முடி உதிர்வு என்பது தினசரி நடக்கக்கூடிய சாதாரணமான ஒரு நிகழ்வுதான். ஆனால் ஒன்றிரண்டு முடிகள் உதிர்ந்தால் அதனால் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. ஒருநாளில் 50-100 மயிரிழைகள் உதிர்வது சாதாரணமானதுதான் என்றாலும், அதற்குமேல் உதிர்ந்தால் அதனை கவனத்தில் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் மிகப்பெரிய பிரச்னையாகக்கூட உருவெடுக்கலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
மரபணு பிரச்னைகள் தவிர ஊட்டச்சத்து குறைபாடு அல்லது ஹார்மோன் பிரச்னைகள் பெரும்பாலும் வேர்க்கால் துளைகளை சிறிதாக்கி, முடி மெலிதல் மற்றும் முடி உதிர்வு பிரச்னைக்கு வழிவகுப்பதாகக் கூறுகின்றனர் நிபுணர்கள். அதேபோல், எடுத்துக்கொள்ளும் உணவுகளும் குறிப்பாக அடிக்கடி எடுத்துக்கொள்ளும் சில பானங்கள் முடி உதிர்வுக்கு காரணமாவதாக எச்சரிக்கின்றனர்.
கீழ்க்கண்ட சில பானங்கள் முடி உதிர்வுக்கு காரணமாகலாம்.
காபி
காலை எழுந்தவுடன் பெரும்பாலானோர் விரும்பும் பானம் காபி அல்லது டீ தான். இவை உடனடியாக எனர்ஜியை அதிகரித்தாலும் அதன் விளைவுகள் தலைமுடியில் தெரியும். காபி மற்றும் டீயிலுள்ள கஃபைனானது உடலில் இரும்புச்சத்து அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது. காபியில் 4.6% டானின் உள்ளது. அதே சமயம் டீயில் 11.2 % டானின் உள்ளது.
ஆல்கஹால்
அதிகளவில் ஆல்கஹால் அருந்துவது உடலில் நுண் ஊட்டச்சத்துகள் சேர்வதை தடுக்கிறது. குறிப்பாக ஜிங்க், காப்பர் மற்றும் புரதம் போன்றவை உடலில் சேர்வதை தடுத்து முடி உதிர்தலை ஏற்படுத்தி, சில சமயங்களில் வழுக்கை விழவும் காரணமாகிறது.
சோடா
இன்றைய மாடர்ன் கலாசாரத்தில் கோலா மற்றும் சோடாக்கள் பெரும்பாலும் பார்ட்டிகளில் விரும்பும் பானமாக வழங்கப்படுகிறது. எப்போதாவது ஒருமுறை குடித்தாலும் இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவையே. ஏனெனில் அவற்றில் அதீத சர்க்கரை உள்ளதால் அவை உடல்நல குறைபாடுகளுக்கு வழிவகுக்கிறது.
எப்படியாயினும், பதப்படுத்தப்பட்ட பானங்கள் மற்றும் கோலாக்கள் தலைமுடிக்கு அதீத தீங்கு விளைவிக்கும். கார்பனேட்டேட் பானங்கள் ரத்தத்திலுள்ள இன்சுலின்மீது செயலாற்றுகிறது. இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிகிறது. இதனால் ரத்த ஓட்டம் குறைந்து முடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்து கிடைப்பது தடுக்கப்படுகிறது. இதனால் முடி உதிர்வு ஏற்படுகிறது.
பால்
பால் மற்றும் பால் பொருட்கள் எப்போதும் உடல் மற்றும் முடிக்கு ஆரோக்கியமான உணவாகவே கருதப்படுகிறது. ஆனால் பால் பொருட்களிலுள்ள கொழுப்பானது டெஸ்டோஸ்டிரோன் அளவை உடலில் அதிகரிக்கிறது. உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்தால் அது முடி உதிர்வுக்கு வழிவகுக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறிப்பாக ஏற்கனவே எக்சிமா, சொரியாசிஸ் மற்றும் பொடுகு போன்ற சரும பிரச்னை உள்ளவர்கள் அதிகளவு பால் பொருட்கள் எடுத்துக்கொள்வது முடி உதிர்தலை மேலும் அதிகப்படுத்தும்.
சில ஆரோக்கிய பானங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்:
கோலாக்கள் மற்றும் சோடாக்களை விரும்பி குடிப்பதைவிட ஆரோக்கியமான பானங்களை குடிப்பது முடி வேர்க்கால்களை உறுதியாக்கும்.
ஆம்லா அல்லது நெல்லிக்காய் ஜூஸ்: வைட்டமின் சி நிறைந்தது நெல்லிக்காய். இது மொத்த உடல் ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கும். மேலும் இதிலுள்ள சக்திவாய்ந்த ஆண்டி ஆக்சிடண்டுகள் செல்கள் சேதமடைவதை தடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
கேரட் ஜூஸ்: வைட்டமின் ஏ, இ, பி மற்றும் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்தது கேரட். இது முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், இளம்நரையையும் தடுக்கிறது.
கற்றாழை ஜூஸ்: சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கற்றாழையின் பங்கு அளப்பரியது. இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ நிறைந்திருக்கிறது. இது ஆரோக்கியமான செல்களின் உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும் அடர்த்தியான மற்றும் பளபளப்பான முடியை கொடுக்கிறது.
ஸ்பினாச் ஜூஸ்: ஸ்பினாச் கீரையில் இரும்புச்சத்து மற்றும் பயோடின் நிறைந்துள்ளது. இவை இரண்டுமே முடி வேர்க்கால்கள் உட்பட உடல் திசுக்களுக்கு ஆக்சிஜன் செல்வதை ஊக்குவிக்கிறது. மேலும் இதில் ஃபெர்ரிட்டின் உள்ளது. இதுவும் முடி வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான ஒன்று.