தென்னிந்திய சினிமா துறையையும், பாலிவுட் சினிமா துறையையும் ஒப்பிட்டு நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார். அதில் பாலிவுட்டை நச்சு மிகுந்த இடம் என்று தெரிவித்திருப்பது மீண்டும் சலசலப்புக்கு வித்திட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே சினிமா துறையில் நெப்போட்டிஸம் பரபரப்புக்குரிய பேச்சாக இருக்கிறது. அதிலும், பாலிவுட்டில் நெப்போட்டிஸம் குறித்த சர்ச்சை ஓயவே ஓயாது போல் இருக்கிறது. நடிகை கங்கனா ரனாவத் இந்த விஷயத்தை பற்றி பேசியவர்களில் முக்கியமானவர். இயக்குநர் கரண் ஜோஹர்தான் பாலிவுட்டில் நெப்போட்டிஸத்தை ஊக்குவித்து வருகிறார் என்று குற்றம்சாட்டி, அதை சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாக மாற்றினார் கங்கனா. அதன்பிறகே பாலிவுட்டில் நெப்போட்டிஸம் தீ வெகுவாக பற்றிக்கொண்டது.
அப்போது இருந்து இப்போதுவரை கரண் ஜோஹர் மற்றும் முழு இந்தித் திரைப்படத் துறையுடனான கங்கனாவின் சண்டை முடிவடையவில்லை. ஒட்டுமொத்த பாலிவுட் சினிமா துறையையும் அவ்வப்போது வசைபாடி வருகிறார். பாலிவுட்டின் பெரிய நடிகர்கள் பல சமயங்களில் நியாயமற்றவர்களாக இருக்கிறார்கள் என இதற்கு முன்பு பலமுறை குற்றம்சாட்டி இருக்கிறார். சமீபத்தில் மீண்டும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பாலிவுட் மீது வீசியிருக்கிறார் கங்கனா.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட `தலைவி' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு மீண்டும் வரும் கங்கனா, அதற்கான புரோமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அதன்படி ஒரு நேர்காணலில், தென்னிந்திய சினிமாவை இந்தி திரைப்படத் துறையுடன் ஒப்பிட்டு பேசியவர், " பாலிவுட் அன்பும், உணர்ச்சியும் இல்லாத ஒரு நச்சு இடம்" என்று கூறினார்.
"பாலிவுட்டில் உள்ள பன்முகத்தன்மை அதை நச்சுத்தன்மையாக்குகிறது. பாலிவுட் சினிமாவுக்காக மும்பைக்கு குடிபெயர்ந்ததால், அங்கு பலதரப்பட்ட தன்மை உள்ளது. ஆனால், எப்போதும் கொஞ்சம் பதற்றம் இருக்கும். மேலும், அங்கு எல்லோரும் எல்லோரையும் கீழே இழுக்க விரும்புகிறார்கள். அன்பு இல்லாத, நட்பு உணர்வு இல்லாத, இரக்க உணர்வு இல்லாத ஓர் இடமாக பாலிவுட் இருக்கிறது. அந்த இடம் எவ்வளவு நச்சுத்தன்மையுடையதாக இருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும்.
அதேசமயம் தென்னிந்திய சினிமா மேலும் மேலும் உயர்ந்து வருகிறது. மேலும் மக்கள் ஒருவருக்கொருவர் மிகவும் அற்புதமாக இருக்கிறார்கள். இது அப்படியே இருக்கும் என்று நம்புகிறேன். இங்கு வரும் பலர் அதை அழிக்க வேண்டாம்" என்று பேசிய கங்கனா பாலிவுட்டை ‘தி கிரேட் வால் ஆஃப் சைனா ஆஃப் இண்டஸ்ட்ரி’ என்று அழைத்தார். மேலும் தான் `டூ-ஆர்-டை’ (செய்துமுடி அல்லது செத்துமடி) மனப்பான்மையோடு, பாலிவுட்டில் போராடியதால் இந்த எல்லைகளை மீறி வெற்றிபெற முடிந்தது என்றுள்ளார்.
- மலையரசு