திருமழிசை சந்தையை கோயம்பேடுக்கு தற்போது மாற்றாவிட்டால் பின்னர் அரசே நினைத்தாலும் தங்களை காப்பாற்ற முடியாது என கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக சென்னை கோயம்பேட்டில் இயங்கி வந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் சந்தை மாதவரம் மற்றும் திருமழிசைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றம் தங்கள் வாழ்வில் பெரும் துயரத்தை ஏற்படுத்திவிட்டதாக வியாபாரிகள் கண்ணீர் வடிக்கின்றனர். சென்னை மற்றும் சென்னைக்கு சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்கள் எளிதாக செல்லக்கூடிய மையமாக சென்னை கோயம்பேடு சந்தை திகழ்ந்தது. நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் புலங்கிய இடம் இன்று வெறிச்சோடி காணப்படுகிறது. பரபரப்பாக அங்கு இயங்கிக் கொண்டிருந்த வியாபாரிகள் தற்போது திருமழிசையில் வியாபாரம் இன்றி முடங்கிக் கிடக்கின்றனர்.
இதுதொடர்பாக கோயம்பேடு வியாபாரிகள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் ராஜசேகரனிடம் பேசினோம். அவர் கூறும்போது, கோயம்பேட்டில் 1700-க்கும் மேற்பட்ட பழ வியாபாரிகள் இருக்கும் நிலையில், மாதவரத்தில் வெறும் 200 வியாபாரிகளுக்கு மட்டும் கடை ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதனால் 1500 பழ வியாபாரிகள் கடை நடத்த முடியாமல் உள்ளதாக தெரிவித்தார். இதைவிடத் துயரம் திருமழிசைக்கு சந்தை மாற்றப்பட்டது என்கிறார் அவர்.
கோயம்பேட்டில் சுமார் 2400 சதுர அடி பரப்பளவில் பரபரப்பாக இயங்கிய காய்கறிக் கடைகளுக்கு, திருமழிசையில் வெறும் 300 சதுர அடி மட்டுமே கொடுக்கப்பட்டிக்கிறதாம். இதனால் கொண்டுவரப்படும் சரக்குகளை இறக்க முடிவதில்லை என்று கூறும் வியாபாரிகள், அவற்றை வெளியே வைப்பதால் தூசி மற்றும் வெயிலில் ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்காமல் வீணாய் போவதாக புலம்புகின்றனர். இதையேதான் ராஜசேகரனும் தெரிவித்தார். அத்துடன் திருமழிசையில் சுகாதாரப் பிரச்னை இருப்பதாகவும், இதனால் தொழிலாளர்கள் நலனுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
கோயம்பேட்டில் நாள்தோறும் 10,000 தொழிலாளர்கள் உழைத்துக் கொண்டிருந்த நிலையில், திருமழிசையில் சுமார் 5,000 தொழிலாளர்களே பணிபுரிகின்றனர். ஆனால் அவர்கள் தங்குவதற்கு முறையான இடவசதி இல்லை என வியாபாரிகள் கூறுகின்றனர். நாள்தோறும் 5,000 அல்லது 6,000 டன் காய்கறிகள் சந்தைக்கு வந்தாலும், அவை கோயம்பேட்டில் வேகமாக விற்பது போல, இங்கே விற்பதில்லையாம். இதனால் ஓரிரு நாட்களிலேயே பல டன் காய்கறிகள் வீணாகின்றன. இந்நிலையில் மழை வேறு பெய்ததால், வண்டிகள் வந்து செல்ல முடியவில்லை என்றும், தேங்கியிருக்கும் சகதிக்குள் சிறிய வாகனங்கள் கூட சிக்கிக்கொள்வதாகவும் வியாபாரிகள் புலம்புகின்றனர்.
கோயம்பேட்டில் இருக்கும் கடைகள் அனைத்தும் தனி சொத்து என்பதால், அவற்றை வங்கிகளில் வைத்து கடன் பெற்றே பெரும்பாலான வியாபாரிகள் காய்கறிகளை விற்பதாகவும், தற்போது வியாபாரம் முடங்கியதால் அவர்கள் கடனில் மூழ்கும் நிலைக்கு வந்துவிட்டதாகவும் ராஜசேகரன் தெரிவித்தார். இதே நிலை தொடர்ந்தால், சுமார் 4500 வியாபாரிகளும், அவர்களின் குடும்பங்களையும் பின்னர் அரசே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்றார்.
தற்போது திருமழிசையில் ஒரு ஆட்சியர், ஒரு எஸ்.பி, 5 வட்டாட்சியர்கள், 10 காவல் ஆய்வாளர்கள் மற்றும் 3 கடைக்கு ஒரு அதிகாரி என நியமிக்கப்பட்டு பாதுகாப்புடன் வியாபாரம் நடைபெறுவதாகவும், இதேபோன்று கோயம்பேட்டில் பாதுகாப்பை ஏற்படுத்தினால் அங்கு எந்த பாதிப்பும் இன்றி வியாபாரம் செய்யலாம் எனக் கூறினார். இதை அரசு இப்போதே செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் வியாபாரிகள் நிலைமை ரொம்ப மோசமாகிவிடும் என அவர் விடுத்தார்.