மனித மனம் மிகவும் சிக்கலானது, பிண்ணப்பட்டுக் கிடக்கும் ஹெட்ஃபோன்களின் ஒயர்களைப்போல. தேவையான தருணங்களில் சிக்கியே கிடக்கும். பார்க்கவே கடுப்பாகும். காலத்தை முதலீடாக்கி பக்குவத்துடன் அணுகினாலே சிக்கல்களைத் தீர்த்துவிட முடியும். ஆனால், அதுதான் ஆகப்பெரும் கஷ்டமே! இந்த முயற்சிகள் மீண்டும் மீண்டும் தோல்வியடையும்போது, 'ஹெட்போனே வேணாம்' என தோன்றும் மனநிலையை ஒத்ததுதான் மனித உறவுகள். அப்படியான மனித மனச் சிக்கல்களுடன், திட்டுத்திட்டாய் விரவிக்கிடக்கும் அன்பின் ஆகிருதிகளை ஒன்று சேர்க்கத் துடிக்கும் உணர்வு போராட்டம்தான் 'காணேக்காணே' (Kaanekkaane).
தனது மனைவியின் இறப்புக்குப் பிறகு மறுமணம் செய்துகொள்ளும் கணவன்; மகளை இழந்துவாடும் தந்தை; மறுமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியின்றி வாழும் பெண் என மூன்று பேருக்கும் இடையே நிகழும் உறவுச் சிக்கல்கள்தான் 'காணேக்காணே' திரைப்படம். ஐந்து கதாபாத்திரங்களைச் சுற்றியே படம் முழுக்க நகர்கிறது. கதாபாத்திர தேர்வு பக்காவாக பொருந்தியிருக்கிறது. குறைந்த பட்ஜெட், விரல்விட்டு எண்ணக்கூடிய கதாபாத்திரங்கள், குறிப்பிட்ட சில லோகேஷன்களுக்குள் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அன்பன் டோவினோ தாமஸுடன் சுராஜ் இணைந்து கலக்கியிருக்கும் இந்தப் படம் மலையாள சினிமாவின் மைல்கல். எந்தவித முன்முடிவும் இல்லாமல் தைரியமாக ஓடிடியில் வெளியாகும் மலையாள சினிமாவை உங்களால் பார்த்துவிட முடியும். அது எந்த ஜானராக இருந்தாலும் சரி. அந்தப் படம் உங்களின் எண்ண ஓட்டத்தை பதம் பார்க்கும். உங்கள் சிந்தனைகளை தடுமாறச்செய்யும். இலையிலிருந்து விடுபடும் வெண்ணெயைப்போல வழுக்கிக்கொண்டே உணர்வுகளுக்குள் கலந்துவிடும் வல்லமைகொண்டவை மல்லு சினிமாக்கள்!
'காணேக்காணே' திரைப்படமும் அப்படித்தான். விவரிக்கும் அளவுக்கு பெரிய கதையெல்லாம் இல்லை. சொல்லப்போனால் ஒரு பேருந்து டிக்கெட்டுக்கு பின்னால் மொத்தக் கதையையும் எழுதிவிடமுடியும். ஆனால், படம் ஏற்படுத்தும் தாக்கம் அபரிவிதமானது. குற்ற உணர்ச்சி மனித வாழ்வியலின் ஆகப்பெரும் தண்டனை. அதை சுமந்துகொண்டு திரிவது பெரும் சாபம். குற்ற உணர்ச்சியும் அது ஏற்படுத்தும் தாக்கமும், ஊடாக ஓடும் அன்பும் மனித உறவுகளை படுத்தும் பாடுதான் ஒட்டுமொத்த படமும். படத்தில் ஒவ்வொருதருக்குள்ளும் ஒரு நியாயம் இருக்கிறது. மற்றொருவர் தரப்பில் நின்று அந்த நியாயங்களை விசாரணைக்குள்ளாக்கும்போது அது அநியாயத் தராசில் கணத்துவிடுகிறது. அவரவர் பக்க நியாயங்களை சற்றே புரிந்துகொள்ள சொல்கிறது 'காணேக்காணே'.
