சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் எனத்தொடங்கும் கந்தசஷ்டி கவச பாடலை கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்தப் பாடலின் வரிகளின் தொடர்ச்சியாக தலையின் முடி தொடங்கி கால் பாதங்கள் வரை ஒவ்வொரு உறுப்பாக விவரித்து அதனை வேல்கள் காக்க என்று வேண்டுவதாக பாடல் இருக்கும். இந்தப் பாடல்களில் ஒவ்வொரு உறுப்பையும் காக்க சொல்வது குறித்து கேலிசெய்தும், விமர்சனம் செய்தும் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் வெளிவந்த காணொளி கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த காணொளிக்கு உருவாகியுள்ள எதிர்ப்புகளால் அக்காணொளியை வலையொளியின் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளனர். மேலும் இந்த வலையொளி நிர்வாகிகள் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.
கந்த சஷ்டி கவச பாடலில் ஒவ்வொரு உறுப்பையும் குறிப்பிட்டு காக்கவேண்டும் என்ற வகையில் இடம்பெற்ற வரிகள் விமர்சிக்கப்பட்டது குறித்து பேசும் ஆன்மீக செயற்பாட்டாளர் இறைநெறி இமயவன் “ உடலை வளர்த்தேன், உயிர்வளர்த்தேன் என்பதே திருமூலர் வாக்கு. அதனால் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் நலமுடன் இருந்தால்தான், உடல் வளமுடன் இருக்கும். அதுபோலவே கந்த சஷ்டி கவசத்தில் ஒவ்வொரு உறுப்பும் நலமுடன் இருக்க வேண்டும் என்று வேண்டுதல் வைக்கப்படுகிறது, இதில் என்ன ஆபாசம் இருக்கிறது. நமக்கு சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு என்றால் இன்ன பாதிப்பு என்று ஒவ்வொரு உறுப்புக்கும் தானே சிகிச்சை எடுக்கிறோம்.
அதுபோல உடல் உறுப்பு பாதிப்புடன் கோவிலுக்கு சென்றால் எனக்கு கைவலியை போக்க வேண்டும், கால்வலியை நீங்கவேண்டும், கண்வலி குணமாகவேண்டும் என்றுதானே வேண்டுகிறோம். இதிலெல்லாம் என்ன ஆபாசம் இருக்கிறது. ஆண்குறி, பெண்குறி உள்ளிட்ட அனைத்துமே உடலின் உறுப்புகள்தானே அதிலென்ன ஆபாசம் இருக்கிறது என்று இவர்கள் விமர்சனம் செய்கின்றார்கள். இவர்களின் சிந்தனையில் குறைபாடு இருக்கிறது, அதனால்தான் பார்க்கும் அனைத்தும் ஆபாசமாக தெரிகிறது. இந்துத்துவாவை எதிர்ப்பதாக சொல்லி தமிழர் சமயத்தை அழிப்பதே இவர்களின் வேலையாக உள்ளது, இது மறைமுகமாக இந்துத்துவா சக்திகளுக்கே உதவி புரியும்.” என்கிறார் வருத்தத்துடன்.