சமயத்தில் மட்டும் கருப்பர் கூட்டம் ஏன் கந்த சஷ்டிக் கவசத்தை பேசினார்கள்? எந்த வினைக்கும் ஒரு எதிர்வினை இருக்கும். கருப்பர் கூட்டம் அப்படி பேசவில்லை என்றால் நாங்கள் வேறு ஒரு கூட்டம் நடத்தியிருப்போம். ’முருகரை இழிவுப்படுத்திவிட்டார்களே’ என்று மக்கள் வெதும்பிக்கொண்டிருந்தார்கள். கருப்பர் கூட்டத்தையும், அவர்களுக்கு ஆதரவான அரசியல் கட்சிகளையும் எதிர்த்ததால், எங்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையை, மேலும் வலுப்படுத்தும் வகையில் வேல் யாத்திரை இருக்கும். மற்றபடி, எந்த மதத்துக்கும் எந்த ஜாதிக்கும் எதிரான யாத்திரை அல்ல இது. முழுக்க முழுக்க முருகரை போற்றும் யாத்திரை.

’வேல் யாத்திரை’க்கான பாடலில் எம்.ஜி.ஆர் மோடியாக மாறுகிறார். தமிழகத்தில் மோடியை காட்டினால் ஓட்டுக் கிடைக்காது என்பதை நீங்களே ஒத்துக்கொள்கிறீர்களா?

எம்.ஜி.ஆரை வெறும் அரசியல் கட்சித் தலைவராக நாங்கள் பார்க்கவில்லை. அவரை ஒரு தேசியத் தலைவராகவே பார்க்கிறோம். ஏழைகளுக்காக அவர் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அப்படித்தான் பிரதமர் மோடியும். எம்.ஜி.ஆரை ஒரு குடத்துக்குள்ளேயே ஏன் அடைக்கவேண்டும்? அவரை தேசியளவில் போற்றவேண்டும். அதனாலேயே, அப்பாடலில் எம்.ஜி.ஆரைச் சேர்த்தோம். எம்.ஜி.ஆர் என்ன செய்தாரோ அதைத்தான் பிரதமரும் செய்து வருகிறார்

’தமிழ் கடவுள் முருகன் என்றாலே என் முகம்தான் மக்களுக்கு நினைவுக்கு வரும்’ என்று சீமான் கூறியிருக்கிறாரே?

சீமான் பேச்சு ஆணவத்தின் உச்சக்கட்டம். ஒரு கடவுள் பற்றி நினைக்கும்போது, என் முகம்தான் நினைவுக்கு வரும் என்று சொல்வது ஆணவம் மட்டுமே. முருகன் பேர் சொன்னால் சீமான் நினைவுக்கு வரமாட்டார். வேண்டுமென்றால், ராவணன் பேரை சொன்னால் நினைவுக்கு வருவார் என்று நினைக்கிறேன். கடவுளைக் கடவுளாகத்தான் பார்க்கவேண்டும்.

டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்புத்தினம். குறிப்பாக, அன்றைய தினத்தில் வேல் யாத்திரையை ஏன் முடிக்கிறீர்களே?

வேல் யாத்திரையை நவம்பர் 6 ஆம் தேதி முருகருக்கு உகந்த நாளான சஷ்டியில்தான் ஆரம்பிக்கிறோம். அதேபோல்தான், டிசம்பர் 6 சஷ்டி நாளிலேயே முடிக்கிறோம். டிசம்பர் 6 ஆம் தேதியை தேர்ந்தெடுத்த காரணம் சஷ்டி மட்டும்தான். ஆனால், டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு நாள் என்று நீங்களாகக் கூறுவதில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். டிசம்பர் 6 அன்றுதான், இந்து மக்களின் மரியாதை அயோத்தியில் மீட்டெடுக்கப்பட்டது. அந்த தினத்தில் முடிப்பதில் எங்களுக்கு பெருமையே. எப்படி டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு மூலம் இந்துக்களின் மரியாதை காப்பாற்றப்பட்டதோ, அதேபோலத்தான், வரும் டிசம்பர் 6 திருச்செந்தூரில் அத்தனை தமிழக இந்துக்களின் தன்மானம் காக்கப்படும் நாளாக எடுத்துக்கொள்கிறோம்.

 - வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com