'நீண்டகால காத்திருப்பு, தாங்க முடியாத வேதனை' - மோகன்லால் படமும் கேரள திரையரங்க சோகமும்!

'நீண்டகால காத்திருப்பு, தாங்க முடியாத வேதனை' - மோகன்லால் படமும் கேரள திரையரங்க சோகமும்!
'நீண்டகால காத்திருப்பு, தாங்க முடியாத வேதனை' - மோகன்லால் படமும் கேரள திரையரங்க சோகமும்!
Published on

கொரோனா பரவல், பொதுமுடக்கம் காரணமாக கடந்த 18 மாதங்களாக முடங்கி இருந்த நிலையில், மலையாள திரையுலகை மீட்டெடுக்கும் என நம்பப்பட்ட நடிகர் மோகன்லாலின் 'மரக்கையர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்' திரைப்படம் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல், கேரள தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவின் 'மோஸ்ட் வான்டட்' கூட்டணியான மோகன்லால் - பிரியதர்ஷன் கூட்டணியில் உருவான பெரிய பட்ஜெட் படம் 'மரக்கையர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பு நிறுவனமான 'ஆஷிர்வாத்' சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது.

பிரபு, அர்ஜுன் என ஒரு நடிகர் பட்டாளமே இதில் நடித்திருக்கிறது. 2019-ம் ஆண்டே தயாராகிவிட்டாலும், அடுத்தடுத்த கொரோனா பேரலையால் சிக்கி படம் வெளியிட முடியாமல் இருந்து வருகிறது. இதனால் பல கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்படுவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் படத்தின் ரிலீஸ் தொடர்பாக ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, கேரளாவின் ஐக்கிய அமைப்பு மற்றும் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இடையே ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டு ஆகஸ்ட்டில் தியேட்டர்கள் திறந்த பிறகு கேரளாவில் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரத்யேகமாக மூன்று வாரங்கள் 'மரக்கையர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படம் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

திரைப்பட துறையைச் சேர்ந்த தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அடங்கிய கேரளாவின் ஐக்கிய அமைப்பு (FEUOK) மற்றும் கேரள திரைப்பட தயாரிப்பாளர்கள் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மலையாள திரைப்படத் துறையை புதுப்பிக்க ஒருமித்த அடிப்படையில் இந்த முடிவை எடுத்தனர். மூன்று வார காலத்துக்கு வேறு எந்த திரைப்படங்களையும் வெளியிட வேண்டாம் என்றும், கொரோனா தொற்று நிலைமை தணிந்தவுடன் பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு அழைத்துவர ஒரு பெரிய படம் தேவை என்ற அனுமானத்தின் அடிப்படையிலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அப்போது அறிவித்தார்கள்.

ஆனால், சூழ்நிலை அவர்களின் அறிவிப்புக்கு மாறாக நிகழ்ந்தது. ஆகஸ்டில் கொரோனா அதிகமாக நினைத்தது போல் படம் ரிலீஸாகவில்லை. மாதங்கள் தள்ளிப்போன நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்புதான் தியேட்டர்கள் திறக்கப்பட்டது. அதுவும் அரசின் ஆணைப்படி 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே அனுமதி என்பது போன்ற கட்டுப்பாடுகள் காரணமாக, இதுவரை எந்த பெரிய படங்களும் வெளியாகவில்லை. டப்பிங் படங்களே வெளியாகி வருகின்றன. இதனால் தியேட்டர்கள் காத்தாடி வருகின்றன.

இப்படியான நிலையில், 'மரக்கையர்' படம் ரிலீஸ் தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ள கருத்துகள் தியேட்டர் உரிமையளர்கள் மத்தியில் கவலைகளை அதிகப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் நடந்த தேசிய விருது விழாவில், 'மரக்கையர்' படத்துக்கான விருதை வென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆஷிர்வாத் சினிமாஸ் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர், ''இந்தப் படத்துக்காக நிறைய காந்திருந்துவிட்டோம்.

மலையாள சினிமாவில் யாரும் எடுக்காத முயற்சியை நாங்கள் எடுத்தோம். ஆனால், இந்தப் படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்து இரண்டு ஆண்டுகள் மேல் ஆகிவிட்டது. இனிமேலும் காத்திருக்க முடியாது. ஒரு படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் தாங்க முடியாத வேதனையில் இருக்கிறேன். திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதால் இப்போதைக்கு தியேட்டர் வெளியீடு என்பது நினைக்க முடியாத நிலையில் இருக்கிறது. அப்படியே ரிலீஸ் செய்தாலும், 50 சதவீத பார்வையாளர்கள் உடன், மற்ற படங்களுடன் போட்டி போட்டு செலவிட்ட காசை எடுக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி. இது இன்னும் எத்தனை நாளுக்கு தொடரும் என்பதும் தெரியவில்லை.

இப்போது, எதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். இதனால் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். நாங்கள் அமேசான் பிரைமுடன் பேசிவருகிறோம். ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துவிட்டால், தியேட்டர் ரிலீஸ் இருக்காது" என்று வருத்தத்துடன் பேசினார்.

இவரின் பேச்சு கேரள திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ஏற்கெனவே முன்னணி நடிகர்கள் படங்களை வெளியிட தயக்கம் காட்டி வரும் நிலையில், தியேட்டர்களின் பெரிய நம்பிக்கையாக பார்க்கப்பட்டு வருகிறது பெரிய பட்ஜெட் படமான 'மரக்கையர்'. கொரோனா தொற்று நிலைமை தணிந்து வரும்நிலையில், இந்தப் படம் ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு அழைத்து வரும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். ஆனால், இப்போது திடீரென ஓடிடி ரிலீஸ் எனச் சொல்வது தியேட்டருக்கு இப்போது வருபவர்களையும் வரவிடாமல் செய்து விடும் என கவலை கொள்கிறார்கள்.

இதுதொடர்பாக பேசியுள்ள தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அடங்கிய கேரளாவின் ஐக்கிய அமைப்பின் (FEUOK) தலைவர் கே.விஜயகுமார், ''மரக்கையர் ஓடிடி ரிலீஸ் என்ற செய்தியை கேட்டதும் மனமுடைந்து போனேன். கடந்த ஆண்டு ஓணம் சீசனில் படத்தை வெளியிடத் தயாராக இருந்த படத்தின் தயாரிப்பாளர்கள், இப்போது ஏன் இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்கிறார்கள் என்பது புரியவில்லை. மரக்கையர் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எங்கள் சங்கம் நம்புகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பே அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் கெளரவமான டெபாசிட் தொகையை பெற்று திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்கள் இப்போது ஓடிடி வெளியீட்டிற்கு செல்ல முடிவு செய்திருப்பது வருந்தத்தக்கது" என்றுள்ளார்.

இதேபோல் மற்றொரு சங்கத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் பேசுகையில், ''மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால். அவரை போன்றவர்கள் தியேட்டர்கள் மூலமாகவே இவ்வளவு பெரிய உயரத்தை அடைந்துள்ளார்கள். இவர்கள்தான் இப்போது முடங்கியிருக்கும் தியேட்டர் தொழிலை மீட்டெடுக்க உதவ முடியும். அதற்கு மரக்கையர் போன்ற படங்களின் வெளியீடுகள் முக்கியமானது. எனவே இதனை கருத்தில் கொண்டு திரைப்பட தயாரிப்பாளர்கள் முடிவெடுக்க வேண்டும்" என்றுள்ளார்.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com