நாய்க்கடித்த 8 ஆண்டுகள் வரை உடலுக்குள் வாழும் வைரஸ் - ரேபிஸும், தடுப்பூசியும்!

நாய்க்கடித்த 8 ஆண்டுகள் வரை உடலுக்குள் வாழும் வைரஸ் - ரேபிஸும், தடுப்பூசியும்!
நாய்க்கடித்த 8 ஆண்டுகள் வரை உடலுக்குள் வாழும் வைரஸ் - ரேபிஸும், தடுப்பூசியும்!
Published on

ரேபிஸ் என்று சொல்லக்கூடிய வெறிநாய்க்கடி முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்கக்கூடிய வைரஸ் தொற்று என்றாலும், ஆண்டுதோறும் உலகளவில் ஆயிரக்கணக்கானோர் இந்த தொற்றால் உயிரிழக்கின்றனர் என்கின்றன உலக சுகாதார அறிக்கைகள். 2007ஆம் ஆண்டிலிருந்து ரேபிஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உலகளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. நாய்க்கடி மற்றும் பூனை கீறல்களை பெரும்பாலும் மக்கள் எளிதாக எடுத்துக்கொள்கின்றனர்.

ரேபிஸ் தொற்று குறித்த தவறான புரிதலும், அதன் தாக்கங்கள் குறித்த போதிய விழிப்புணர்வின்மையுமே இதற்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். வீட்டில் வளர்க்கும் நாய்கள் மற்றும் பூனைகள் மனிதனின் முகம் மற்றும் கைகளை நாக்கால் நக்கும் பழக்கமுடையது. குறிப்பாக காயங்கள் இருக்கும் இடத்தில் பிராணிகள் நாக்கால் நக்கும்போது வைரஸ்கள் நேரடியாக மனிதர்களின் ரத்தத்தில் கலக்கும் வாய்ப்புகள் அதிகம்.

செல்லப்பிராணிகள் விளையாடும்போது நகங்கள் படுவதால் கீறல்கள் ஏற்படுவது சகஜம்தான். ஏற்கெனவே நாய்க்கு தடுப்பூசி போட்டிருக்கும்போது நாமும் ஏன் தடுப்பூசி போடவேண்டும்? என்று கேள்வி கேட்கின்றனர். சிலர் காயம் தானாகவே ஆறிவிட்டது என்கின்றனர். சிலர் அந்த இடத்தை சுத்தமாக கழுவிவிட்டதாகவும், அதனால் வைரஸ் போய்விட்டதாகவும் கூறுகின்றனர். இவையெல்லாம் தேவையற்ற விவாதங்கள் என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில், வைரஸ்கள் மூளைக்குச் சென்று நரம்பு மண்டலத்தை தாக்க சிறிதுகாலம் எடுத்துக்கொள்ளும். அப்படி தாக்கப்படும்போது இறுதியில் அதன் முடிவு பெரும்பாலும் மரணமாகத்தான் இருக்கும் எனவும் எச்சரிக்கின்றனர்.

அதிர்ச்சித்தகவல்! நாய்க்கடி ஏற்பட்ட 8 வருடங்கள் கழித்தும் ரேபிஸ் வரலாம்!

இதுகுறித்த தகவல் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியானது. சென்னையில் 8 வருடங்களுக்கு முன்பு நாய்க்கடி ஏற்பட்ட 14 வயது நபருக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் அதிவேகத்தன்மை, உற்சாகமான நடத்தை மற்றும் ஹைட்ரோஃபோபியா போன்ற அறிகுறிகள் தென்பட்டன. அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தபோது அவருக்கு ரேபிஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. மருத்துவர்கள் அந்த சிறுவனுக்கு சிகிச்சையளித்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் கூடாமற்போயிற்று. சிறுவன் மரித்துப்போனான்.

ரேபிஸின் அறிகுறிகள்:

நாய்க்கடித்தபிறகு, வைரஸானது மூளைக்குச் சென்றபிறகே அறிகுறிகள் தென்படும். நாய்க்கடித்தலுக்கும், அறிகுறிகள் தென்படுதலுக்குமான இடைபட்ட காலத்தை இன்குபேஷன் காலம் என்கின்றனர். இந்த அறிகுறிகள் வாரக்கணக்கிலோ அல்லது மாதக்கணக்கிலோ இருக்கலாம். இந்த இன்குபேஷன் காலமானது

1. நாய்கடித்த இடம்(மூளைக்கும் காயத்துக்கும் இடைபட்ட தூரம்)
2.ரேபிஸ் வைரஸின் வகை
3. நோயெதிர்ப்பு தன்மை ஆகியவற்றை பொருத்து மாறுபடும்.

ஆரம்பகட்ட அறிகுறிகள்:

1. பலவீனத்துடன் கூடிய காய்ச்சல், அசௌகர்யம், தலைவலி
2. அசௌகர்யம், கடிபட்ட இடத்தில் குத்துதல் அல்லது அரித்தல் போன்ற உணர்வு
3. சில நாட்களுக்குப்பிறகு பெருமூளை செயலிழக்கும்
4. பதற்றம், குழப்பம் மற்றும் ஒருவித கிளர்ச்சி போன்ற அறிகுறிகள் தென்படும்.

நாட்கள் செல்ல செல்ல,

1. சித்தப்பிரமை
2. நடத்தையில் மாற்றம்
3. ஜன்னி மற்றும் மயக்கம்
4. தண்ணீரை குறித்த பயம் மற்றும் தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் தென்படும்.

நோயின் கடுமையான காலம் 2 - 10 நாட்களுக்குள் முடிவடைகிறது. ரேபிஸ் வெறிநாய்க்கடிக்கான அறிகுறிகள் தென்படும்போது உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அப்படியே சிகிச்சை அளிக்கப்பட்டாலும் 20க்கும் குறைவானவரே இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாமதம் தாமதமே!

சென்னை அரசு மருத்துவமனைகளில் இதுவரை பதிவான ரேபிஸ் வழக்குகளில், பெரும்பாலான நோயாளிகள் நாய்க்கடித்த 2-3 வாரங்கள் முதல் 2-3 மாதங்களுக்குப் பிறகே சிகிச்சைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலானோர் நாய்க்கடிக்கு பிறகு உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதும் மிகவும் குறைவாக உள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகிறது. அறிகுறிகள் தென்பட்ட பிறகே மருத்துவமனைக்கு வருகின்றனர் என்றும் கூறுகின்றனர். சரியான நேரத்தில் ரேபிஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்வது மரணத்தை தடுப்பதாகக் கூறுகின்றனர் சுகாதார நிபுணர்கள். எனவே நாய்க்கடித்தவுடன் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்வது மரணத்திலிருந்து பாதுகாக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com