"ரத்தத்தைக் கொடுங்கள், உலகத்தைத் துடிக்க வைப்போம்" - ரத்த தானம்... சில தகவல்கள்
இன்று... ஜூன் 14 - உலக ரத்தக் கொடையாளர் தினம். இந்த தினத்தில், அதன் முக்கியத்துவத்தை தெரிந்துக்கொள்வோம். 'நீரின்றி அமையாது உலகு' என்பதைப்போல ரத்தமின்றி செயல்படாது உடல். நம் உடலின் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்க ரத்தம் அவசியம்.
ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தவும், உயிர்களைக் காப்பாற்ற எங்கும் எப்போது ரத்தம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-ம் தேதி உலக சுகாதார நிறுவனத்தால் 'உலக ரத்தக் கொடையாளர் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.
"ரத்தத்தைக் கொடுங்கள், உலகத்தைத் துடிக்க வைப்போம்" (“Give blood and keep the world beating”) என்பதே 2021-ம் ஆண்டுக்கான கருத்து. மற்றவர்களின் உயிரைக் காக்க ரத்தம் கொடுக்கப்படுவதால் அது தானங்களில் மிகச் சிறந்ததாக இருக்கிறது.
ரத்த தானம் செய்வது குறித்த கேம்ப்கள் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலங்கள், முகாம்கள், கருத்தரங்குகள், கூட்டங்கள் உலகம் முழுக்க நடைபெறுகின்றன.
யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்?
- உடல் ஆரோக்கியத்தோடு இருக்கும் 18 வயது முதல் 65 வயதுள்ள அனைவரும் ரத்ததானம் செய்யலாம்.
- அதேபோல், ரத்த தானம் செய்பவர்களின் உடல் எடை சுமார் 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும்.
- ஒருமுறை 350லிருந்து 450 மில்லி லிட்டர் வரை (ஒரு யூனிட்) ரத்தத்தைக் கொடுக்கலாம். இதனால், உடலுக்கு எந்த பாதிப்பும் வராது.
- அதேபோல், ஒரு முறை ரத்ததான, செய்துவிட்டால் 3 மாதம் கழித்து மீண்டும் ரத்ததானம் செய்யலாம்.
- பொதுவாக, ஆண்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்துக்கு ஒரு முறையும் ரத்ததானம் செய்வது சிறந்தது என்று கூறப்படுகிறது.
- உடல் நலப் பிரச்னைகள், மாதவிடாய் காலத்திலுள்ள பெண்கள், மதுபோதையில் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் தாய்மார்கள் ரத்த தானம் செய்ய முடியாது.
இந்தக் கொரோனா பேரிடர் காலத்தில், உரிய நேரத்தில் தேவைப்படுவோருக்கு மனிதத்துடன் ரத்த தானம் செய்ய முன்வரவேண்டும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.