கொடூர கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமாக இறப்பு ,கல்யாணம் மற்றும் மருத்துவ தேவைக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் வழங்கப்படுகிறது.
இந்த கடுமையான கட்டுப்பாட்டால் சுற்றுலா நகரமான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதியில்லை. இதனால் சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திவரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
இவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தாலும் கொரோனா பரவலை தடுப்பதற்காக அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்தி அரசுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர்.
இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானல் நகருக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. இ-பாஸுடன் வருபவர்களை கடும் சோதனைக்குப் பிறகே கொடைக்கானல் நகருக்குள் அனுமதிக்கின்றனர். இந்த கடுமையான கட்டுப்பாட்டுக்கு இடையே எந்தவித தடையுமின்றி இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு நடிகர்கள் விமல் மற்றும் சூரி வந்தனர். அவர்களுடன் வந்த பத்துக்கும் மேற்பட்டோர் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரிக்குச் சென்று மீன்பிடித்து தீமூட்டி சுட்டு சாப்பிட்டுள்ளனர்.
இந்த போட்டோ சமூக வலைதளத்தில் வைரலாகி கொடைக்கானல் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து சோறு தண்ணியில்லாமல் பட்டினியோடு வீட்டிலேயே இருக்கிறோம். ஆனால் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் வந்த நடிகர்கள் எப்படி அடர்ந்த வனப்பகுதிக்குச் சென்றார்கள், இவர்களுக்கு உதவியது யார், யாருடைய சிபாரிசில் இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. என்று கேள்விகேட்டு குளிர்ந்த கொடைக்கானலை சூடாக்கியுள்ளனர்.
நடிகர் விமலுக்கு குழந்தை பிறந்துள்ளது. இதைக் கொண்டாட நடிகர் விமல், மற்றும் சூரியுடன் திரைப்படத் துறையைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். பின்பு இவர்கள் லேக் அருகில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இரவுப்பொழுதை கழித்துள்ளனர்.
அடுத்தநாள் காலையில் பேரிஜம் ஏரிக்கு சென்றவர்கள் மீன்பிடித்து விளையாடியுள்ளனர். பின்பு இரவுப்பொழுதை அங்கே கழித்துவிட்டு அடுத்தநாள் காலையில் பேரிஜத்தில் இருந்து வெளியே வந்துள்ளனர். இதுபற்றி வனத்துறையிடம் கேட்டதற்கு பேரிஜம் பகுதிக்குச் செல்ல அனுமதிகேட்டார்கள் நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை. எங்களது உத்தரவைமீறி சூழல் காப்பாளர்கள் நடிகர்களை உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர். நடிகர் விமல் முதல்மீனை பிடித்து தூக்கியவுடன் அந்த மீனை எந்த சேதாரமும் இன்றி மீண்டும் ஏரியிலேயே விட்டுவிட்டதாகவும் பின்பு அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திவிட்டு சென்றதாக பேரிஜம் ரேஜ்சர் செல்லியுள்ளார்.
நடிகர்கள் அனுமதியில்லாமல் கொடைக்கானல் அடர்காட்டுப்பகுதிக்கு வந்துசென்றதை தொடர்ந்து பேத்துப்பாறை மகேந்திரன் என்பவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரிடம் பேசினோம். ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் யாரையும் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் நிகழும் இறப்பு நிகழ்ச்சிகளில் மட்டும் பங்குபெற இ-பாஸ் மூலமாக அனுமதி அளித்துள்ளனர்.
ஊரடங்கு உத்தரவை மீறி ஒருசில வி.ஐ.பிகள் சிபாரிசின் மூலமாக வந்துபோய்க் கொண்டு இருக்கின்றனர். கடந்த ஒருமாதத்திற்கு முன்பாக கொடைக்கானல் நகர் கொரோனா நோய்தொற்று இல்லாத நகரமாக இருந்தது. இதற்கு வருவாய்த்துறை மருத்துவத்துறை காவல்துறை ஆகியோரின் சிறப்பான செயல்பாடுகள்தான் காரணமாக இருந்தது. ஆனால் ஒருசில அரசியல்வாதிகள் தங்களுடைய சுயலாபத்துக்காக சிபாரிசுமூலம் திண்டுக்கல் வரக்கூடிய இ-பாஸ்களை வைத்துக்கொண்டு கொடைக்கானலுக்கு வந்துசெல்கின்றனர்.
இதுஇப்படி இருக்க கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி கொடைக்கானல் பிரகாசபுரத்தைச் சேர்ந்த ஏழுபேர் அனுமதியில்லாமல் பேரிஜம் வனப்பகுதிக்குள் சென்று ஏரியில் மீன்பிடித்ததாக வனத்துறையால் நாற்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு வழக்குப் பதியப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதால் அபராதம் விதித்திருக்கிறார்கள் என்று நாங்களும் ஏற்றுக்கொண்டோம்.
கடந்த 17ஆம் தேதி கொடைக்கானல் வடகவுஞ்சியைச் சேர்ந்த நாதன் என்ற பிரமுகர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவருடைய காரில் நடிகர்களை அழைத்துவந்ததால் அந்த காரை யாரும் சோதனை செய்யவில்லை. கொடைக்கானலுக்கு வந்தவர்கள் விதிமுறைகளை மீறி வனத்துறையினரின் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பேரிஜம் பகுதியில் தங்கி அங்குள்ள ஏரியில் மீன்பிடித்து விளையாடி உள்ளனர்.
அதன்பிறகு 22ஆம் தேதி சமூக வலைதளத்தில் நடிகர்களை வனத்துக்குள் அழைத்துச் சென்ற தற்காலிக வனஊழியர் வெளியிடுகிறார். அந்த படத்தைப் பார்த்து ஏற்கெனவே அபராதம் கட்டியநபர், என்னிடம் வந்து அந்த படத்தை காண்பித்தார். பிறகு நான் அதற்கான ஆராதங்களை எடுத்துக்கொண்டு காவல்நிலையம் சென்று புகார் அளித்தேன்.
விசாரணையில் உள்ளூர் பிரமுகரின் காரில் நடிகர்கள் வந்தது உறுதியானது. பின்பு மூன்று தற்காலிக ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டனர். நிரந்தர பணியாளர்கள் நான்குபேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நடிகர்கள் இருவருக்கும் தலா இரண்டாயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லியுள்ளார்கள். நான் கொடுத்த புகாருக்கு நேற்றுதான் சி.எஸ்.ஆர் காப்பியின் நகல் கொடுத்தார்கள்.
கொரோனா ஊரடங்கால் வனப்பகுதியில் குற்றச் செயல்களை அதிகரித்து வருகிறது. ஒரே தவறை செய்த உள்ளூர் மக்களிடம் அபராதமாக ஒருதொகையும் நடிகர்களிடம் ஒருதொகையும் வசூலித்தது ஏற்றுக் கொள்ளமுடியாதது. பத்துபேர் வந்ததற்கு இரண்டுபேருக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமீறல்களுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேனி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் புதல்வர்கள்தான் முழுமுதற் காரணம் என்று சொல்லப்படுகிறது என்றார் பேத்துப்பாறை மகேந்திரன்.
நடிகர்கள் எத்தனைபேர் வந்தார்கள்? எப்படி வந்தார்கள்? இ-பாஸ் எடுத்து வந்தார்களா என்று விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல வனத்துறை எந்த அடிப்படையில் நடிகர்களுக்கு அபராதம் விதித்தது என்றும் விசாரிக்கப்படுகிறது. விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் காவல்துறை டி.எஸ்.பி ஆத்மநாதன்.