கர்நாடக தேர்தல் வெற்றி, காங்கிரஸுக்கு மட்டும் நம்பிக்கை கொடுக்கவில்லை. ஒட்டுமொத்த இந்தியாவுக்கே மாற்றத்தைத் தந்திருப்பதாகப் பேசப்படுகிறது. அதிலும், அம்மாநிலத்தில் அமைச்சராக இருந்த ஒருவரை, அவரது உதவியாளரே வீழ்த்தியிருப்பதுதான் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் 224 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக, கடந்த 10ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. பின்னர், 13ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 113 இடங்கள் மட்டுமே தேவையான நிலையில், 135 இடங்களைக் கைப்பற்றியது.
இதையடுத்து, விரைவில் அக்கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த தேர்தலில் பல சுவாரஸ்யங்கள் நடந்துள்ளன. குறிப்பாக, 12 பாஜக அமைச்சர்கள் தோல்வியுற்றனர். சபாநாயகரும் தோல்வியுற்றார். இதில் அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகரை, அவருடைய உதவியாளரான பிரதீப் ஈஸ்வரே தோற்கடித்திருப்பதுதான் முக்கியமான சுவாரஸ்யமாகப் பார்க்கப்படுகிறது.
அம்மாநில முதல்வராக இருந்த பசவராஜ் பொம்மையின் நம்பிக்கையின் நட்சத்திரமாகவும், வலிமைமிக்க அமைச்சர்களுள் ஒருவராகவும், பாஜகவின் பிரசாரக் குழுத் தலைவராகவும் இருந்தவர், சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர். இவர், நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் சிக்கபல்லாப்பூர் தொகுதியில் போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து இவரிடமே உதவியாளராக இருந்த பிரதீப் ஈஸ்வர் போட்டியிட்டார். இதில், சுதாகர், 10,642 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இது, அம்மாநில அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு பெங்களூருவின் தேவனஹள்ளியில் உள்ள விஜிபுராவை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தியதன் மூலம் ஈஷ்வர் பிரதீப் வெளிச்சத்திற்கு வந்தார். அந்தப் போராட்டம் தோல்வியைத் தந்த நிலையில், 2017ஆம் ஆண்டு சிக்கபல்லாப்பூரில் உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு தொகுப்பாளராக மாறினார், ஈஷ்வர்.
தொடர்ந்து சுதாகருக்கு எதிராக யூடியூப்பில் வீடியோக்களைப் பதிவிட ஆரம்பித்தார். 2018 ஆம் ஆண்டு, போலீஸ் லத்திசார்ஜ் என்று கூறப்படும் ஓர் இளம் காங்கிரஸ் தொண்டர் இறந்த வழக்கை ஈஷ்வர் எடுத்துக் கொண்டதாகவும், இதன்மூலம், அவர் கைதுசெய்யப்பட்டு மேலும் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுதாகருக்கு எதிராக, கே.வி.நவீன் கிரண் என்பவர் சுயேட்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரது ஆதரவை, பலிஜா சமூகத்தைச் சேர்ந்த ஈஸ்வர் பெற்றார். மேலும் அதுவரை காங்கிரஸில் இருந்த சுதாகர், 2019ஆம் ஆண்டு அதிலிருந்து விலகி, பாஜகவுக்கு மாறினார்.
அன்றுமுதல் நவீன் கிரண் மற்றும் ஈஷ்வர் பிரதீப் ஆகியோர் சுதாகரின் வழியில் செல்ல ஆரம்பித்தனர். அதன் விளைவு சுதாகர் உதவியுடன் ஈஷ்வர் பிரதீப், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி அகாடமியை நிறுவினார், அதைத் தொடர்ந்து நடத்தி வருகிறார், ஈஷ்வர். அந்த நிறுவனத்தில் ஈஷ்வரின் மனைவி, ஆசிரியையாக உள்ளார்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 2022 முதல் ஈஷ்வருக்கும் சுதாகருக்கும் இடையே இடைவெளி அதிகரித்தது. அதேநேரத்தில், சுதாகரைப் பின்தொடர்ந்து சென்ற கிரண், பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் துணைத் தலைவரானார். அப்போதுதான் சுதாகருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வலுவான முகத்தைத் தேடத் தொடங்கியதாகவும், அது ஈஷ்வரை அடையாளம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
அதற்குக் களம் அமைக்கும் வகையில், கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்ட சிக்கபல்லாபூர் உத்சவ் போன்ற நிகழ்வுகளில் சுதாகர் பங்கேற்று, பணத்தை வாரி இறைத்தார். அப்போது சிலர், இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது’ எனக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். அதிலும் ஒருசில பாஜக தொண்டர்கள், ஆதாரங்களை அளித்து, ஈஷ்வருக்கு உதவினர்.
இந்த வீடியோக்கள் தீயாய் வைரலானதுடன், சுதாகருக்கு எதிராகவும் திரும்பின. மேலும், ஈஷ்வர் வெளியிட்ட வீடியோக்கள் காங்கிரஸ் தலைமையையும் கவரச் செய்தது. இதையடுத்தே, காங்கிரஸின் வேட்பாளரானார் ஈஷ்வர் பிரதீப். இது, தாம் தீட்டிய கத்தியை, தனக்கு எதிரே அனுப்பியதாக சுதாகர் தரப்பில் சொல்லப்பட்டது. என்றாலும், ஈஷ்வரை வீழ்த்துவதற்கு சுதாகர், தம்முடைய செல்வாக்கைப் பயன்படுத்தினார்.
அதாவது, சுதாகர் தனது பிரசாரத்திற்காக கிச்சா சுதீப் மற்றும் தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம் போன்ற பிரபலங்களை அழைத்து வந்து வாக்கு சேகரித்தார். ஆனால் ஈஷ்வரோ, தன்னுடைய பேச்சுகளால் மட்டுமே வாக்காளர்களைக் கவர்ந்ததாகக் கூறப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தின்போது, ”நான் ஓர் அனாதை, என்னிடம் பணம் எதுவும் இல்லை” என்று உண்மையைக் கூறி வாக்கு சேகரித்ததாகவும், இது வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அதிலும், ”டாக்டர் வேட்பாளரையா அல்லது பல டாக்டர்களை உருவாக்கும் வேட்பாளரை ஜெயிக்கவைக்கப் போகிறீர்களா” என அவர் வாக்கு கேட்டதாகவும் வாக்காளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆக, இந்த தேர்தலில் ஈஷ்வர், தன்னுடைய பேச்சாலேயே வாக்காளர்களைக் கவர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதன் விளைவு, சுதாகரை 10,642 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார், ஈஷ்வர் பிரதீப். இவருக்கு பெற்றோர் யாரும் இல்லை என்றும், இவர் ஓர் அனாதை என்றும் சொல்லப்படுகிறது.