ஒட்டுமொத்த படத்தையும் ஒரே ஆளாக நின்று தாங்குகிறார் சுராஜ் வெஞ்சரமூடு. கோபம், அன்பு, ஆற்றாமை, அழுகை என தனித்தனியே பிரித்து மேய்கிறார். அவருக்கு பெரிய அளவில் டயலாக் இல்லை. எல்லாவற்றையுமே உணர்ச்சியிலேயே கடத்துகிறார். டோவினோ தாமஸுக்கும் அப்படித்தான். மென்சோகத்துடன் எதற்கும் பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாத கதாபாத்திரம். அத்தனை கச்சிதமாக காட்சிக்கு எது தேவையோ அதை வழங்கியிருக்கிறார். நீண்ட தாடி, ஹெர்பேண்ட்டின் உதவி தேவைப்படும் அளவுக்கு முடி என வித்தியாசமாக இருக்கிறார். ஐஸ்வர்ய லட்சுமி நன்றாகவே நடித்திருக்கிறார். ஸ்ருதி ராமசந்திரன் படத்தின் சில காட்சிகளில் வந்தாலும் நிறைவைத் தருகிறார்.
'சோனி லிவ்' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை 'உயரே' படத்தை இயக்கிய மனு அஷோகன் இயக்கியுள்ளார். 'உயரே' படத்தின் எழுத்தாளர்களான பாபி சஞ்சய்தான் இந்தப் படத்தின் கதையையும் எழுதியுள்ளனர். அதே கூட்டணி இந்தப் படத்துக்கும் சிறப்பாக பொருந்திருக்கிறது. படத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்று எடிட்டிங். நான் லீனியர் முறையில் அவ்வளவு அழகாக கோர்த்து காட்சியாக்கிருக்கிறார் எடிட்டர் அபிலாஷ் பாலசந்திரன். ஒட்டுமொத்த ஃப்ளாஷ்பேக் காட்சிகளையும், படத்தின் நடுநடுவே தேவையான இடங்களில் பொருத்தி முழுமையாக்கியிருக்கிறார்.
கதையின் முடிச்சை ஒவ்வொன்றாக அவிழ்த்து, பார்ப்பவர்களுக்கு புரியவைத்த விதத்தில் அவருக்கு பாராட்டுகள். அதேபோல இசையும் படத்தின் உயிரோட்டம். படத்தின் மூட்-ஐ பிசகாமல் அப்படியே பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கும் விதத்தில் கவனம் ஈர்க்கிறார் ரஞ்சின் ராஜ். ஃப்ரேம் பை ஃப்ரேம் ஆக அல்பி ஆண்டனியின் ஒளிப்பதிவு நினைவில் நிற்கின்றது.
படத்தில் வரும் சின்னச் சின்ன காட்சிகள் ரசிக்க வைக்கிறது. ஒரு காட்சியில் சுராஜ் அழுதுகொண்டிருப்பார். சுராஜுக்கு பக்கத்திலிருக்கும் முகமறியாத ஒருவர் அவரின் தோளில் கை வைத்து மெதுவாக தட்டிக்கொடுப்பார். அவர் பேசியிருக்கவும் மாட்டார். வார்த்தைகளை உதிர்த்திருந்தால் கூட காட்சி கடத்தும் கனம் குறைந்திருக்கும். வெறும் உடல்மொழியிலேயே உணர்வுகளை கடத்தியிருப்பார்கள்.
அந்த காட்சி அத்தனை ஆழமானது. உங்களுக்கு பரிட்சயமான ஒருவர் உங்களின் எல்லா துன்பங்களுக்கும் காரணமாக இருக்கும்போது, நீங்கள் வாழ்வில் ஒடிந்துபோக தேவையில்லை. உங்கள் மீது அன்பு செலுத்த யாரோ ஒருவர் இந்த உலகில் இன்னும் ஜீவித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள் என்பது போல அவ்வளவு அழகான காட்சி அது... ஆம், உண்மையில் உலகில் யாரோ ஒருவர் நம்மை நேசிக்க இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள்!
-கலிலுல்லா