கேரள நாடாளுமன்ற எம்.பியின் மனைவி எழுதிய புத்தகத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோஸ் மணி. இவர், கேரள காங்கிரஸ் தலைவர் கே.எம்.மணியின் மகன். எம்.பி. மணியின் மனைவி நிஷா ஜோஸ் “தி அதர் சைட் ஆப் திஸ் லைஃப்” என்ற புத்தக்கத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில், ரயில் பயணம் ஒன்றில் தன்னிடம் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டார் என பெயர் குறிப்பிடாமல் கூறியுள்ளார். அதில், “ஒரு ரயில் பயணத்தில் எனக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது. என்னுடன் பயணித்த அந்த நபர் நீண்ட நேரம் என்னிடம் பேசிக்கொண்டே இருந்தார். நான் தூங்க வேண்டும் என நினைத்தேன். இருப்பினும், அவர் பேசுவதை நிறுத்தவே இல்லை. பின்னர், இருக்கையை மாற்றும் போது என் பாதத்தை அவர் மூன்று, நான்கு முறை உரசினார். அப்போது, மிகவும் அறுவெறுப்பாகவும், அத்துமீறல் நடந்ததாகவும் உணர்ந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, “சிலர் நான் இப்படி சொல்வதை ஓவர் ஆக்டிங் என்று கூட சொல்லலாம். அது தெரியாமல் நடந்திருக்கும், மன்னித்துவிட்டு கடந்து சென்றிருக்கலாம் என்று கூறலாம். ஆனால், நள்ளிரவில் தவறாக நடந்து கொள்ளும் பொருட்டே நான்கு முறை நடந்துள்ளது. எவ்வித உள்நோக்கமும் இல்லாமல் சாதாரணமாக தொடுவதற்கும், தவறான எண்ணத்தில் தொடுவதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியும். டிக்கெட் பரிசோதகரிடம் இதுகுறித்து புகார் செய்தேன். ஆனால், டிக்கெட் பரிசோதகர் எனக்கு உதவி செய்ய மறுத்ததோடு, ‘இந்த ஜெண்டில்மேன் அவரது தந்தையைப் போல் அரசியல்வாதியாக இருந்தால், நான் தலையிட முடியாது. நீங்கள் இருவரும் அரசியல் ரீதியாக நண்பர்கள். நான் தலையிட்டு பின்னர் என் தலைமேல் பிரச்னை வந்துவிடும்’ என்று கூறிவிட்டார்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதன் மூலம், தன்னுடன் வந்தவர் ஒரு அரசியல்வாதியின் மகன் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்.
நிஷா ஜோஸ் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், ஷோன் ஜார்ஜ் என்பவர் தன்னைதான் மறைமுகமாக குறிப்பிட்டு எழுதியுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார். ‘யார் தவறாக நடந்து கொண்டார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அவர் சொல்லும் அடையாளங்கள் என்னை குறிப்பதை போல் உள்ளது. தன் மீது தவறு இருப்பதாக அவர் நினைத்தால் போலீசில் புகார் அளிக்க வேண்டும்’ என்று தனது புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். ஷோன் ஜார்ஜின் தந்தை பி.சி.ஜார்ஜ் கேரளாவின் பூஞ்சூர் தொகுதியில் சுயேட்சை எம்.எல்.ஏ. ஷோன் ஜார்ஜ் மீது ஏற்கனவே சரிதா நாயரும் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இந்த விவகாரம் கேரள அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. நிஷா ஜோஸ் மாமனார் கே.எம்,மணி, ஷோன் ஜார்ஜ் தந்தை பி.சி.ஜார்ஜ் இருவரும் கோட்டயம் மாவட்டத்தில் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்களாக உள்ளனர்.