ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் வரலாறு காணாத வறட்சியின் காரணமாக 10 மாதங்களில் 205 யானைகள் பலியாகி இருப்பது சூழலியல் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
கிழக்கு ஆப்பிரிக்கா பகுதிகளில் 40 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலவி வருகிறது. அதில் பிப்ரவரி தொடங்கி அக்டோபர் மாசம் வரை கடுமையான வறட்சி காணப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக யானைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் பலியாகி இருக்கின்றன. ஆப்பிரிக்காவின் வானிலை கணிப்புப்படி இன்னும் கூட கென்யாவில் மழை பொழிவுக்கான சாத்தியங்கள் இல்லாததால் ஏராளமான வன விலங்குகள் மேலும் பாதிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியயையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வறட்சியின் காரணமாக 14 வகையான விலங்குகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசே தெரிவித்திருக்கிறது.
ஆப்பிரிக்க யானைகளின் பலியுடன் சேர்த்து 512 வைல்ட்பீஸ்ட் (wildebeest), 381 வரிகுதிரைகள், 12 ஒட்டக சிவங்கி, 51 காட்டெருமைகள் ஆகியவையும் உயிரிந்து இருக்கின்றன. கென்யாவின் முக்கிய வருமானமே சுற்றுலாதான். வறட்சியும், விலங்குகளின் பலியும் அந்நாட்டு சூழலியல் சுற்றுலாவின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. அதிலும் அழிந்து வரும் இனமாக கருதப்படும் கிரவி வரிகுதிரைகள் (Grevy’s zebra) 49 பலியாகி இருப்பது அந்நாட்டு காட்டுயிர் ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஆனால் கென்யா அரசாங்கம் குறைவான எண்ணிக்கையிலேயே பலி எண்ணிக்கை காட்டிருப்பதாக அந்நாட்டு தன்னார்வ தொண்டு அமைப்பு கூறியிருக்கிறது.
காட்டு விலங்குகள் மட்டுமல்லாமல் அங்குள்ள மாடுகள் அனைத்தும் போதிய தீவனமின்றி உடல் மெலிந்து எலும்புகள் வெளியே தெரியும் அளவுக்கு மோசமான நிலையில் உள்ளன. அவற்றை வைத்து வழக்கமாக வரும் வருமானமும் நின்றுவிட்டதால் மெலிந்துபோன கால்நடைகளை கூட விற்கும் பரிதாப நிலைக்கு அந்த நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். விற்பனைக்கு கொண்டுவரப்படும் மாடுகள் நிற்கக்கூட முடியாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளன. இதனால் கென்யாவின் வருவாய் 10 சதவிதம் பாதிப்படைந்தது மட்டுமல்லாமல் சுமார் 2 லட்சம் மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐக்கிய நாடுகளிலும் கென்யாவின் வறட்சி குறித்து பேசப்பட்டு வருகிறது. மேலும் பணக்கார நாடுகள் கென்யாவுக்கு நிதியளித்து உதவ வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.